‘ஆசிரியர்’ என்றாலே தமிழ்நாட்டில் மட்டுமல்ல – இந்தியாவில் மட்டுமல்ல – உலகளவில் அடையாளப்படுத்தப்படக் கூடியவர் நமது தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களே ஆவார்!
இது ஓர் உலக அதிசயமாகும். ஓர் ஏட்டின் ஆசிரியராக 63 ஆண்டு காலம் தொடர்ந்து பணியாற்றும் ‘கின்னஸ்’ சாதனைக்கும் உரியவராவார்.
அவர் 93ஆம் ஆண்டு அகவையில் தன்னடியைப் பதிக்கிறார் (2.12.2025).
கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுத் தலைவராக உலா வந்து கொண்டிருக்கிறார்.
93 ஆண்டு அகவையில் 83 ஆண்டு காலத் தொண்டறம் என்னும் விகிதாச்சாரம் இவருக்கு மட்டுமே உண்டு.
அவரின் பிறந்த நாளில் ‘விடுதலை’க் குழுமத்தின் சார்பில் அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகம் எங்கும் உள்ள பகுத்தறிவாளர்கள், சிந்தனை யாளர்கள் முற்போக்கு எண்ணம் படைத்த அனைவரும் அகமகிழ வாழ்த்துகிறார்கள்.
அவர் வாழும் ஒவ்வொரு நாளும், நாட்டுக்கானது – மானுடத்துக்கானது – முற்போக்குத் திசைக்கானது – வளர்ச்சிக்கானது.
எல்லா வாழ்த்துகளையும்விட தந்தை பெரியாரின் வரவேற்பும் – வாழ்த்துமே மேலானது – வளமையானது. இதோ தந்தை பெரியார் பேசுகிறார்.
‘‘இந்த நிலையில் தோழர் வீரமணி அவர்கள், நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டையும், பிரச்சாரத் தொண்டையும் தன்னால் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக் கொண்டு, குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார்.
இது நமது கழகத்திற்குக் கிடைக்க முடியாத ஒரு பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி, திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு, கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீரமணி அவர்கள் வக்கீல் தொழிலில் ஈடுபட்ட சிறிது நாள்களுக்குள் மாதம் 1-க்கு ரூ.200, ரூ.300 என்கிற கணக்கில் வருமானமும், அதிகாரிகளின் பாராட்டுதலும் மதிப்பும் பெறத்தக்க நிலைமை அடைந்துவிட்டார். (அந்தக் கால கட்டத்தில் இது பெரிய தொகையே!)
அவரது இயக்கம் சம்பந்தமில்லாத நண்பர்களும், வக்கீல் தோழர்களும் அவருக்கு எவ்வளவோ ஆசை ஏற்படும்படியான எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லித் தடுத்தும், அதை ஏற்காமல் துணிந்து முழு நேரப் பொதுத் தொண்டுக்கு இசைந்து முன்வந்தது குறித்து, நான் அதிசயத்தோடு அவரைப் பாராட்டி வரவேற்கிறேன்.
மனைவி, குழந்தை, குட்டி இல்லாத வாலிபப் பருவத்தில் பொதுத்தொண்டு உற்சாகம் பலருக்கு ஏற்படுவது இயற்கை. ஆனால், மனைவி, குழந்தை, குடும்பப் பொறுப்பு, நல்ல எதிர்காலம், தொழில் ஆதரவு ஆகிய இவை உள்ள நிலையிலும், நாளைக்கும் இவர் (வீரமணி) ஒப்புக் கொள்வதானால் (M.A., B.L., என்பதனாலும், பரீட்சையில் உயர்ந்த மார்க்கு வாங்கி இருக்கும் தகுதியாலும்) மாதம் 1-க்கு ரூ.250க்கு குறையாத சம்பளமுள்ள, அரசாங்க அல்லது ஆசிரியப் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசை காட்டிக் கொண்டிருக்கும்போதும், அவைகளைப் பற்றிய கவலையில்லாமல், முழு நேரப் பொதுத் தொண்டில் இறங்குவதென்றால் இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.
உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி ‘விடுதலை’யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.’’
