1983ஆம் ஆண்டு திருவண்ணாமலை நகரில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலம். பக்தி மார்க்கத்தை பின்பற்றுவதா அல்லது பகுத்தறிவு மார்க்கத்தை பின்பற்றுவதா என மனதில் தினமும் வழக்காடு மன்றம் நடக்கும். பள்ளி முடிந்து வரும்போது படிப்பகங்களில் நேரத்தை செலவிடுவதில் சிறப்பு வகுப்பு (Special class) இருந்தது என்று காரணம் சொல்லி (பொய் சொல்லி) வீட்டிற்கு காலதாமதமாக வந்து சமாளித்த காலம். பின்பு விவரம் தெரிந்து அர்ச்சனையும் அடியும் வாங்கியது தனிக் கதை. அப்போது திருவண்ணாமலை சின்னகடைத்தெருவில் “கலைஞர் படிப்பகத்தில்” விடுதலை, முரசொலி, எதிரொலி, செங்கதிரோன், அலைஓசை, தினகரன் நாளேடுகளை படிப்பதும், பக்கத்திலுள்ள “ப.உ.ச. படிப்பகத்தில்” அண்ணா, நீரோட்டம், மன்ற முரசு, மக்கள் குரல் போன்ற ஏடுகளை படிப்பதும் வழக்கமான ஒன்றாக இருந்தது.
அப்பொழுது ஜெயேந்திர சரஸ்வதி என்று அழைக்கப் பட்ட புதுப் பெரியவாள் பற்றிய செய்தி நாளிதழ்களில் அடிக்கடி வரும். அதைபோலவே ஆசிரியரின் அறிக்கைகள் நாள் தவறாமல் நாளிதழ்களில் இடம் பெறும். அப்பொழுது இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சியில் இந்துத்துவ சக்திகள் பெரும் அளவில் வளர்வதற்கு அடித்தளமிடும் வகையில் “இதயம் பேசுகிறது மணியன்”, வித்துவான் லட்சுமணன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரைச் சுற்றியிருந்தார்கள். அப்போது கலைஞருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். புதுப் பெரியவாளான ஜெயேந்திர சரஸ்வதி, எழுத்தாளர்கள் ஞானி மற்றும் சின்னக் குத்தூசி ஆகியோரிடம் அளித்த பேட்டியில் “என்னைப்பற்றி கலைஞர் என்ன வேண்டுமானால் பேசட்டும் பீடத்தை (மடம்) பற்றி ஏன் பேச வேண்டும்? எனவே, கடவுளிடம் வேண்டினேன் கலைஞர் படுத்துன்டார்” என்று பேட்டி அளித்தார்.
பார்ப்பனர்களை மிரள வைத்த
“சங்கராச்சாரி – யார்?”
“உடல்நலக்குறைவு ஏற்பட்டது இயற்கையான ஒன்று. அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதும் இயல்பானது தான். இதற்கும் கடவுளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது? புதுப் பெரியவாள் மடாதிபதியாகத் தங்கியிருக்கும் மடம் ஒன்றும் புனிதமானது அல்ல” என்று ஆசிரியர் கொதித்தார். அதன் விளைவு “சங்கராச்சாரியர் – யார்” எனும் தலைப்பில் தொடர் சொற்பொழிவு ஒன்றினை நடத்தினார்.
அந்த சொற்பொழிவில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் காஞ்சி மடம் ஆதி சங்கரரால் தோற்றுவிக்கப்பட்டது அல்ல என்பது முதல் பெரிய சங்கராச்சாரியரான சந்திரசேகரேந்திர சரஸ்வதி எப்படிப்பட்ட மனிதாபிமானம் அற்றவர் என்பதை ஆவணங்களை காட்டி அசைக்க முடியாத வாதத்தினை 10 சொற்பொழிவுகளாக மக்களிடம் எடுத்துவைத்தார். அந்த சொற்பொழிவுகள் அனைத்தையும் நேரில் பார்த்து, கேட்ட பத்திரிக்கையாளர் “சின்ன குத்தூசி தியாகராஜன்” எதிரொலி நாளேட்டில் “சங்கராச்சாரியர் – யார் தமிழர் தளபதி வீரமணி தொடர் உரை” என்கின்ற தலைப்பில் ஒரு விமர்சன கட்டுரை எழுதினார்.
