ஈரோடு, டிச.5- ஈரோட்டில் வாழைப்பழம் சாப்பிட்ட போது தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
ஈரோடு பி.பி.அக்ரகாரம் அருகே உள்ள அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக் (வயது 35). இவரது மனைவி மகாலட்சுமி. கூலித்தொழிலாளர்கள். இந்த இணையர்களுக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் மகளும் இருந்தனர். இந்த நிலையில் 2.12.2025 அன்று இரவு குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக மகாலட்சுமி வாழைப்பழம் வாங்கி வந்தார். குழந்தைகளுக்கு பழத்தை கொடுத்ததும் அவர்கள் ருசித்து சாப்பிட தொடங்கினார்கள்.
வாழைப்பழம் சிக்கியது
அப்போது எதிர்பாராதவகையில் சாய் சரணின் தொண்டையில் வாழைப்பழம் சிக்கி அடைத்துக்கொண் டுள்ளது. இதனால் அவன் மூச்சுவிட சிரமப்பட்டான். மேலும் அவனுக்கு மூச்சுத்திணறலும் ஏற்பட்டது.
சாய் சரண் துடிப்பதை பார்த்த பெற்றோர் உடனடியாக அவனை சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே சாய் சரண் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி டாக்டர் சசி ரேகா கூறியதாவது:-
சிறுவன் சாய் சரண் மூச்சுத்திணறல் காரணமாக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டான். அவனை பரிசோதனை செய்தபோது தொண்டையில் வாழைப்பழம் சிக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மூச்சுக்குழாய் அடைபட்டு மரணம் ஏற்பட்டுள்ளது. வாழைப்பழம் சாப்பிடும்போது இருமல் ஏற்பட்டால் இது போன்று தொண்டையில் பழம் சிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தைகளுக்கு வாழைப்பழத்தை அப்படியே கொடுக்காமல் சிறு துண்டுகளாக கொடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு மூச்சுதிணறல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். 1 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் தொண்டையில் பழம், பொம்மைகள், பட்டன் பேட்டரி செல்கள் உள்ளிட்ட எந்த பொருள் சிக்கியது தெரிந்தாலும் உடனடியாக குழந்தையை பெற்றோர் தங்கள் மடியில் குப்புற படுக்க வைத்து முதுகுப்பகுதியில் பலமாக தட்ட வேண்டும்.
5 முறை இப்படி தட்டும்போது அந்த பொருள் வெளியே வந்து விடும். அப்படி வரவில்லை என்றாலும் நேராக படுக்க வைத்து நெஞ்சுக்கு கீழ் பகுதியில் 5 முறை பலமாக அழுத்த வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை நிற்க வைத்து மேல் வயிற்றில் அழுத்தம் கொடுத்தல், முன்பக்கமாக குனிய வைத்து முதுகில் தட்டுவது போன்ற முதலுதவி சிகிச்சைகள் செய்யவேண்டும். இப்படி தொடர்ந்து செய்யும்போது எந்த பொருள் தொண்டையில் அடைத்தாலும் வெளியே வந்து விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