(ஈ.வெ.ராமசாமி ‘விடுதலை’ 10.8.1962)
‘‘வீரமணி அவர்கள் எம்.ஏ.,பி.எல்., பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்திக் கூர்மையும் உள்ளவர். அவர். எம்.ஏ., பி.எல்., பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்து வந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்விதப் பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும்.
அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக் கொள்ளா விட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரச்சாரகராகவும், நமது ‘விடுதலை’ ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து, அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் ‘விடுதலை’யை ஒப்படைத்து விட்டேன்.’’
‘விடுதலை’ பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்! – ஈ.வெ.ராமசாமி (‘விடுதலை’ தலையங்கம் 6.6.1964)
‘‘இதில் ஆசிரியராக இருக்கிறவருக்கு சம்பளமில்லை; மற்றபடி எந்த வசதியும் அவருக்கில்லை; வேறு இடமாக இருந்தால் எவ்வளவோ வசதிகள் இருக்கும்.
நல்ல கல்வி அறிவுள்ளவர். தொழில் ஆற்றலுள்ளவர். பொறுப்பானவர். அவர் நினைத்திருந்தால், ஆசைப்பட்டிருந்தால் நமது இயக்கம் – அவருக்குள்ள செல்வாக்கு இதெல்லாம் கொண்டு முனுசீப்பாகி இருப்பார். வக்கீல் தொழில் செய்திருந்தாலும் நல்ல அளவுக்கு பணம் சம்பாத்தித்திருப்பார். அதையெல்லாம் விட்டு, பொதுத் தொண்டு செய்ய வேண்டுமென்று கருத்துடன் செய்து வருகிறார். தங்களுக்காகவே இருக்கக்கூடாது; பொது மக்களுக்கு ஏதாவது தொண்டு செய்ய வேண்டுமென்கிற தன்னலமற்றத் தன்மைக்காகவும் நிறைய பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்’’. (தந்தை பெரியார் – ‘விடுதலை’ 26.2.1968).
மலேயா நாட்டில் சுற்றுப் பயணம் செய்து திரும்பிய ‘விடுதலை’ ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுக்குத் தந்தை பெரியார் தலைமையில் விடுதலைப் பணிமனையினர் 28.2.1969 அன்று மாலை நடத்திய தேநீர் விருந்தில் தந்தை பெரியார் ஆற்றிய உரையின் ஒரு சிறு பகுதியே இது.
தந்தை பெரியாரே வாழ்த்திய பிறகு நாம் எம்மாத்திரம்?
இக்கால கட்டத்தில் நாடு சந்திக்க வேண்டிய மிகப் பெரிய பூகம்பத்தையொத்த பெரும் சவால் ‘மதவாதம்’, மீண்டும் மனு தர்மத்தின் ஆலகால விஷம்!
இவற்றிற்கு ஒரே தீர்வு தந்தை பெரியார் தம் சித்தாந்தமே! அதனை ஆயுதமாகக் கொண்டு வெற்றி கொள்ளும் ஒரு பெரும் தலைவராக நமது தலைவர் மானமிகு ஆசிரியர் தான் இருக்கிறார்கள்.
அவர் வாழும் ஒவ்வொரு நொடியும் நாட்டுநலனுக்கானது – பிற்போக்குச் சக்திகளை வீழ்த்த மானுடத்தை பாதுகாக்கும் கவசம் போன்றது.
அவர் நீடு வாழ்வதற்கான ஊட்டச்சத்து நாமும், நாட்டு மக்களும் கொடுக்கும் உன்னதமான உழைப்பை – ஆதரவைப் பொறுத்தது! உழைப்பைக் கொடுத்து தமிழர் தலைவரின் ஆயுளை நீட்டிக்கச் செய்வோம்! ‘பெரியார் உலகம்’ என்ற நிர்மாணம் தான் ஒவ்வொரு நொடியும் அவரை உந்தித் தள்ளுகிறது. அது நிறைவேறி விட்டால் (நிறைவேறும் என்பதில் கிஞ்சிற்றும் அய்யமில்லை) அது அவரது ஆயுளை ஆச்சரியப்படும் அளவுக்கு நீட்டிக்கச் செய்யும்! நன்றியுள்ள தமிழர்கள் – துணை நிற்பர் என்பதில் எட்டுணையும் அய்யமில்லை.
வாழ்க பெரியார்! வெல்க திராவிடம்!
