தினமலரின் வளைதளப் பதிவு ஒன்றில் 1967இல் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவில்லை. 1966லேயே ‘தமிழ்நாடு’ பெயரில் அரசு கல்வெட்டு உள்ளது என்று திருநெல்வேலி அரசு கல்லூரி கல்வெட்டு ஒன்றைக் காட்டியுள்ளது.
தினமலரின் பித்தலாட்டத்தை ஒரு ‘குட்டி ஸ்டோரி’யில் தெரிந்து கொள்வோம்.
‘தமிழ்நாடு’ என்று சங்கம் தொடங்கி பல இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது. பத்திரிகை கூட இருந்தது. ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பெரியார் முழங்கியிருந் திருக்கிறார். தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கையை பெரியார் உள்பட திராவிட இயக்கத் தலைவர்கள் எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று 1956இல் சங்கரலிங்கனார் உண்ணாநிலையில் இருந்து இறந்து போனார். 1957இல் முதன்முறையாக சட்டமன்றத்தில் நுழைந்த திமுக, தமிழ்நாடு என்று பெயர் சூட்ட தீர்மானம் கொண்டு வந்தது. ஆனால் அது தோற்கடிக்கப்படுகிறது.
பின்பு 1961இல் சோசலிசக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை அவர்கள் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டு வருகிறார். ஆளும் கட்சியின் ஆதரவைக் கேட்கிறார். ஆனால் முதலமைச்சர் காமராஜர் அந்த தீர்மானம் குறித்த விவாதத்தை ஒரு மாதம் தள்ளிப் போடுகிறார். இதனைக் கண்டித்துச் சட்டமன்றத்தை மூன்று நாள் புறக்கணிப்பதாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்பு ஒரு மாதம் கழித்து வந்த போதும் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்படுகிறது. கொந்தளிப்பான சூழலில் தான் சமாதான நடவடிக்கையாக, நிதி அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்கள், 1961 பிப்ரவரி மாதம் “தமிழ்நாடு என்று தமிழில் மாநிலத்திற்கு உள்ளே பயன்படுத்தலாம். ஆங்கிலத்திலும், மாநிலத்திற்கு வெளி யேயும் ‘மெட்ராஸ் மாகாணம்’ என்று பயன் படுத்தலாம். இதற்காக அரசியலமைப்புச் சட்டத்தை திருத்த வேண்டியதில்லை” என்றார்.
அதன்படி தான் இந்தக் கல்வெட்டில் ‘தமிழ்நாடு‘ என்று பொறிக்கப்பட்டுள்ளது. அதற்காகத் தமிழ்நாடு என்று மாறிவிட்டதாக அர்த்தமில்லை. சி.சுப்பிரமணியம் அவர்கள் சொன்னதைப் போல அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான் பெயர் மாறும். அதை செய்தவர் பேரறிஞர் அண்ணா.
1967இல் ஆட்சிக்கு வந்தவுடன் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுகிறார். 1968 நவம்பர் மற்றும் டிசம்பரில், அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு, நாடாளுமன்ற இரு அவையிலும் வெற்றிகரமாக நிறை வேற்றப்பட்டது. ஜனவரி 14, 1969இல் பேரறிஞர் அண்ணா அதை அரசிதழில் வெளியிட்டு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் மாற்றத்தை உறுதிபடுத்தினார்.
ஆக ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் அண்ணா தான். வாய் மொழியில் உள்ளூரில் மட்டும் பயன்படுத்தலாம் என்ற அடிப்படையில் கல்வெட்டு பொறிக்கப்பட்டதற்காகவே தமிழ்நாடு என்று சூட்டப்பட்டதாக ஆகாது.
வரலாற்றை மாற்ற, தன் நூலளவு வேலையை தினமலர் செய்ய வேண்டாம். அது தமிழ்நாட்டில் நடக்காது.
தமிழ்நாடு வாழ்க!
தந்தை பெரியார் வாழ்க!
பேரறிஞர் அண்ணா வாழ்க!
பதிவு: யாசிர், ஒய்.எம்.,
ஒப்பீனியன் தமிழ் யூடியூப்
