200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!! என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

எத்தனை வியூகங்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை கவர்ச்சிகள் வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வெற்றி பெறும்!
200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி!
அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!!
என்னுடைய பிறந்த நாள் செய்தி இதுதான்!

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

சென்னை, டிச.3  எத்தனை வியூகங்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை கவர்ச்சிகள் வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வெற்றிகரமாக, முன்பைவிட பலத்தோடு மேலும் சிறப்பாக 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை! இதுவே என்னுடைய பிறந்த நாள் செய்தி என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நேற்று (2.12.2025) 93 ஆவது பிறந்த நாள். இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எழிலன், தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி ஆகியோர் ஆசிரியரின் அடையாறு  இல்லத்திற்கு நேரில் வருகை புரிந்தனர்.

 முதலமைச்சருக்குப்
பொன்னாடை அணிவிப்பு

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொன்னாடை அணிவித்து, பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முதல மைச்சருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா வீரமணி ஆகியோர் இணைந்து பொன்னாடை அணிவித்து, திராவிடர் கழக புதிய வெளியீடுகளை வழங்கினர்.

அமைச்சர் பெருமக்களும் தமிழர் தலைவர் ஆசிரியருக்குப் பொன்னாடை அணிவித்தனர். இதே நாளில் பிறந்த நாள் காணும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பு!

அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (2.12.2025) எனக்கு 93 ஆவது ஆண்டு பிறந்த நாள் தொடக்கம் என்ற நிலையில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர் பெருமக்களும் மற்றும் நண்பர்களும் இங்கே வந்து என்னை வாழ்த்தி, என்னை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

தந்தை பெரியார் இட்ட கட்டளைப்படி…

ஒரு நீண்ட பொதுவாழ்க்கையை எனக்கு அளித்துள்ள இந்த 93 ஆண்டுகள், அதில் பெரும்பகுதி, இளைஞனாக இருந்த காலத்திலிருந்து, இளமைப்பருவத்திலிருந்து இந்த இயக்கத்தோடு இணைத்துக் கொண்டிருக்கின்ற எனக்கு எத்தனையோ அனுபவங்கள் உண்டு என்றாலும், அண்மையில், திராவிட ஆட்சிக்குத் தோன்றி யிருக்கின்ற அறைகூவல்களை எதிர்நோக்குவதுதான், தந்தை பெரியார் இட்ட கட்டளைப்படி, இந்த ஆட்சியைப் பாதுகாப்பதும், இந்த ஆட்சி மீண்டும் வருவதன்மூலமாகத்தான், இந்தக் கொள்கை எதிரிகளை வீழ்த்த முடியும் என்ற உணர்வு இருக்கின்ற காரணத்தால், என்னுடைய பிறந்த நாள் செய்தி என்னவென்று கேட்டபோது, ஒரே ஒரு செய்திதான் – அது என்னவென்றால், இதே முதலமைச்சர் அவர்கள், 2021 ஆம் ஆண்டு ‘‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’’ எப்படி உறுதிமொழி எடுத்தார்களோ, அதேபோல, 2026 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தி.மு.க. கூட்டணி மிகப்பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஒரு சிறப்பான ஆட்சியைத் தரவேண்டும்.

தி.மு.க. கூட்டணி நாளும் வலுவுள்ள கூட்டணியாக மாறிக் கொண்டிருக்கிறது!

இது எங்களுடைய விருப்பம் மட்டும் அல்ல. உலகத்தில் வாழக்கூடிய தமிழர்களின் ஆசையும்கூட. காரணம், இந்த ஆட்சி, கொள்கை உள்ள ஓர் ஆட்சி; சாதனைகள் திறன்மிக்க சரித்திரம் படைத்திருக்கின்ற ஓர் ஆட்சி. இன்னார், கொள்கை எதிரிகள் என்பதைச் சரியாக அடையாளம் கண்டு, அவர்களை நேருக்கு நேர் சந்திக்கக்கூடிய தெம்பும், திராணியும் உள்ள, ‘‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்’’ என்று சொல்லக்கூடிய ஓர் உறுதிபடைத்த முதலமைச்சர் நமக்குக் கிடைத்திருக்கின்றார். அவருடைய ஆட்சியினுடைய செம்மை எல்லாத் தரப்பினருக்கும் கிடைத்திருக்கின்றது. அதன் காரணமாகத்தான், அவருடைய தலைமையில் அமைந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, நாளும் வலுவுள்ள கூட்டணியாக மாறிக் கொண்டி ருக்கிறதே தவிர, பலமிழந்தவர்களாகவோ அல்லது இந்தக் கூட்டணியிலிருந்து வேறு இடங்களைத் தேடிக் கொண்டு போகக் கூடியவர்களாகவோ இல்லை.

