சென்னை ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கண்டன உரை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மிக மிக முக்கியமான வழக்கில், உடனே தீர்ப்புக் கொடுத்து,  சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார், ஆர்.எஸ்.எஸ். உணர்வாளராக இருக்கிற ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

தமிழ்நாட்டு காவல்துறைக்கு பாதுகாக்கத் தெரியாதா? அவர்கள் கடமையாற்ற மாட்டார்களா?

இன்றைக்கு நாம் எல்லாரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்றால், அது காவல்துறையினருடைய பாதுகாப்பினால் தானே!

சென்னை, டிச.6 ஆர்.எஸ்.எஸ். உணர்வாளராக இருக்கிற ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் என்பவர், அவசர அவசரமாகத் தீர்ப்பு கொடுத்து, அதுவும் மிக மிக முக்கியமான பிரச்சினையில், அதற்கு உடனே தீர்ப்புக் கொடுத்து, உடனே சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார்.  தமிழ்நாட்டு காவல்துறைக்கு பாதுகாக்கத் தெரியாதா? அவர்கள் கடமையாற்ற மாட்டார்களா? இன்றைக்கு நாம் எல்லாரும் இந்த அளவுக்கு இருக்கிறோம் என்றால் காவல்துறையினுடைய பாதுகாப்பினால்தானே என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

4.12.2025 அன்று மாலை சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார்.

அவரது கண்டன உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு நடைபெறக்கூடிய இந்த நிகழ்ச்சியில், இங்கே முழக்கங்கள் மூலமாக தெளிவாகச் சொன்ன, தமிழ்நாடு ஆளுநர்  ஆர்.என்.ரவியின் அவ தூறு பிரச்சாரத்தைக் கண்டித்து நடக்கக்கூடிய இந்த ஆர்ப்பாட்டத்தில், இன்னொன்றும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டிய ஒரு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துவிட்டது

மனுதர்மத்திலேயே திராவிடம் இருக்கிறது!

அம்பேத்கர் வரையறுத்த அரசியலமைப்புச் சட்டத்தைத் தூக்கிவிட்டு, அந்த இடத்தில் மனுதர்மத்தைப்  போட  வேண்டும்  என்று  ஆர்எஸ்எஸ் நினைக்கிறது. அந்த மனுதர்மத்தி லேயே திராவிடம் இருக்கிறது; பத்தாவது அத்தி யாயத்திலே 44 ஆவது சுலோகத்திலே திராவிடம் என்ற சொல் இருக்கிறதா, இல்லையா?

உன்னுடைய மனுதர்மத்திலே திராவிடம் இருக்கிறது; நீங்கள் காட்டுகிற பாகவதம் இருக்கிறதே, அதிலே திராவிடம் இருக்கிறது. எல்லாவற்றை விட நாட்டுப் பண் பாடலில், ‘‘திராவிட உத்கல வங்கா’’ என்றுதான் ‘ஜனகண மனஅதி நாயக’ என்று சொல்லக்கூடிய அந்தப் பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்கிறீர்கள்.

அவர்கள் தூங்கவில்லை, தூங்குவது மாதிரி பாசாங்கு செய்கிறார்கள். தூங்குகிறவர்களை எழுப்புகிற வேலை அல்ல; கிளப்புகிற வேலைதான் நமக்கு. எழுப்புவது வேறு; கிளப்புவது வேறு. இங்கிருந்தே கிளப்ப வேண்டும், கிளப்புவோம் – 2026 ஆம்  ஆண்டில் நடைபெறவிருக்கின்ற சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பிறகு.

எல்லாவற்றையும் சட்டப்படி செய்யக்கூடிய ஒப்பற்ற முதலமைச்சர்!

