சென்னை, டிச. 5– இதய செயல்பாட்டைக் கண்டறியும் ‘சிப்’பை விஅய்டி சென்னைக் குழுவினர் உருவாக்கியுள்ளனர். வி.அய்.டி. சென்னையின் உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் ஒரு முக்கிய மைல்கல்லாக, நானோ எலக்ட்ரானிக் டிசைன் குழுவினர், மிக்ஸிட் சிக்னல் ரோலாவுட் இண்டிர ஸ்பேஸ் என்ற மின்னணு சில்லுவை (சிப்பை) வெற்றி கரமாக வடிவமைத்து உருவாக்கி யுள்ளனர். இந்தச் சிப் அனலாக் மற்றும் டிஜிட்டல் சர்க்யூட் வடிவமைப்புகளை ஒருங்கிணைத்து, பயனரின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் இதர இதயச் செயல்பாட்டை அளக்கும் மெம்ஸ் சென்சார் கள் மூலம் திறம்படக் கண்டறியும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது.
“சமூக நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்வதே வி.அய்.டி. சென்னையின் முக்கிய நோக்கம் ஆகும். சமூகத்துக்குப் பயன் தரும் வகையில் பேராசிரியர்கள், மாணவர்கள் இணைந்து கண்டுபிடிப்புகளை மேற்கொள்கின்றனர்,” என்று வி.அய்.டி. சென்னை கல்வி நிறுவனத்தின் துணைவேந்தர் கூறினார்.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக துணைவேந்தர் பேராசிரியர் டி. தியாகராஜன் கூறுகையில், “நடை முறைக்குப் பயன்படக் கூடிய வகையில் மாறக்கூடிய ஆராய்ச்சிகள் மீது வி.அய்.டி. சென்னை கூடுதல் கவனம் செலுத்துவதே, இந்தத் தனித்துவமான மின்னணு சில்லுவை (சிப்பை) வெற்றிகரமாகப் பெறுவதற்குக் குழுவினரை வழிநடத்தியது,” என்றார்.
வி.அய்.டி. சென்னையில் பல்வேறு ஆராய்ச்சி மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. உலகத் தரத்திலான கட்ட மைப்பு வசதிகளுடன் வடிவ மைக்கப்பட்ட ஆய்வகங்களால், சமூக நலன் சார்ந்து மேற் கொள்ளப்படும் ஆய்வுகள் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் நடைமுறைப் பயன்பாட்டுக்கு வருவது சாத்தியமாகி வருகிறது என்று கூறினார்.
