அனைத்துத் தொழிற்சங்க கூட்டுக்குழு வலியுறுத்தல்
திருச்சி, டிச,14– திருவெறும்பூர் அருகே உள்ள ஒன்றிய பொதுத்துறை நிறு வனமான பெல் நிறு வனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்ப்பவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் பெல் முதன்மை வாயில் (மெயின் கேட்டு) முன்பு வாயிற் கூட்டம் நேற்று (13.12.2026) நடைபெற்றது.
திருவெறும்பூர் அருகே ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வந்தனர் இதில் பல தொழிலாளர்கள் ஓய்வு பெற்று விட்டனர். சில தொழிலாளர்கள் இறந்து விட்டனர். “
இந்நிலையில் தற்பொழுது சுமார் 500 தொழிலாளர்கள் மட்டும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் நீண்ட நாள்களாக தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்டங்களாக திராவிடர் தொழிலாளர் கழகம் உள்ளிட்ட பல சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதில் பெல் நிறுவனம் அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை. இதனை தொடர்ந்து திராவிடர் தொழிலாளர் கழகம் சார்பில் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்தி வந்தது.
அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த டிச. 5 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றம் சம்பந்தப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் நான்கு மாதத்தில் பெல் நிர்வாகம் பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு உரிய அனைத்து பலன்களையும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதனை உடனடியாக அமல்படுத்த கோரி நேற்று (டிச.13) காலை 7.30 மணியளவில் பெல் நிறுவனத்தின் முதன்மை வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்க கூட்டுக்குழு சார்பில் வாயிற் விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பெல் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.முத்துக்குமார் தலைமை வகித்தார்.பெல் வளாக ஒப்பந்த தொழிலாளர் நலச்சங்க பொதுச் செயலாளரும் திராவிடர் தொழிலாளர் கழக மாநில செயலாளருமான மு.சேகர் முன்னிலை வைத்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர் கி.தீபன் சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் செல்வராஜ், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் உத்திராபதி, அம்பேத்கர் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் கணபதி, டெமாக்ரடிக் டிரேட் யூனியன் பொதுச் செயலாளர் லோகநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் இ.இராமர், சி.அய்டியு பொதுச் செயலாளர் இரா. பரமசிவன், பிஎம்எஸ் பொதுச் செயலாளர் ஜெயராமன், அய்என்டியுசி பொதுச் செயலாளர் அலெக்ஸ், அண்ணா தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வில்லியம் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டு பெல் நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை கால தாமதப்படுத்தாமல் உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உரையாற்றினார்கள். நிறைவாக சிஅய்டியு சங்கத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் நன்றி கூறினார்.
கூட்டத்தில் பெல் திராவிடர் தொழிலாளர் கழகத்தின் சிறப்புத்தலைவர் ம.ஆறுமுகம், காட்டூர் கிளைக்கழகத் தலைவர் அ.காமராஜ் உள்ளிட்ட கழகத் தோழர்களும் பெல் தொழிலாளர்கள் சங்கங்களின் பொறுப்பாளர்களும் பெல் ஒப்பந்த ஊழியர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