எல்லாவற்றையும் சட்டப்படி செய்யக்கூடிய ஒப்பற்ற முதலமைச்சர். அவருடைய நுட்பமான அறிவுத்திறன், ஆளுமைத் திறன் என்பது இருக்கிறதே, அது அகிலமும் பாராட்டக்கூடிய ஓர் ஆளுமைத் திறன். அதனால் அவர் பொங்கி எழவேண்டிய இடத்திலே கூட, பொங்கி எழாமல், பொறுத்துக் கொண்டிருப்பார். ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அவரே இப்போது ‘‘உங்களை ஒருபோதும் தலை குனிய விடமாட்டேன்’’ என்று சொல்லக்கூடிய நிலை.

சட்டமன்றத்திலே எதிர்க்கட்சியைப் போல் நடந்து கொள்கிறார் தமிழ்நாடு ஆளுநர் என்று நம்முடைய பெருமைக்குரிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சொன்னார் அல்லவா, சட்ட மன்றத்திலே எழுதிக் கொடுத்ததைப் படிக்காமல், இவரே படித்தார் என்று சொல்லுகிறார். அதற்கு அரசியலமைப்புச் சட்டத்திலே இடம் உண்டா? சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் கூட வெளிநடப்பு செய்வதற்கு உரிமை உண்டு; ஆளுநருக்கு வெளிநடப்பு செய்வதற்கு உரிமை உண்டா? அவ்வளவு ஒரு கீழிறக்கமான ஒரு மிக மோசமான ஓர் ஆளுநர் தமிழ்நாட்டு வரலாற்றில், இந்திய வரலாற்றிலேயே கிடையாது என்றார்.

மண்டல், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினுடைய உரிமைக்காகப் பாடுபட்டவர்!

‘பீகார்காரர்களை எல்லாம் வெறுக்கிறார்கள்’ என்று நீங்கள் சொல்ல முடியாது; இன்னும் கேட்டால் மண்டல் அவர்கள் பீகார் முதலமைச்சராக இருந்தபோது, அவருக்கு நாங்கள் கொடுத்த ஆதரவைப்போல, நாங்கள் கொடுத்த மரியாதையை வேறு எவருக்கும் கொடுக்கவில்லை. ‘‘மண்டல் மண்டல் மண்டல்’’ என்று நாடும் சொல்லிக் கொண்டிருப்பது, அவர் பீகாரி என்பதற்காக இல்லை; அவர் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினுடைய உரிமைக்காகப் பாடுபட்டவர் என்பதற்காகத்தான்.

எங்களுக்கெல்லாம் வேற்றுமை கிடையாது; பெரும்பான்மை – சிறுபான்மை என்று பிரித்துப் பார்ப்பது கிடையாது இன்குளூசிவ் – எக்ஸ்க்ளூசிவ் என்று சொல்லுகிறார்களே, அந்த முறையிலே வரும்போது, பார்க்க முடியாது. ஆனால், இதைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் தவறான தகவலைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

‘ஓட்டுத் திருட்டு’ என்று அருமையான வார்த்தையை நாட்டுக்குத் தந்தார்
ராகுல் காந்தி!

இந்த முறை சரியாக வரவில்லை என்று சொன்னவுடனே தான், ஓட்டுத் திருட்டின் மூலமாக அவர்கள் முயற்சி செய்கிறார்கள். ‘ஓட்டுத் திருட்டு’ என்று அருமையான வார்த்தையை நாட்டுக்குத் தந்தார் ஒப்பற்ற இளந்தலைவராக இருக்கக்கூடிய பெருமைக்குரிய கொள்கை வீரர் ராகுல் காந்தி அவர்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் வெளிப்படையான திட்டங்கள் கிடையாது!

ஆர்.எஸ்.எஸ்.  எதையும் நேரடியாகப் பேசுவது கிடையாது; எங்களுடைய திட்டங்களில் எல்லாம் ரகசியம் கிடையாது, வெளிப்படையானவை. ஆனால், அங்கே அப்படியல்ல; அவர்களுடைய முறை ‘ஹிட்டன் அஜெண்டா’.  ‘ஓப்பன் அஜெண்டா’ என்று வெளி யிலே ஒன்று சொல்லுவார்கள்; அதற்கு நேர் எதிராகச் செயல்படுவார்கள்.

