சென்னை, டிச.3- இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும் பங்காற்றி வரும் சிறந்த இதழியலாளர் ஒருவருக்கு 2021 முதல் ‘கலைஞர் எழுதுகோல் விருது’ மற்றும் ரூ.5 இலட்சம் பரிசுத் தொகையுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் படும் என்று 2021-2022ஆம் ஆண்டிற்கான செய்தி மக்கள் தொடர்புத் துறையின் மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ‘கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று (2.12.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில், 2024ஆம் ஆண்டிற்கான “கலைஞர் எழுதுகோல் விருதினை“ 50 ஆண்டுகளாக இதழியல் துறையில் பணியாற்றி நிறைந்த அனுபவம் பெற்றுள்ள தினத்தந்தி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் டி.இ.ஆர். சுகுமாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.
கலைஞரின் எழுதுகோல் விருது 2021ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. முதல் ஆண்டில் மூத்த பத்திரிகையாளர் அய்.சண்முகநாதனுக்கும், 2022ஆம் ஆண்டு வி.என்.சாமிக்கும், 2023ஆம் ஆண்டு நக்கீரன் இரா.கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழர் தலைவர் வாழ்த்து
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.டி.இ.ஆர்.சுகுமாருக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்தார். டி.இ.ஆர். சுகுமார், ஆசிரியருக்கு நன்றி தெரிவித்தார்.
