கேள்வி 1: 93ஆம் அகவை காணும் தாங்கள், பிறந்த நாள் பரிசாக திராவிட இயக்கத்தின் வரலாற்றைப் பறைசாற்ற உள்ள ‘பெரியார் உலகம்’ எனும் பகுத்தறிவு சார்ந்த அறிவியல் உலகை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்வீர்களா?
– சீ. இலட்சுமிபதி, தாம்பரம்.

பதில் 1: இது ஒரு பெரிய – மெகா திட்டம். அதன் முதல் பகுதி, இரண்டாம் கட்டப் பகுதி, மூன்றாம் கட்டப் பகுதி என்று பெரும் திட்டம்; ஆகையால் முதல் கட்டம் சிலைக்குரிய பீடம், சிலை மற்றும் சில பணிகள் 2028இல் அநேகமாக முடிந்து முதல் திறப்பு விழா. அய்யாவின் 150ஆம் ஆண்டு பிறந்த நாளில் முடியும். நிதி திரட்டல் பணியின் வெற்றி வேகமாக நடைபெற்றால், பணிகளும் அதிவேகத்தில் நிறைவடைய அத்துணை முயற்சிகளும் சுணக்கம் இன்றி முடியக்கூடும்.
- • •
கேள்வி 2: மத்தியப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 9 சமூகநல வாரியங்கள் எவ்வித மக்கள் பணியும் ஆற்றாமல் அதன் வாரியத் தலைவர்கள் அமைச்சர் அந்தஸ்தில் அரசு வாகனங்கள் மற்றும் இதர படிகளைக் கோடிக்கணக்கில் வாரிக்கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனரே?
– ஓவியன், அரும்பாக்கம்.
பதில் 2: பா.ஜ.க. அரசின் செயல் நடைமுறைகளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டான நிகழ்ச்சி. மக்களிடம் ‘டபுள் என்ஜின்’ ஆட்சி இதுதான் என்று சொல்லி திண்ணைப் பிரச்சாரம் செய்யலாமே!
- • •
கேள்வி 3: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கே முழு உரிமை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அடுத்து ஒருவழியாக வடகலை, தென்கலை பிரிவினரின் தொடர் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாகக் கருதலாமா?
– அ.இளங்கோவன், காஞ்சிபுரம்.
பதில் 3: ‘தென்கலை – வடகலை’ சண்டை நூறாண்டு கடந்த ஒன்று. அது ஒரு தீர்ப்பினால் முடிந்து விடுமா? அதீத கற்பனை. விரைவில் பாதிக்கப்பட்டோரின் நீதிமன்றப் படையெடுப்பு வரும் – பாருங்கள்!
- • •
கேள்வி 4: இந்தியா முழுவதிலும் உள்ள ஆளுநர் இல்லமான ராஜ்பவனை ‘மக்கள் மாளிகை’ என்றும், பிரதமர் மாளிகையை ‘சேவை இல்லம்’ என்றும் ஒன்றிய அரசு பெயர் மாற்றி இருப்பதால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப்போகிறது?
– ச.குமரன், குன்னம்.
பதில் 4: பெயர் உள்ளபடியே அவை அப்படி நடந்து மாற்றினால் வரவேற்கலாம். ஆனால், அப்படி இல்லை என்பதுதானே அப்பட்டமான உண்மை!
- • •
கேள்வி 5: மகாராட்டிராவில் ஜாதி வெறியால் கொலை செய்யப்பட்ட காதலனின் இறந்த உடலுடன் திருமணம் செய்து கொண்ட காதலி ஆஞ்சலுவின் உறுதிப்பாடு, ஜாதி வெறியுடன் சுற்றித் திரியும் மனித மிருகங்களுக்குக் கொடுத்த சாட்டை அடியாக அமையுமா?
– ந.யாழினி, திருச்சி.
பதில் 5: ஒரு பக்கம் அந்த உறுதி பாராட்டத்தக்கதுதான். அடுத்த கட்டம் அவர் அப்படியே தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் உரிமையும் பகுத்தறிவு அடிப்படையிலேயே இருப்பது அவசியம்!
- • •
கேள்வி 6: மாநில உரிமைகளை மதிக்காமல் அனைத்து வகையிலும் தமிழ்நாட்டை வஞ்சிப்பதாக ஒன்றிய அரசுக்குக் கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த தி.மு.க. எம்.பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஒன்றிய அரசு தனது நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமா?
– யாழ்நிலா ரவி, ஏனாத்தூர்.
பதில் 6: நடந்தால் நல்லது. “அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது பழமொழி!
- • •
கேள்வி 7: சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் இதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் தடைகளை நீக்க ‘நானோபோட்கள்’ என்னும் நுண்ணிய சாதனத்தைக் கண்டுபிடித்திருப்பது எதிர்காலத்தில் இதய அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அமையும் என்று கூறப்படுவது பற்றி தங்கள் கருத்து?
– இர.கார்த்தி, புதுடில்லி.

பதில் 7: மேலைநாடுகள் எப்படி மனிதகுல வாழ்க்கையைப் பாதுகாக்க – வளர்க்க – நலம் சூழும் நல்வாழ்வுக்காக சிந்தித்துச் செயலாற்றுகின்றன! நம் நாடோ மதச் சண்டையில் மண்டைகளை உடைத்துக் கொள்கிறது! மகா வெட்கம்! அறிவியல் – மருத்துவத்தில் அதிசய சாதனைகளை நாளும் பெருக்கி வருவது மகிழ்ச்சிக்குரிய இன்ப அதிர்ச்சி!
- • •
கேள்வி 8: செங்கோட்டையன் த.வெ.க.வுக்குச் சென்றது பா.ஜனதா நடத்திய சித்து விளையாட்டின் விளைவு என்று திருமாவளவன் பேட்டி அளித்திருப்பது சரியா?
– சு.பெருமாள், விழுப்புரம்.
பதில் 8: ‘கும்கி’ யானையோ என்ற சந்தேகம் பல தலைவர்களிடம் வளர்ந்து வருகிறது. உண்மை எஜமானர்கள் டில்லியில் இருப்பது இவருக்கும் இவர் புதிதாய்ச் சேர்ந்த கட்சிக்கும் போகப் போக விளங்கும். பல நிகழ்ச்சிகள் – திருப்பங்கள் மூலம் வெளிவரும். காத்திருங்கள்!
- • •
கேள்வி 9: வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் என்பது அடித்தட்டு மக்கள் மீது திணிக்கப்படும் மறைமுகத் திட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியிருப்பது ஏற்புடையதா?
– எஸ்.சின்னப்பொண்ணு, வாலாஜாபாத்.
பதில் 9: சரியான கணிப்பு! ‘விடுதலை’ தொடக்கத்திலேயே இது பற்றி அலசி ஆராய்ந்து காயப் போட்டுள்ளதே!
- • •