சமஸ்கிருதம் ‘செத்த மொழி’ என்று அதற்கு பெயர். அதை மாற்றி, அதற்கு ஒரு கவுரவத்தைக் கொடுத்து, அதையும் செம்மொழிப் பட்டியலில் சேர்த்தவர், வழி காட்டியவர் யார் தெரியுமா? உங்களுக்கெல்லாம் அதிசயமாய் இருக்கும்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் தமிழுக்குச் செம்மொழிச் சிறப்பு வந்த பிற்பாடுதான், அதற்கு அடுத்த ஆண்டுதான் சமஸ்கிருதத்துக்குச் செம்மொழித் தகுதி கிடைத்தது. கதவைத் திறந்தது அவர்! அதற்கப்புறம் நீங்கள் உள்ளே நுழைந்தீர்கள், அவ்வளவுதான்.

சமஸ்கிருதம் என்றாலே என்ன அர்த்தம்? “சிறப்பாக ஆக்கப்பட்டது, நன்றாக சமைக்கப்பட்டது” அவ்வளவுதான்.

தமிழ்ப் பண்பாட்டில்
ஜாதி என்பது இருக்கிறதா
?

இதை வைத்துக்கொண்டு தமிழுக்குப் பெருமை பேசிவிட்டால் மட்டும் ஏமாந்து விடுவார்களா தமிழர்கள்? ஆனால், தமிழுக்கு நீங்கள் கிள்ளியும் கொடுக்கவில்லை, மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுக்கிறீர்கள். தமிழ்ப் பண்பாட்டில் ஜாதி என்பது இருக்கிறதா? அது கிடையாது என்று சொல்லக்கூடிய “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதை எடுத்து சொல்லக்கூடியவர்கள் தான் தமிழர்கள். ஆகவே ஆளுநரைப் பயன்படுத்தி இந்த ஆட்சிக்கு ஒரு நெருக்கடி உண்டாக்க வேண்டும், நிதி நெருக்கடி, நிர்வாக நெருக்கடி இவற்றையெல்லாம்  உண்டாக்க வேண்டும் என்று ஒரு பக்கம்.

தமிழ்நாடு
ஓர் அமைதிப் பூங்கா!

இன்னொரு பக்கம் எஸ்.அய்.ஆர். என்று சொல்லக்கூடிய திட்டமிட்ட ஓர் ஏமாற்று வேலை. ஏறத்தாழ 35 லட்சம் வெளி மாநிலத்துக்காரர்களை உள்ளே விட வேண்டும் என்று சொல்லுகிற திட்டங்கள். இவையெல்லாம் ஒரு பக்கத்திலே இருக்கும்போது, கடைசியாக ஒன்றை இப்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இதுதான் மிக முக்கியமானது. இன்றைய ‘விடுதலை’யிலே மிகத் தெளிவான ஓர் அறிக்கை வந்திருக்கிறது பாருங்கள். தமிழ்நாடு ஓர் அமைதிப் பூங்கா. வடக்கே எல்லா இடங்களிலும் மதக்கலவரங்கள் நடந்தாலும், இங்கே மதக்கலவரம் கிடையாது. இது சிறப்பான அமைதிப் பூங்கா! இங்கே மதக்கலவரத்துக்கு இடந்தர மாட்டோம் என்று சொல்லக்கூடிய பூமி.

 ‘அனைவருக்கும் அனைத்தும்’

இந்த பூமி பெரியார் மண், அமைதி மண். இங்கே எல்லோரும் சகோதரர்கள். அவர்கள் இஸ்லாமியர்களா, கிறிஸ்தவர்களா, என்ன கொள்கையைச் சார்ந்தவர்கள் என்பதெல்லாம் பிரச்சினை கிடையாது. சமூக நீதி என்று சொல்லுகிற நேரத்திலே சமூக நீதிக்குப் பெரியார் தந்த விளக்கத்தை தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உறுதிமொழி சொல்லும்போது எடுத்தார்கள். “அனைவருக்கும் அனைத்தும்!”.

இந்த ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்று சொல்லும்போது உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி கிடை யாது. அவர்கள் எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு பெறட்டும், நம்முடைய எண்ணிக்கை எவ்வளவோ, மற்றவர்களுடைய எண்ணிக்கை எவ்வளவோ அவ்வளவு அவர்கள் பெறட்டும் என்று சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் மாற்றிட இப்போது வேறு வழி இல்லை; எல்லாவற்றுக்கும் ஏமாற மாட்டார்கள் என்று சொன்னவுடனே இந்தப் பூமியை, இந்த மண்ணை மதக்கலவரமாக்க வேண்டும் என்று கருதுகிறார்கள்.

தோழர் பாலகிருஷ்ணன்

தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் அழகாக விளக்கமாகச் சொல்லி இருக்கிறார்கள். அண்மையிலே திருப்பரங்குன்றத்திலே போய் தீபம் ஏற்றுகிறேன் என்று, எங்கே மதப் பிரச்சினைகள் நடக்கிறதோ, அங்கே எல்லாம் ஆர்எஸ்எஸ் இருக்கும்! மத விழாக்கள் என்று சொன்னால் ஆர்.எஸ்.எஸ். தங்களுடைய கிளைக்கழகங்கள் என்று நினைக்கிறார்கள். அதைப் பரப்புவதற்கான வாய்ப்பு என்று நினைக்கிறார்கள். வேண்டுமென்று அங்கே போய், முன்னாலே ஒருவர் போனார், இப்போ அவரை அனுப்பிட்டு வேற ஒருத்தரை கொண்டு வந்து உட்கார வைத்திருக்கிறார்களே பிஜேபியில். அவர் அங்கே பெரிய போராட்டம் எல்லாம் நடத்துகிறார். சில மாதங்களுக்கு முன்னாலே சென்று பார்த்தார். அந்த ஊரிலே இருந்த மக்கள் சொன்னார்கள், திருப்பரங்குன்றத்திலே இருக்கிற மக்கள் சொன்னார்கள், ‘‘அய்யா நாங்கள் எல்லாம், எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறோம். இஸ்லாமியர், இந்து, அது இதுன்னு இப்படி எல்லாம் வித்தியாசம் கிடையாது. ஒன்னா இருக்கிறோம்.
நீங்க ஏன் வெளியிலிருந்து வந்து இப்படி கலவரத்தை உண்டாக்குறீங்க?” என்று தெளிவாகச்
சொன்னார்கள்.

ஆர்.எஸ்.எஸ்.  உணர்வாளராக இருக்கிற
ஒரு நீதிபதி!

இப்போது இவ்வளவு நாள் இல்லாமல், இப்போது என்ன அங்கே தீபம் ஏற்றுவது?  ஆர்.எஸ்.எஸ். உணர்வா ளராக இருக்கிற ஒரு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் என்பவர், அவசர அவசரமாகத் தீர்ப்பு கொடுத்து, அதுவும் மிக மிக முக்கியமான பிரச்சினையில், அதற்கு உடனே தீர்ப்பு கொடுத்து, உடனே சி.அய்.எஸ்.எஃப். காவல்துறையினரை அனுப்பி வைக்கிறார்.  தமிழ்நாட்டு காவல்துறைக்கு பாதுகாக்கத் தெரியாதா? அவர்கள் கடமையாற்ற மாட்டார்களா? இன்றைக்கு நாம் எல்லாரும் இந்த அளவுக்கு இருக்கிறோம் என்றால் காவல்துறையினுடைய பாதுகாப்பு தானே!

அந்தக் காவல்துறை அதிகாரிகளை நீங்கள் மதிப்புக் குறைவாக்கி விட்டால், அவர்களைச் சக்தியற்றவர்கள் ஆக்கிவிட்டால், அவர்களைக் கொச்சைப்படுத்தி விட்டால், யாருக்கு என்ன பாதுகாப்பு வரும்?

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *