திருச்சி, டிச. 1- திருச்சி, பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகப் பணித்தோழர்கள் கூட்டமைப்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 93ஆவது பிறந்த நாள் 26.11.2025 அன்று மாலை 5 மணி யளவில் நடைபெற்றது.
பணித்தோழர்கள் கூட்டமைப்பின் தலைவர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை, பெரியார் துவக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் விஜயலெட்சுமி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் முனைவர் வனிதா, பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பாக்யலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்த இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக கிராமப் பிரச்சாரக் குழுவின் அமைப்பாளர் முனைவர் க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம்தான் முதன் முதலில் தமிழர் தலைவரின் 93ஆவது பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்கின்றது என்றும் திராவிட இனத்திற்கு வழிகாட்டக் கூடிய நமது தமிழர் தலைவரின் பிறந்த நாள் உலகம் முழுவதிலுமுள்ள திராவிடத் தமிழினத்தினரால் கொண்டாடப்பட உள்ளது என்றும் உரையாற்றினார்.
மேலும் அய்யா அவர்களின் சமுதாயப் பணிகளையும் பணித் தோழர்களின் மத்தியில் எடுத்துரைத்து , பிறந்தநாள் கொண்டாடிய பணித்தோழர்களுக்கு சிறப்பு செய்தார். பணித்தோழர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு தமிழர் தலைவரின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயலாளர் கவுதமன் மற்றும் பொருளாளர் செல்வி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
