இன்று தோழர் சி.டி. நாயகம் நினைவு நாள் – 13.12.1944.
சி.டி. நாயகம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் மிக முக்கியமான தளபதிகளுள் ஒருவர் மற்றும் பகுத்தறிவு கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
சர். பிட்டி. தியாகராயரின் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தில் பற்றுக்கொண்டு, அதன் மூலம் சமுதாய மறுமலர்ச்சி படைக்கப் பாடுபடும் தந்தை பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
சி.டி. நாயகம் அவர்கள் பகுத்தறிவுக் கொள்கை களைப் பின்பற்றுவதில் உறுதியாக இருந்தார். அவ ருடைய முக்கியக் குறிக்கோள்கள் பின்வருமாறு:
மூட நம்பிக்கைகளை உடைத்தல்: அர்த்தமற்ற சடங்குகள், ஜோதிடம், நாள், நட்சத்திரம் பார்ப்பதில் உள்ள முட்டாள்தனம் போன்ற மூட நம்பிக்கைகளை கடுமையாக எதிர்த்தார். பெண்களின் உரிமைக் களுக்காகப் போராடினார்.
பின்தங்கிய மக்களின் கல்விக்காக உழைத்தார். தனது சேமித்த பொருளைக் கொண்டு கல்விக்கூடங்களை அமைத்து மக்களுக்குப் பயன்படச் செய்தார். தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பராகவும், தீவிரத் தொண்டராகவும் விளங்கினார். பெரியாரின் கருத்துக்களை விளக்கி, அதற்கு ஆதாரங்களையும் திரட்டி, பல சுயமரியாதைத் திருமணங்களை தலைமை தாங்கி நடத்தினார். இந்தத் திருமணங்கள் பகுத்தறிவுடனும், சிக்கனத் துடனும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 1938-ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தலைமைப் பொறுப்பேற்று நடத்திய வரலாற்றுச் சிறப்பு இவருக்கு உண்டு. இப்போராட்டத்திற்காகச் சிறைவாசம் அனுபவித்தார்.
இவர் கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளர் போன்ற உயர் பதவிகளை வகித்துள்ளார். அரசுப் பணியில் இருந்தபோதும் பார்ப்பனர் அல்லாதார்களைக் கைதூக்கிவிட்டதில் முக்கியப் பங்காற்றினார். சி.டி. நாயகம் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாக, பகுத்தறிவுக் கொள்கைகளைச் சமுதாயத்தில் பரப்பவும், மூட நம்பிக்கைகளை ஒழிக்கவும், ஒடுக்கப்பட்டோரின் கல்விக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர்.
25.1.1933 இல் கோயம்புத்தூரில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டுக்குத் தலைமையேற்குமாறு சி.டி. நாயகம் அவர்களின் இணையர் சிதம்பரத்தம்மாளை முன்மொழிந்து தந்தை பெரியார் கூறிய கருத்து வருமாறு:
“தோழர் நாயகமும், அவரது குடும்பத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகவும் எவ்வளவு தொண்டு செய்துள்ளனர்! இவர்களுடைய தொண்டினை அறிய விரும்புகிறவர்கள் தோழர் நாயகத்தைப் பற்றி சட்டமன்றத்தில் தோழர் சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனரும், அவரது அடிமைகளாகிய சில பார்ப்பனரல்லாத சட்டமன்ற உறுப்பினர்களும் பேசிய பேச்சுகளையும், கேட்ட கேள்விகளையும் படித்துப் பார்த்தால் தெரியும். தோழர் நாயகம் அவர்கள் தனது அரசுப் பதவியைப் பெரிதாகக் கருதி இருந்தால் இன்னும் 4, 5 ஆண்டுகள் பணியில் இருந்திருக்கக் கூடும். ஆனால், வேலையையும் விட்டுவிட்டு நமது இயக்கத்திற்காகக் குடும்பத்துடன் தொண்டு செய்து வருகின்றார்.
தோழர் நாயகம் அவர்கள் திருநெல்வேலி சைவவேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், இவர் குடும்பத்தைப் பொறுத்தவரை பல காலமாகவே ஜாதி வேறுபாடுகள் இல்லை. கைம்பெண்கள் (விதவைகள்) பலருக்குச் சுயமரியாதைத் திருமணத்தைச் செய்து வைத்திருக்கிறார்கள். சுயமரியாதை மாநாடு எங்குக் கூடுவதாகச் செய்தித்தாள்களில் பார்த்தாலும், அழைப்பிதழ் இல்லாமலேயே போய்விடுவார்கள்.” தொழர் சி.டி நாயகம் உடல் நலக்குறைவால் 13.12.1944 அன்றுமரணமடைந்தார்.
