சென்னை, டிச. 6– தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாளையொட்டி, 2.12.2025 அன்று சென்னை பெரியார் திடலில் பல்வேறு நிகழ்ச்சிகள் மக்களின் கண்களுக்கும் செவிகளுக்கும் விருந்தாய் அமைந்தன. அதன் ஓர் அங்கமாக பெரியார் திடலில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் குருதிக் கொடை வழங்கும் முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
குருதிக் கொடை முகாமை மருத்துவமனையின் ஒருங்கிணைப் பாளர் டாக்டர் ச.மீனாம்பாள் முன்னிலையில் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் ஆர்.கவுதமன் துவக்கி வைத்தார்.
இம்முகாமில் திரளான பொது மக்கள் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். கழகத் தோழர்கள் மற்றும் தோழியர்கள் தமிழர் தலைவரின் பிறந்த நாளையொட்டி குருதிக் கொடை வழங்கி மகிழ்ந்தனர்.
முன்னதாக இம்மய்யத்தின் மருத்துவ அலுவலர் டாக்டர் தர்ஷிணி ஆனந்த் மற்றும் டாக்டர் மீனாம்பாள் ஆகியோர் முகாமிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்கியும், மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இம்முகாமில் தேனி மாவட்ட நர்சிங் கல்லூரி மேனாள் முதல்வர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி, மருத்துவமனை ஜி.தயாளன் மற்றும் செவிலியர் சந்தியா, சி.ஆக்னஸ், உமா லூதி (நற்சோனை) ஆகியோர் உடனிருந்து பணியாற்றினர்.
இந்த மருத்துவ முகாம் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
