
முனைவர் துரை.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
தேர்தல் பரப்புரை நிகழ்வு திருச்சி ஏப்ரல், 2019இல்! சிறப்பான ஏற்பாடு. திட்டமிட்டவாறு பயணக் குழுவினரில் முன்னேற்பாட்டுக் குழு, முதல் – இரண்டாம் பேச்சாளர்கள் என்று நாங்கள் முன்னதாக சென்று சேர்ந்தோம். அன்று ஒரே நிகழ்வு மட்டும்தான். தோழர் பெல் ஆறுமுகம் பேசிக்கொண்டிருந்தபோது சில சலசலப்பு. அவரை முடிக்கச் செய்து அடுத்து கழகச் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, முன்னவரின் உரைக்கு விளக்க உரையாக விரிவுபடுத்தி பேசிக்கொண்டு இருந்தார். கலவரம் தொடங்கியது. காவல் துறையினர், நமது இயக்கத் தோழர்கள் முயற்சியில் கொஞ்சம் அமைதி.
அடுத்து நான் பேசத் தொடங்கினேன்… கொஞ்சம் அமைதி… சிறப்புரையாற்றிட வேண்டிய கழகத் தலைவர் ஆசிரியர் வந்துவிட்டார். என்னுடைய உரை முடித்து தொடர்ந்து ஆசிரியர் நீண்ட நேரம் தேர்தல் பரப்புரை சிறப்பாக நிகழ்த்தி முடித்தார். தி.மு.க. மாநகர செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலரும் வழியனுப்பி வைத்துவிட்டு புறப்பட்டனர். வரிசையாக இரவு 10 மணியளவில் உந்து வண்டிகள் புறப்பட்டன. முன்னும் பின்னுமாகத் தோழர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்றிருப்போம் – நல்ல இருட்டு. நமது வண்டிகள் நோக்கி, கற்களும் கட்டைகளும் வந்து விழுந்தன. கூட்டம் முடித்து தமிழர் தலைவர் திரும்பும்போது தாக்குதல் கொடுத்திட வேண்டும் என்ற திட்டமிட்டபடி எதிரிகள் தயாராக இருந்து தாக்குவது புரிந்தது.
எப்படியாவது ஆசிரியரை பாதுகாப்பாக அனுப்பிவிட்டு, பிறகு பார்த்துக் கொள்ளலாம் எனறு நாங்கள் செயல்பட்டாலும் எதிரிகளின் தாக்குதல் கடுமையானது. காவல் துறையினர் ஓடிவந்து ஓரளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை துரிதமாகச் செய்தனர். தோழர்களும் எதிர்வினையாற்றிட வேண்டிய சூழல் ஏற்பட்டது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இரு தரப்பிலும் சிலருக்கு கல்லடி, காயங்கள்…
பெரியார் மாளிகை சேர்ந்துவிட்டோம். தோழர்கள் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் கழகத் தலைவர் ஆசிரியர் அச்சமற்ற தலைவராக, நிதானத்துடன் செயல்பட்டார். தோழர்களுக்கு தைரியமூட்டினார். மேற்கொண்டு தோழர்கள் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவலை கேட்டறிந்து மேற்கொண்டு எப்படி தோழர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்பதான வழிகாட்டுதலை செய்தார். நெருக்கடியான கலவரச் சூழலில் அச்சமற்ற தலைவராக எதனையும் எதிர்கொள்ளக்கூடிய துணிச்சலுடன் செயல்பட்ட காட்சி கண்டு பெருமிதம் கொண்டோம் நாங்கள்!
உங்களைத் தனியே விட்டுவிட்டு செல்ல மாட்டோம் என்று தோழர்கள் பலரும் சொன்னார்கள். தலைவரோ நீங்கள் அனைவரும் அவரவர் ஊருக்குச் செல்லுங்கள். இதுபோல் எத்தனை மிரட்டல், உருட்டல்களை, தாக்குதல்களை பார்த்திருக்கிறோம்… கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் – புறப்படுங்கள் என்று கேட்டுக் கொண்டார். அச்சமற்ற தலைமையை நாம் பெற்றிருக்கிறோம் – பெரியாரிடம் கண்ட அதே துணிச்சல் தமிழர் தலைவரிடமும் இருப்பதைக் கண்டு பெரியார் பெருந்தொண்டர்கள் தங்களுக்குள் சிலாகித்துப் பேசியது பெருமைக்குரியதன்றோ!
விருத்தாசலத்தில் தலைவர் வந்த வாகனத்தை இடைமறித்து தாக்குதல்!