200 தொகுதிகளுக்கும் மேல்
வெற்றி பெறுவது உறுதி!

எத்தனை வியூகங்கள், எத்தனை சூழ்ச்சிகள், எத்தனை கவர்ச்சிகள் வந்தாலும், ‘திராவிட மாடல்’ ஆட்சி, மீண்டும் வெற்றிகரமாக, முன்பைவிட பலத்தோடு மேலும் சிறப்பாக 200 தொகுதிகளையும் தாண்டி வெற்றி பெறுவது உறுதி! அதைச் செய்வதுதான், கருஞ்சட்டையினரின் முதல் கடமை!

என்னுடைய பிறந்த நாள் செய்தி, ‘‘இந்த ஆட்சியை மீண்டும் கோட்டைக்கு அனுப்புவோம்.’’ கோட்டைக்குப் போகலாம் என்று மனக்கோட்டைக் கட்டுகிறவர்களுக்கு இனி ஒரு  துளியும் இடமிருக்காது. அவர்கள் கண்டது கனவு. நாம் செய்யப்போவது நடைமுறை – வெற்றி என்பதேயாகும்!

நிழல் வேறு, நிஜம் வேறு!

செய்தியாளர்: புதிதாகக் கட்சித் தொடங்கிய நடிகர் விஜய், பெரியார், அண்ணாவையும் கொள்கைத் தலைவர்களாகச் சொல்கிறாரே?

தமிழர் தலைவர்: அவர் எல்லா தலைவர்களையும், கட்–அவுட்டிலேயும், படத்திலேயும் வீட்டிற்குள்ளேயே அடைத்துவிட்டார். அதுபோலத்தான் அவருடைய கொள்கையும் இருக்கும். அவருக்குப் பெரியாரும், அண்ணாவும் படமாகத் தெரிகிறார்கள். நமக்கோ அவர்கள் கொள்கையாக இருக்கிறார்கள். இதுதான், இரண்டிற்கும் இருக்கின்ற வேறுபாடு.

எனவே, நிழல் வேறு, நிஜம் வேறு.

கொள்கை இல்லாத கட்சிதான்
த.வெ.க.!

செய்தியாளர்: நடிகர் விஜய் அரசியல் செயல்பாடு – நிலைப்பாடுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அவருடைய கட்சியின் கொள்கை என்னவென்றே இதுவரையில் சொல்லவில்லை. பிறகு என்ன அரசியல் செயல்பாடு? கொள்கை என்னவென்று தெரியாதவர்களுக்கு என்ன அரசியல் நிலைப்பாடு இருக்க முடியும்?

இதுவரையில் அவர்களுடைய கொள்கை என்னவென்று சொல்லியிருக்கிறார்களா? ஒரு கொள்கையும் இல்லாத கட்சிதான் அது.

‘முதலமைச்சரே’ என்று சொல்வது கொள்கையாக இருக்க முடியாது.

மின்மினிப் பூச்சிகள் ஒருபோதும் மின்சாரத்தோடு போட்டிப் போட்டு வெற்றி பெற முடியாது.

ஒப்பனைகள்
எப்போதும் நிலைக்காது!

24 மணிநேரமும் ஒப்பனை போட்டுக் கொள்ப வர்களால்கூட சகித்துக் கொள்ள முடியாது. அவர்களும் ஒரு குறிப்பிட்ட கால நேரம்வரையில்தான் ஒப்பனையைப் போட்டுக் கொள்வார்கள். பிறகு ஒப்பனையைக் கலைத்தால்தான் நிம்மதி என்று அவர்களே நினைப்பார்கள். ஒப்பனைகள் எப்போதும் நிலைக்காது. அந்தக் காலகட்டத்தை நினைத்துக் கொள்ளவேண்டும்.

திராவிட இயக்கம் ஒரு நீண்ட வரலாறு. அது புயலையும், சுனாமியையும், கடும் மழையையும், கடும் கோடையையும் சந்தித்து வந்திருக்கின்ற இயக்கம்.

ஏதோ பொம்மலாட்டங்கள் மூலமாக அதை அசைத்துப் பார்க்கலாம் என்றால், அது நடக்காது என்பதை நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும். மக்க ளும் அதைப் புரிந்துகொண்டிருக்கின்றார்கள். அதன் காரணமாகத்தான், வடக்கே இருந்து வருகின்ற வாடையை அவர்கள் விரும்புவதில்லை. தெற்கே இருந்து வருகின்ற தென்றல்தான் முக்கியம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

– இவ்வாறு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *