- ‘பாரதம்’, ‘திராவிடம்’ இரண்டும் தனித்தனி நாடுகள் என்கிறது மனுதர்மம்!
- மனுதர்மம், பிரிட்டிஷாருக்கு முந்தையதா? பிந்தையதா?
- அறிவு நாணயம் இருந்தால் பதில் சொல்லட்டும் ஆளுநர்…
பரப்புரைக் கூட்டத்தில் அதிரடிக் கேள்விகளுடன் கழகத் தலைவர் உரை!
புதுக்கோட்டை, டிச. 6– ”மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் தான் பயங்கரவாதிகள். திராவிடர் இயக்கத்தவர்கள் சமதர்மவாதிகள் என்றும் தி.மு.க.வை வீழ்த்தி விட்டு மீண்டும் மனுதர்ம ஆட்சியை கொண்டு வரத்துடிக்கிறார்கள் என்றும் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புதுக்கோட்டை தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார்.
புதுக்கோட்டை கழக மாவட்டம் சார்பாக, 28.11.2025 அன்று புதுக்கோட்டையில் தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் கீரை தமிழ்ச்செல்வன் அவைக்கூடத்தில், “இதுதான் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.ஆட்சி; இதுதான் திராவிடம் – திராவிட மாடல் ஆட்சி” எனும் தலைப்பில் மழை காரணமாக அரங்கக் கூட்டமாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்டத் தலைவர் மு.அறிவொளி தலைமையேற்று உரையாற்ற, மாவட்டச் செயலாளர் வீரப்பன் அனைவரையும் வரவேற்றார். கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தொடக்க உரை ஆற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் சரவணன், அறந்தாங்கி மாவட்டத் தலைவர் மாரிமுத்து, மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் வீரையா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், கே.கே.செல்லப்பாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தனர். மேனாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
அதைத் தொடர்ந்து கழகத் தலைவருக்கும், முன்னிலை ஏற்றுச் சிறப்பித்தவர்களுக்கும் மாவட்டக் கழகத்தின் சார்பில் ஆடையணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பின்னர் கழகத் தோழர்கள், கவிச்சுடர் கவிதைப்பித்தன், அமைச்சர் உள்ளிட்டோர் கழகத் தலைவரிடம் “பெரியார் உலகம்” நிதி வழங்கினார்கள். தொடர்ந்து கழகத் தலைவர் ஆசிரியர் உரையாற்றினார். அவர் தமது உரையில், திராவிட மாடல் ஆட்சியின் சிறப்புகளைப் பற்றி பட்டியலிட்டார். அதில் முதன்மையாக, “நானும் தலை குனிய மாட்டேன். நம்மையும் தலை குனிய விடமாட்டேன்” என்று முதலமைச்சரின் மாநில உரிமைக் குரலை எடுத்துக்காட்டினார். மேலும் அவர், இப்படிப்பட்ட சிறப்பான திராவிட மாடல் அரசை வீழ்த்துவதற்காக சிலர் கோட்டை கட்டுவதை, “இப்போது பலரும் கோட்டை கட்டுகிறார்கள். ஆனால், திராவிட மாடல் அரசு ஏற்கனவே கோட்டையில் கோலோச்சுகிறது. அதுவும் மணற்கோட்டை அல்ல, கற்கோட்டை” என்றும் விவரித்தார்.
தொடர்ந்து, நடப்பது ஒரு தத்துவப் போராட்டம் என்பதை நினைவூட்டும் வகையில் ஆளுநர், திராவிடம் என்பது பிரிட்டிஷார் செய்த சதி என்று சொன்னதைச் சுட்டிக்காட்டி. மனுதர்மத்தில் 10 ஆம் அத்தியாயத்தில் 43 ஆம் சுலோகத்தில், “பிராமணனிடத்தில் வணங்காமையாலும், உபநயனம் முதலிய கர்மலோகத்தினாலும் மேற் சொல்லும் சத்திரிய ஜாதிகள் இவ்வுலகத்தில் வரவர சூத்திரத்தன்மை அடைந்தார்கள்” என்று படித்துக் காட்டினார். தொடர்ந்து, “பவுண்டரம், அவுண்டரம், திராவிடம், காம்போசம், யவனம், சீனம், பால்கீகம்” என்று அந்த சூத்திரத் தன்மை அடைந்த நாடு களின் பட்டியலையும் மனுதர்மத்தில் இருப்பதை வாசித்தார். வாசித்துவிட்டு, ”நாம் ஒன்றாக இருப்பதாகச் சொல்கிறோம்! மனு தர்மம் என்ன சொல்கிறது? ’பாரதம்’, ’திராவிடம்’ இரண்டும் தனித்தனி நாடுகள் என்று சொல்கிறது” என்று மனுதர்மத்தின் 10 ஆம் அத்தியாயம் 43ஆம் சுலோகத்தைப் படித்துக்காட்டி, ”மனுதர்மம் பிரிட்டிஷாருக்கு முந்தையதா? பிந்தையதா?” என்று அதிரடியாகக் கேள்வி கேட்டு, தமிழ்நாட்டு ஆளுநர், திராவிடம் என்பது பிரிட்டிஷ்காரர்கள் செய்த சதி என்று சொன்ன ஆளுநருக்குப் பதிலடி கொடுத்து கழகத் தலைவர் உரையாற்றினார்.
மேலும் அவர், தமிழ்நாட்டில் பயங்கரவாதம் என்று ஆளுநர் பேசியுள்ளதை எடுத்துக்காட்டி, ”மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் தான் பயங்கரவாதிகள். திராவிடர் இயக்கத்தவர்கள் சமதர்மவாதிகள் என்றும் தி.மு.க.வை வீழ்த்தி விட்டு மீண்டும் மனுதர்ம ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கிறார்கள் என்றும் கழகத் தலைவர் ஆசிரியர் புதுக்கோட்டை பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றினார். இறுதியாக, ”அனைவரும் அவரவர் வாக்குகளைச் சரிபார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி தான் ஆட்சிக்கட்டிலில் அமரும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டு தமது உரையை நிறைவு செய்தார்.
இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.சரவணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். மாநில தொழிலாளரணி துணைச் செயலாளர் சந்திரசேகரன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கீரை.தமிழ் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் அரு.வீரமணி, மாநகரச் செயலாளர் ராஜேஷ், மாநகர துணை மேயர் லியாகத் அலி, கோமாபுரம் சந்திரசேகரன், மாநகர அவைத் தலைவர் ரெத்தினம், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சி.ஆர்.வி.சித்ரா, மாவட்ட தொழில்நுட்பப் பொறுப்பாளர் தமிழ் ஓவியா மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த ஏராளமான தோழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்.
