மதுரை, டிச.9 கடந்த 22.11.2025 அன்று காலை 11 மணி அளவில் ‘விடுதலை’ முகவர் மசு. மோதிலால்– கவுசல்யா, மணிகண்டன் – இலக்கியா, மதிவாணன் – சுகுணா தேவி குடும்பத்தினரின் தந்தை பெரியார் இல்லத்தைத் கழகத் துணைப் பொதுச்செயலாளர் சேமெ.மதிவதனி ரிப்பன் வெட்டி அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவுக்கு வருகை தந்த அனைவரையும் மோதிலால் – கவுசல்யா குடும்பத்தினர் வரவேற்றனர். நிகழ்வின் முதல் நாளே மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் தனி உதவியாளர் எம்.முரளிதரன் இல்லத்திற்கு வருகை தந்து வாழ்த்துகளை வழங்கினார். இல்லத்தினை அறிமுகம் செய்த நிகழ்ச்சியில் வாழ்த்தரங்கம் நடைபெற்றது. தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். மாவட்ட தலைவர் அ.முருகானந்தம் வழக்குரைஞர் நா. கணேசன், மாவட்டச் செயலாளர் இராலீ.சுரேஷ் ஆகியோர் உரையாற்றினர்.
பகுதி பொறுப்பாளர் ஜே.எஸ்.மோதிலால், மாவட்ட துணைச் செயலாளர் க.சிவா, ஆட்டோ செல்வம், எல்.அய்.சி., அஞ்சல் துறை முகவர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்ட எளிய விழாவாக நடந்தது.
நிகழ்ச்சியில் ஒருங்கிணைத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு குரல் எழுந்தது, ‘கொஞ்ச நேரம் பேச்சை நிறுத்துங்கள்’ என்று மகளிர் ஒருவர் கூற, உடன் அனைவருக்கும் அதிர்ச்சி. யார் அவர் என்று பார்க்கும்போது, அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வுக்கு பிறகு அந்த இல்லத்தின் கீழ்ப்பகுதியில் வாழக்கூடிய, அந்த விழாவுக்கு அழைக்காமலேயே நெற்றி நிறைய திருநீறு அணிந்த பெரியவர் இரண்டாம் தளத்திற்கு வந்து, கையில் தடி ஊன்றியபடி சொன்னார். ‘‘பெரியார் கொள்கையைப் பேசும் மதிவதனி வருகை தருவதாக கேள்விப்பட்டேன் அதன் காரணமாக பார்க்க வந்தேன்’’ என்று அவருடைய துணைவியார் கையைப் பிடித்துக் கொண்டு மேல் தளம் வந்து விட்டார் என்று மதிவதனியைப் பார்த்து சொன்ன போது, மதிவதனி அவர்கள் அவர் அருகிலேயே சென்று, அவருக்கு வணக்கம் தெரிவித்து, ‘‘தங்கள் இல்லத்திற்கே வந்து சந்தித்திருப்பேனே’’ என்று கூறினார்.
தமிழர் தலைவர் சொல்வது போல கண்ணுக்குத் தெரியாதவர்களை பெரியார் எப்படி நம்மிடம் கொண்டு சேர்த்து இருக்கிறார் என்பதை இக்காட்சி விளக்கியது.
மேலும் மதிவதனி தன் உரையில், ‘‘இதுவரை எவ்வளவோ விழாக்களில் நான் பங்கேற்று இருக்கிறேன்; இருந்தாலும் கூட இந்த இல்ல விழா என்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. ஏன் என்று சொன்னால், நான் அறிமுகம் செய்து வைக்கக் கூடிய இல்ல விழா, அதிலும் முதலாவது இல்ல விழா என்கின்ற மகிழ்வோடு இந்த இல்லத்தை அறிமுகம் செய்து, சடங்குகள், சம்பிரதாயங்கள் இவற்றையெல்லாம் புறந்தள்ளி, சனிக்கிழமையில் மிக எளிமையாக, உற்றார் உறவுகள், இயக்கத் தோழர்கள், தொழில் ரீதியான நண்பர்கள், குடும்பங்கள் என்று சொல்லி, ஒரு நூறு பேருக்குள் தந்தை பெரியார் கொள்கைக்கு உரம் சேர்க்கும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துகளோடு, எளிமையான விழாவாக நடத்திக் காட்டிய மோதிலால் – கவுசல்யா குடும்பத்தினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.