விருத்தாசலம் கழக மாவட்ட திராவிடர் கழகத்தினர் மாபெரும் பொதுக் கூட்டத்தையும், மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தையும் 28.9.2013 அன்று ஏற்பாடு செய்திருந்தனர். மாலை ஊர்வலத்தையும் பார்வையிட்ட கழகத் தலைவர் ஆசிரியர் பொதுக்கூட்டதுக்கு செல்வதற்கு வந்து கொண்டிருந்தார்.
பாலக்கரையை கடந்து பொதுக்கூட்டம் நடைபெறும் வானொலித் திடல் மேடை செல்வதற்கு இன்னும் சற்று தொலைவே இருக்கும்போது திடீரென 50க்கும் மேற்பட்ட மதவெறிக் கும்பல் மற்றும் கூலிப் படையினர் கார்களை மறித்து தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். தலைவர் வேனுக்கு முன்பாக நான் இருந்த கார் – நானும், போட்டோகிராபர் சிவக்குமாரும் காரிலிருந்து இறங்கி தலைவர் வந்த வேனில் அவர் இருக்கை அருகே சென்றுவிட்டோம். அதற்குள் எங்கள் கார் மற்றும் தலைவர் வேன் மீது கற்கள், கழிகள் மூலம் தாக்கினர். கழகக் கொடிகளைத் தகர்த்தனர். பெரும் சத்தம் கேட்டு கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து காவலர்கள் மற்றும் இயக்கத் தோழர்கள் வரவும் பரபரப்பான சிக்கலில் மாட்டிக் கொண்ட நாங்கள் இருவரும் தலைவர் வேனை விரைவாக செலுத்தி முன்னேறிச் செல்ல வழிகாட்டினோம்.
காவலர்கள் மற்றும் தோழர்கள் வந்து எதிர்த் தாக்குதல் செய்து அமைதியை ஏற்படுத்தி – கூலிப் படையினரும், சங்கிக் கூட்டமும் தலைதெறிக்க சந்து பொந்துகளில் நுழைந்து ஓடினர்.
பிறகு பொதுக்கூட்டம் அமைதியாக நடந்தது. யாரும் ஆத்திரப்படாமல், கூட்டத்தின் நோக்கத்தை மட்டுமே விளக்கிப் பேசுங்கள் என்று தமிழர் தலைவர் பணித்தார்.
இறுதியாக சிறப்புரையாற்றிய கழகத் தலைவர் ஆசிரியர் உயிர் வெல்லமல்ல; எப்போதும் எங்களை இழப்பதற்குக் கூட நாங்கள் தயார். எம் இனத்துக்கு நல்லது நடக்கும் என்றால் நாங்கள் எதற்கும் தயார். இப்படி தாக்குதல் தொடுத்தோ, கலவரத்தை நடத்தியோ எங்கள் பிரச்சாரத்தை உங்களால் தடுக்க முடியாது. அப்படியெல்லாம் அஞ்சி நாங்கள் பின்வாங்கக் கூடியவர்கள் அல்ல.
தந்தை பெரியார் காலத்திலிருந்து எத்தனையோ எதிர்ப்புகளை, கொலைவெறித் தாக்குதல்களை எதிர்கொண்டவர்கள் நாங்கள். நாங்கள் எதற்காகப் போராடுகிறோம் – யாருக்காகப் பேசுகிறோம் என்பதை அருள்கூர்ந்து எண்ணிப் பாருங்கள். பட்டம் – பதவிகளை நாடாமல் போராடி ஈகம் செய்து தமிழ்நாட்டு மக்களை வாழ வைப்பதற்காக, முன்னேற்றுவதற்காகப் பாடுபடும் எங்கள் இயக்கத்தைப் புரிந்து கொள்ளுங்கள். எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் துணை போகாதீர்கள், விலை போகாதீர்கள் என்பதாக எழுச்சி உரையாற்றி நிறைவு செய்தார் தலைவர்.
திராவிடர் கழகம் சுயமரியாதை இயக்கமாக செயலாற்றிய காலம் தொட்டு கல்லடியும், சொல்லடியும், செருப்பு வீச்சும், பாம்பு வீச்சும், கூட்டத்தினுள்ளே கழுதை விடுதலும், வன்முறைச் செல்களும் ஏவப்பட்டே வந்திருக்கிறது. அவற்றையெல்லாம் கழகத் தோழர்கள், பெரியாரின் தொண்டர்கள் எதிர்கொண்டு சமர் செய்திருக்கிறார்களே தவிர, எதிர்ப்பைக் கண்டு அஞ்சிட்டதோ, பின்வாங்கியதோ இல்லை.
“போராட்டம் எங்கள் இரத்த ஓட்டம்
லட்சியத்தை காணாமல் ஓயமாட்டோம்!”
