தேசிய கல்விக் கொள்கை 2020 இன் கீழ், பல்கலைக்கழக மானியக் குழு உயர் கல்வி நிறுவனங்களில் மூன்றாவது மொழியைக் கட்டாயம் சேர்க்கவேண்டும் என்ற திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது
இந்த அறிவிப்பு, மும்மொழிக் கொள்கையை நேரடியாக கட்டாயமாக்குவது அல்ல, மாறாகப் பல மொழிகளைக் கற்பதை ஊக்குவிக்கும் ஒரு முயற்சி என்று கூறியுள்ளது. மேலும் பொறுத்தமற்ற காரணங்களையும் கூறுகிறது ஒன்றிய அரசு.
நோக்கம் பல மொழிகளைக் கற்பதை மேம்படுத்துதல், கலாச்சார நல்லிணக்கத்தை வளர்ப்பது மற்றும் இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல்.
உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு கூடுதல் இந்திய மொழியைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் முக்கிய இலக்காகும்.
மாணவர்கள் தங்கள் தாய்மொழி, உள்ளூர் மொழி அல்லது ஏற்ெகனவே படித்த மொழியைத் தவிர, ஒரு கூடுதல் இந்திய மொழியைக் கற்க ஊக்குவிக்கப்படுவார்கள். இது பெரும்பாலும் வேறு மாநிலத்தில் அல்லது வட்டாரங்களில் பேசப்படும் மொழியாக இருக்கலாம்.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் அமைக்கப்பட்ட ‘பாரதிய பாஷா சமிதி’ இந்த வழி காட்டுதல்களை உருவாக்கியுள்ளது.
உயர் கல்வி நிறுவனங்கள், திறன் மேம்பாட்டுக் கல்விப் பிரிவுகளின் கீழ் அடிப்படை, இடைநிலை மற்றும் மேம்பட்ட படிப்புகளை வழங்கலாம். மாணவர்களின் பின்னணிக்கு ஏற்ப இணையவழி (ஆன்லைன்) படிப்புகளையும் நிறு வனங்கள் வழங்கலாம்.
மூன்று இந்திய மொழிகள் வரை கற்பிக்க அனுமதிக்கப்படுகிறது—அதில் ஒன்று உள்ளூர் மொழியாகவும், மற்ற இரண்டு 22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளில் இருந்தும் இருக்கலாம்.
ஒரு மாணவர் வேறு மாநில மொழியைக் கற்கும் போது, அந்தப் பண்பாட்டைப் பற்றிய ஆழமான புரிதலையும், பிராந்திய தடைகளை உடைப்பதையும் ஊக்குவிக்கிறது.
பல மொழிகளில் புலமை பெறுவது வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் வெவ்வேறு மாநிலங்களில் உயர் கல்விக் கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று யுஜிசி கருதுகிறது.
பல மொழிகளைக் கற்பது தேசிய ஒருமைப்பாடு, கலாச்சார ஒற்றுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு பங்களிக்கும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020-இன் ஒரு பகுதியாக மும்மொழிக் கொள்கை தொடரும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. எனினும், இதில் அதிக நெகிழ்வுத்தன்மை இருக்கும் என்றும், எந்த மொழியும் எந்த மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்றும் ‘நளினமாக’ ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கல்வி என்பது இந்திய அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் இருப்பதால், அந்தந்த மாநில அரசுகளுக்கு நடைமுறைப்படுத்துவதற்கான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நீண்ட காலமாக இரண்டு மொழி (தமிழ் மற்றும் ஆங்கிலம்) கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன.
யுஜிசி உயர் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு வலியுறுத்தல் என்ற வடிவில் வந்துள்ளது, இது ஒரு கட்டாயச் சட்டம் அல்ல என்று கூறப்பட்டுள்ளது. இதே போல் 2023 ஆம் ஆண்டு சமஸ்கிருதம் ஒரு பாடமாக சேர்க்க அறிவுறுத்தப் பட்டது. ‘கட்டாயமில்லை’ என்று கூறிக்கொண்டே சமஸ் கிருதம் கற்றுத்தரும் கல்லூரிகளுக்கு சலுகைகள் மற்றும் சிறப்புத் தகுதி புள்ளிகளை யுசிஜி வழங்கியது. அதாவது மறைமுகமாக சமஸ்கிருத்தத்தை அனைத்துக் கல்லூரிகளிலும் கற்றுத்தரவேண்டும் என்பதே அதன் நோக்கம் ஆகும்.
அதே போல் கல்லூரிகளில் மூன்றாவது மொழி கட்டாயமில்லை என்று வெளிப்படையாக கூறினாலும் அதன் விதிகளில் மூன்றாவது மொழியைக் கற்றுத்தரும் கல்லூரிகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுவதாகவும் மறைமுக அறிவிப்புகள் உள்ளன.
மகாராட்டிராவில் ‘மும்மொழிக்கொள்கை கட்டாயம்’ என்று கூறி அங்கு ஹிந்தி அல்லாத மொழிகளைக் கற்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் அங்கு எல்லை மாநிலங்களின் மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி ஆசிரியர்கள் இல்லை என்றும் ஹிந்தியைத் தவிர இதர மொழிகளைக் கற்க பிள்ளைகள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறி பிற பிராந்திய மொழிகள் என்ற போர்வையில் ஹிந்தியைக் கட்டாயமாக்கியது.
இந்த நிலையில், அந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் அடுத்து, அங்கு துவக்கப்பள்ளிகளில் மும்மொழி கட்டாயம் என்ற நடைமுறை தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மகாராட்டிராவில் உள்ள தனியார் பள்ளிகளில் ஹிந்தியை கட்டாயப்பாடமாக்கி உள்ளார்கள்.
கல்வி என்பது ஒன்றிய அரசின் அதிகாரத்திற்கும் மட்டும் உரியதானதல்ல; ஒத்திசைவுப் பட்டியலில்தான் உள்ளது. ஆயினும் மாநில அரசுகளின் கருத்தைக் கேட்டு தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்படவில்லை. ஒன்றிய பிஜேபி அரசு திணிக்கும் இந்தத் தேசியக் கல்வித் திட்டத்தை ஏற்காத மாநில அரசுகளுக்கு பல வகையிலும் ஒன்றிய அரசு மாநில அரசுக்கு அளித்துத் தீர வேண்டிய நிதியை அளிக்காதது – ஜனநாயக விரோதமானது – அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது!
நடப்பது பாசிசஆட்சியே என்பதை நாளும் பா.ஜ.க. ஒன்றிய அரசு துல்லியமாக நிரூபித்து வருகிறது.
மாநில அரசுகள் ஒன்றிய பிஜேபி அரசை எதிர்த்துப் போர்க் கொடி உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
