சென்னை, டிச. 6– தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப் பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தனியான
கல்விக் கொள்கை
கல்விக் கொள்கை
தேசியக் கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாட்டிற்கு தனியான கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி, தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை 2025அய் கடந்த ஆக.8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
தொடர்ந்து, மாநில கல்விக் கொள்கையின் அடிப்படையில் புதிய பாடத் திட்டங்களை வடிவமைப் பதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் உயர்மட்டக் குழுவும் கலை மற்றும் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவும் அமைக்கப்பட்டது.
மாநில அளவில் அமைக்கப்பட்ட இந்த உயர்மட்டக் குழுவின் கூட்டம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் நவம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மாநில பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டிய கலைத்திட்டம் மற்றும் வடிவமைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், பாடப் புத்தகங்களை எழுதி மாணவர்களுக்கு வழங்குவதற்கான தலைப்புகள் மற்றும் இடம்பெற வேண்டிய கருத்துகளை உருவாக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம்
பாடப் திட்ட வடிவமைப்பு குழுவின் முடிவின்படி, கலைத் திட்டம் மற்றும் பாடப் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டு, அதன் அடிப்படையில் பாடப் புத்தகம் எழுதப்படவுள்ளது. இந்நிலையில்தான் பாடப் புத்தகங்களை எழுதுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் லதா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கைக்கு அடிப்படையில் மேற்கொள்ளப் படவுள்ள புதிய பாடப் புத்தக உருவாக்கப் பணிகளில் தன்னார் வத்துடன் பங்கேற்க விருப்பம் ஆசிரியர்கள் மற்றும் விருப்பம் உள்ள உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பாடப் புத்தகம் எழுத விரும்புபவர்கள் தொடர்புடைய கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவர்களின் கல்வித்தகுதி, கற்பித்தல் அனுபவம் மற்றும் பாடத்தில் உரிய கற்பித்தல் அணுகுமுறைகளில் நிபுணத்துவம், பாடப்புத்தகம், இதர புத்தக உருவாக்கப் பணிகளில் அவர்களின் பங்களிப்பு, சமர்ப்பிக்கப்படும் பாட வரைவின் மீதான மதிப்பீடு ஆகியவை பரிசீலிக்கப்பட்டு, தேவைக்கேற்ப வல்லுநர்கள் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு மட்டும் அடுத்தநிலை பணிக்கான தகவல் தெரிவிக்கப்படும்.மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் பாடவாரியாகத் தெரிவிக்கப்படும் தலைப்புகளில், மாதிரிப் பாட வரைவினை தயார் செய்து டிசம்பர் 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பாடத் தலைப்பு மற்றும் மாதிரி விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்கள் தமிழ்நாடு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் www.tnschools.gov.in இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது’ என கூறப்பட்டுள்ளது.