அந்த கட்டுரைகளை நான் படித்து அதை தனி தாளில் குறிப்பெடுத்து பின்பு விடுதலையில் வரும் ஆசிரியர் சொற்பொழிவுடன் பொருத்திப் பார்ப்பேன். சங்கராச்சாரியர்கள் பற்றியும், காஞ்சி மடம் பற்றியும் கொஞ்ச நஞ்சம் என்னிடமிருந்த மதிப்பு சடசடவென சரிந்தது. இதில் முக்கியமான சிறப்பு என்னவென்றால் இன்றும் மேற்கண்ட ஆய்வு சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ள அந்தப் புத்தகம் பல பதிப்புகள் கண்டு வருவதும், அதற்கு இதுவரை யாரும் மறுப்பு எழுதாமல் உள்ளதும் தான். அதேபோல் சங்கராச்சாரியர்கள் மீது கொலை வழக்கு ஏன் பதியப்பட்டது என்பதற்காக விவரமான சிறப்பு சொற்பொழிவினை ஆசிரியர் நிகழ்த்தி அதுவும் புத்தகமாக வெளிவந்துள்ளது.
பெரியாரைச் சுவாசிப்பவர் ஆசிரியர்
தந்தை பெரியார் கொள்கைகளை வாசிப்பவர்கள், பின்பற்றுபவர்கள் அதிகம் பேர் இருக்கலாம். அந்த கொள்கையை சுவாசித்து அதை பரப்பும் பணியினை தன் வாழ்நாள் பணியாக நினைத்து கடந்த 83 ஆண்டுகளாக பணி செய்து வருபவர் நமது ஆசிரியர். தந்தை பெரியாரின் கொள்கைகளை பட்டிதொட்டி எங்கும் பரப்புபவர்.
பொருளாதார இடஒதுக்கீட்டின்
ஆபத்தை உணரச் செய்தவர்
தந்தை பெரியார் நிறுவிய சுயமரியாதைப் பிரசார நிறுவனத்தின் மூலம் பெரியாரின் சிந்தனைத் தொகுதிகளை சிறிய புத்தகங்களிலிருந்து பெரிய புத்தகங்கள் வரை பதிப்பித்து மலிவு விலையில் அளிப்பதற்கு ஆவன செய்து வருகிறார். எரியும் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை நாட்டு மக்களுக்கு “ஈரோட்டுக் கண்ணாடி” அணிந்து அவர் பாணியில் விளக்குவதும், அந்த சொற்பொழிவினை பிறகு புத்தகமாக வெளியிடுவதும் தந்தை பெரியார் காலம் தொட்டு ஆசிரியர் வீரமணி செய்து வருகிறார். பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தபோது, அது எவ்வளவு ஆபத்தானது என்பதையும், ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறுவதற்கு எப்படி தடையாக இருப்பது என்பது பற்றியும் சொற்பொழிவுகளை நிகழ்த்தி அதை சிறுசிறு நூலாக பொதுமக்களுக்கு கொண்டு சேர்த்தவர் நம் ஆசிரியர் வீரமணி.
மண்டல் கமிஷன் அறிக்கை வெளியிட வேண்டும் என்பதற்கும் அதை அமல்படுத்த வேண்டும் என்பதற்கும் அதை அமல்படுத்துவதில் இருக்கும் தடையை உடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் மண்டல் அறிக்கை மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு, ஒன்றிய அரசு பணிகளில் அளிக்க வேண்டும் என்பதற்கு அந்த தீர்ப்பின் (இந்திரா சகானி வழக்கு) அடிப்படையில் எவ்வாறு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது பற்றியும் எண்ணற்ற சிறப்பு சொற்பொழிவுகள் ஆற்றினார் ஆசிரியர்.
