சபரிமலை, டிச.3- சபரிமலை மண்டல-மகர விளக்கு சீசனை முன்னிட்டு நிலக்கல்-பம்பை இடையே 24 மணிநேரமும் கேரள அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் (1.12.2025) இரவு சபரிமலையில் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்துவிட்டு பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு கேரள அரசுப் பேருந்து ஒன்றில் புறப்பட்டனர். இந்த பேருந்தில் 50-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
இந்த பேருந்தானது நிலக்கல்-சாலக்காயம் இடையே அட்டத்தோடு பகுதிக்கு அருகே சென்றது. அப்போது திடீரென பேருந்தின் பின்புற டயரில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். இதைதொடர்ந்து பக்தர்கள் அனைவரும் பேருந்தில் இருந்து கீழே இறங்கி ஓடினர். பின்னர் சிறிது நேரத்தில் பேருந்தின் பின்புறம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை மேலும் பரவ விடாமல் அணைத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதன்பிறகு வேறு பேருந்தில் பக்தர்கள் அனைவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
