சுயமரியாதைக் கொள்கை இளையோர்களையும் சென்றடைய அதன் மூலம் அடித்தட்டு மக்களிடையே சுயமரியாதை விதையை விதைக்க தோன்றியது திராவிடர் மாணவர்கழகம்.
குடந்தை அரசினர் கல்லூரியில் பார்ப்பனருக்கென்று வைக்கப்பட்ட தண்ணீர் பானையிலிருந்து பார்ப்பனர் அல்லாத மாணவர் ஒருவர் தண்ணீர் குடித்துவிட்டார் என்பதற்காக பார்ப்பன வார்டன் ஒரு ரூபாய் அபராதம் போட்டார். அவ்வளவுதான், பிடித்தது நெருப்பு! பற்ற வைத்தவர்கள் தவமணிராசன், கருணானந்தம், செங்குட்டுவன் (பூண்டி கோபால்சாமி) இதன்மூலம் ஓர் இயக்கம் பிறப்பெடுத்து திராவிடர் மாணவர் கழகமாக உருப்பெற்றது.
இதன் முக்கிய நோக்கம், சுயமரியாதை மற்றும் திராவிடக் கொள்கைகளை மாணவர்களிடையே பரப்புவதும், இந்தித் திணிப்பு போன்ற ஒன்றிய அரசின் கொள்கைகளை எதிர்ப்பதுமே ஆகும்.
1944இல் நீதிக்கட்சி, திராவிடர் கழகமாக மாறியபோது, இந்த மாணவர் கழகம் அதன் முக்கியப் பகுதியாக மாறியது.
முதல் மாநாடு: திராவிடர் கழகம் 1944 ஆகஸ்ட் 27இல் சேலத்தில் பெயர் மாற்றத் தீர்மானம் நிறைவேற்றுவதற்கு முன்பே, 1944 பிப்ரவரியில் கும்பகோணத்தில் திராவிட மாணவர் கழகத்தின் முதல் மாநாடு நடத்தப்பட்டது.
1943 டிசம்பர் 1ஆம் நாள் கும்பகோணத்தில் தொடங்கி, 82 ஆண்டுகள் கடந்து 83ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இன்றைய தேதியிலும், திராவிடர் மாணவர் கழகம் திராவிடர் இயக்கக் கொள்கைகளை மாணவர்களிடையே எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