எதேச்சதிகாரம் கோலோச்சலாமா?
இதற்கிடையே 1987ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டப் பிரிவு நகலினை கொளுத்தும் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் 10 சட்டமன்ற உறுப்பினர்களை அப்போது பேரவைத் தலைவராக இருந்து பி.எச். பாண்டியன் தகுதி நீக்கம் செய்தார். அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த போது பேரவைத் தலைவர் உத்தரவில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பு சட்டப்படி சரியானது அல்ல என்பதை விளக்குவதற்காக “நீதிதேவன்கள் மயக்கம்” என்கின்ற தலைப்பில் அரியதொரு சொற்பொழிவினை ஆசிரியர் நிகழ்த்தி ஜனநாயகத்தில் எதேச்சதிகாரம் கோலோச்சக்கூடாது என்பதை தெளிவுப்படுத்தினார்.
1989ம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். 1989-1990ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை படிக்க விடாமல் மார்ச் மாதம் 25ஆம் தேதி அப்போதைய சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் ஜெ.ஜெயலலிதா திட்டமிட்டு ஒரு கலவரத்தை நிகழ்த்தினார். அப்போது பேரவைத் தலைவராக இருந்த டாக்டர் மு.தமிழ்க்குடிமகன் சட்டமன்றத்தில் நடந்ததைப் பற்றிய ஒளிப்படங்ளோ அல்லது காட்சிப்பதிவுகளோ வெளியிடப்படக்கூடாது என்றும், அப்படி வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு பரபரப்பானது
தி.மு.க அரசைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுக்க கட்டுப்பாடான பிரச்சாரத்தில் எதிர்க்கட்சிகள் முனைந்த போது மார்ச் மாதம் 27ஆம் தேதி காலையில் சென்னை முழுக்க ஆசிரியர் வீரமணி, “சட்டமன்றத்தில் நடந்தது என்ன” என்பது பற்றி 28.03.1989 அன்று சென்னை பெரியார் திடலில் பேசுகிறார் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன, சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியாரின் தொண்டராகவும், சமூக ஆர்வலராகவும், வழக்குரைஞராகவும் உள்ள ஆசிரியர் வீரமணி அந்த சிறப்பு சொற்பொழிவுக் கூட்டத்தில் சட்டமன்றத்தில் என்ன நடந்தது பற்றி விளக்கி கலவரம் நடந்தபோது எடுத்த ஒளிப்படங்களை காட்டி சட்டமன்றத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். ஆசிரியர் வீரமணி காட்டிய நிழற்ப்படங்களை பார்த்து தெளிவடைந்த பார்வையாளர்கள் மனதில் இயல்பான ஓர் அய்யம் ஏற்பட்டது. பேரவைத் தலைவர் உத்தரவினை மீறி ஆசிரியர் நிழற்ப்படங்களை வெளியிடுகிறாரே என்பது தான் அது. அதற்கு பதிலினை தனது விளக்கமான சொற்பொழிவில் அடுத்ததாகக் கூறினார். பேரவைத் லைவர் உத்தரவு, சட்டமன்ற கலவர நிழற்ப்படங்களை பிரசுரிக்கக்கூடாது என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர அந்த நிழற்ப்படங்களை காட்டுவதற்கு தடை ஏதும் இல்லை என்று விளக்கி உரையாற்றினார். அப்போது தான் தி.மு.க அரசை கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள் எப்படிப்பட்ட சதியினை நிறைவேற்றி உள்ளார்கள் என்பது பற்றி பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். மேற்கண்ட சொற்பொழிவு சிறிய நூலாக வெளி வந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பரவியதால் பதட்டம் தணிந்து இயல்பு நிலைக்கு தமிழ்நாடு திரும்பியது.
