திருவண்ணாமலை ‘மகா தீபம்’ ஏற்றுவதற்குத் தோராயமாக 4,500 கிலோ உயர்தர நெய் பயன்படுத்தப்படுகிறதாம்!
ஒரு கிலோ நெய்யின் குறைந்தபட்ச விலை ரூ. 750 என்று கொண்டால், அதன் மொத்த மதிப்பு தோராயமாக ரூ.33,75,000 (முப்பத்து மூன்று லட்சத்து எழுபத்தைந்தாயிரம் ரூபாய்) ஆகும்.
இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நெய்யை எரித்து விடுவது, பொருளாதார ரீதியாகப் பெரிய வீணடிப்பு!
மேலும் எரிந்து கருக 1500 மீட்டர் காடாத் துணி வேறு!
டன் கணக்கில் நெய்யை எரிப்பதால் ஏற்படும் புகை மற்றும் அதன் சூழலியல் தாக்கம் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
பொருளாதாரக் கேடு, சூழல்கேடு மட்டுமல்ல…
எவ்வளவு பெரிய உணவுக்கேடு?
ஒருபுறம் பசியும், வறுமையும் இருக்கும் நிலையில், இவ்வளவு அதிக அளவில் நெய்யை எரிப்பது நியாயமா?
ஒரு கிலோ நெய்யைக் காய்ச்ச பாலின் தரத்தைப் பொறுத்து குறைந்தது 25 முதல் 30 லிட்டர் பசும்பால் தேவைப்படுகிறது.
இதுவே எருமைப்பால் என்றால், 18 முதல் 22 லிட்டர் தேவைப்படும்.
ஆனால், ‘பசும்பால்’ தான் ‘புனித’மாம்! அப்படியென்றால் 4,500 கிலோ நெய் என்றால், 1 லட்சத்து 35 ஆயிரம் லிட்டர் பசும்பால்!
நாள் ஒன்றுக்கு 8 லிட்டர் ஒரு பசுமாடு பால் கொடுக்கிறது என்றால், 17,000 மாடுகள் தரும் சத்தான உணவை, கோடிக்கணக்கான குழந்தைகளுக்குப் பசியாற்றும் அருமருந்தைக் கரியாக்கி யிருக்கும் கொடுமையை மூடத்தனம் என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