“கீதையின் மறுபக்கம்” – பேசு பொருளானது
ஆசிரியர் மேற்கொண்ட சொற்பொழிவுகளில் மிக முக்கியமானதும், குறிப்பிடத்தக்கதும் “கீதையின் மறுபக்கம்” என்பதாகும். இந்த தொடர் சொற்பொழிவுகளில் அவர் எடுத்துக்காட்டிய ஆதாரங்கள் அவர் எடுத்துரைத்த தர்க்கம், நியாயம் இன்றளவும் ஆய்வாளர் மத்தியில் பேசு பொருளாக உள்ளது. பல்வேறு ஆவணங்களை மேற்கோள் காட்டி “கீதையின் மறுபக்கம்” என்ற சொற்பொழிவு நூலை வெளியிட்டவர் டாக்டர் நாவலர் ஆகும். அப்போது நாவலர் பேசிய பேச்சு இன்றும் ஒலிநாடாவில் பதிவு செய்யப்பட்டு கேட்டு மகிழத்தக்கதாகவும் சிந்திக்கத்தக்கதாகவும் உள்ளது.
டாக்டர் அம்பேத்கர் அவர்களை தேர்தலுக்குத் தேர்தல் அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்ளும் நேரத்தில் டாக்டர் அம்பேத்கரை இழிவுபடுத்தும் வகையில் அருண்சோரி என்பவர் ஜாதி உணர்வின் அடிப்படையில் அவதூறுகளை அள்ளி தெளித்து ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அதற்கு சரியான பதிலினை ஆசிரியர் அவர்கள் ஒரு சிறப்பு சொற்பொழிவின் மூலம் கொடுத்து அந்த சொற்பொழிவு புத்தகமாக “அம்பேத்கர் பற்றிய அருண்சோரியின் நூலுக்கு மறுப்பு” என்கின்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
சங்பரிவார்களின் முயற்சிக்குத் தக்க பதிலடி
மதக் கலவரத்தை உருவாக்கும் வகையில் சங்பரிவாரங்கள் முயற்சி செய்யும் போதெல்லாம் அதற்கு பதிலடியாக ஆசிரியர் சிறப்பு சொற்பொழிவுகளை நிகழ்த்தி பதிலடி கொடுப்பார். அதற்கான தலைப்பும் வித்தியாசமாக இருக்கும். இராமாயணம், இராமன், இராம ராஜ்யம் என்பதும், சேது சமுத்திர திட்டம் பற்றியும் மிக தெளிவாக ஆய்வு நோக்கில் விமர்சனம் செய்து சொற்பொழிவு நிகழ்த்தி நூலாக வெளிகொணர்ந்தார்.
அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் நியமன வழக்கில் உச்சநீதிமன்றம் 16.12.2015 அன்று தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பின் சாராம்சத்தை விவரித்தும் உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஆகமங்களும் என்ன சொல்கிறது என்பது பற்றியும் “அனைத்து சாதி அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்ற தீர்ப்பும் ஆகமங்களும்” என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்தியதோடு அல்லாமல் அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனச் சட்டம் சரியானதே என்று வாதிட்ட உச்சநீதிமன்ற வழக்குரைஞர் கோவிலன் பூங்குன்றன் அவர்களை அழைத்து அவருக்கு சிறப்பு செய்து மகிழ்வித்தார் ஆசிரியர்.
பெரியாரியல் இராமாயண ஆய்வு சொற்பொழிவு, UNESCO பார்வையில் தந்தை பெரியார், உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? போன்ற சொற்பொழிவுகள் மிகவும் புகழ்பெற்ற சொற்பொழிவுகளாகும். ஆசிரியர் சொற்பொழிவு நிகழ்த்தும்போது அது சம்பந்தப்பட்ட நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மிகுந்த மரியாதையோடு வரவேற்று தலைமை உரையோ அல்லது சிறப்பு உரையோ ஆற்றச் செய்து அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்வார்.
நூல்களை வெளியிடுவதில் சளைப்பதில்லை
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ள புத்தகப் பட்டியலை பார்த்தபோது ஆசிரியர் வீரமணி 196 படைப்புகளை வெளியிட்டுள்ளார். இது தவிர வாழ்வியல் சிந்தனைகளாக 18 தொகுதிகள் பெரியாரியல் என்கின்ற தலைப்பில் 5 தொகுதிகள், உலக தலைவர் பெரியார் வாழ்கை வரலாறு என்கின்ற தலைப்பில் 12 தொகுதிகள், அய்யாவின் அடிச்சுவட்டில் என்ற தலைப்பில் இயக்க வரலாறு 7 பாகங்கள், பெரியார் உரை கோவைகள் என்கின்ற தலைப்பில் 6 நூல்கள், நீதிக்கட்சி தலைவர்கள் என்கின்ற தலைப்பில் முக்கியமான நீதிக்கட்சி தலைவர்களை பற்றி 5 நூல்கள், வாழ்வியல் துளிகள் வரிசையில் 5 நூல்கள், தந்தை பெரியாரின் பயணச்சுவடுகள், அவர் தொகுப்பாசிரியராக இருந்து வெளியிட்ட வடநாட்டில் பெரியார், அய்ரோப்பாவில் பெரியார் மற்றும் மலேசியா-சிங்கப்பூரில் பெரியார் ஆகிய புத்தகங்கள், பெரியாரின் சிந்தனைகள் என்ற தலைப்பில் 7 நூல்கள் அதில் மிக முக்கியமானது “பெரியார் அம்பேத்கார் நட்புறவு வரலாறு” என்னும் நூல். தந்தை பெரியார் பற்றிய நூல்கள் 7 நூல்கள். இதில் ஆங்கிலத்தில் எழுதிய நூல்களாக 26 நூல்கள். சமீபத்திய வெளியீடுகளாக 14 நூல்கள் ஆகியவற்றை ஆசிரியர் வெளியிட்டுள்ளார்.
ஒரு கொள்கை பிரச்சார இயக்கம் எந்த அளவிற்கு வேகமாக செயல்பட வேண்டுமோ அதைவிட நூறு மடங்கு வேகமாக செயல்படத்தக்க ஆற்றலை உள்வாங்கி ஆசிரியர் வீரமணி அவர்கள் செயல்படுத்தி வருகிறார். சிறப்பு சொற்பொழிவுகள் என்பது ஆய்வு சொற்பொழிவுகளாக அதே சமயத்தில் தந்தை பெரியாரின் கொள்கை வழியில் அவர் தந்த “ஈரோட்டுக் கண்ணாடி” மூலம் விளக்கும் பணி இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
எளிய தோற்றம் – கனிவும், கண்டிப்பும்
காட்டும் கண்கள்
ஒரு பக்கம் அடுக்கடுக்கான ஆதாரங்கள் அடங்கிய நூல்கள், இன்னொரு பக்கம் சிறிய சிறிய குறிப்புகள் இவற்றோடு சற்றும் நடுக்கம் இல்லாத குரலில் தெளிவாக அதே சமயத்தில் ஆணித்தரமாக தனது கருத்தை எடுத்து இயம்புகிறார். அவரது தோற்றம் மிக எளிய தோற்றம், சிவந்த உருவம், படிய வாரிய தலை, அறிஞர்களுக்கே உரிய அகன்ற நெற்றி, புன்னகை தவழும் முகம், அதே சமயத்தில் கனிவும், கண்டிப்பும் ஒருசேரக் காட்டும் கண்கள், முழுக்கை கருப்பு சட்டை, கருப்பு கரை கொண்ட வெள்ளை வேட்டி, இடது பக்கம் தவழும் கருப்பு கரை போட்ட வெள்ளை துண்டு ஆகியவற்றுடன் வேகமான நடந்து அதைவிட வேகமாக பெரியாரின் கொள்கைகளை பரப்பி வருகிறார். அவரது சிறப்பு சொற்பொழிவுகளை கேட்டு சிந்திக்கும் யாவரும் வீரமணி மயக்கத்தில் இருந்து விடுபடுவது அரிது.
வாழ்க சிறப்பு சொற்பொழிவு மூலம் சிந்திக்க வைக்கும் சிந்தனையாளர் ஆசிரியர் வீரமணி.
