சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் – படத்திறப்பு
சென்னை, நவ. 30– சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் – படத்திறப்பு நிகழ்வு நேற்று (29.11.2025) மாலை 7 மணிக்கு, சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் உணர்ச்சிமயமானதொரு நிகழ்வாக நடைபெற்றது.
- சுயமரியாதைச் சுடரொளி மயிலை நா.கிருஷ்ணன் புகழ் வணக்கம் – படத்திறப்பு
- மயிலை நா.கிருஷ்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை
- தமிழர் தலைவர் புகழ் வணக்க உரை
- எளிய நிலையில் இருந்து வணிகத் துறையில் உயர்ந்தவர்
- குடும்பத்தினரின் இயக்க உணர்வு
- புயல் – மழை என்றாலும் நிகழ்ச்சி நடைபெறும்
- மின்தூக்கி அமைக்கப்பட்டது
- பல்துறையினர் புகழ்வணக்கம்
- அமைதி காத்து மரியாதை
- பங்கேற்றோர்
மயிலை நா.கிருஷ்ணன் படத்திற்கு தமிழர் தலைவர் மலர் தூவி மரியாதை
இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மயிலை நா.கிருஷ்ணன் அவர்களின் படத்தினைத் குடும்பத்தார் புடைசூழ திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மயிலை நா.கிருஷ்ணனின் குடும்பத்தினர், உறவினர்கள், கழகத் தோழர்கள் அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பெரியார் நூலக வாசகர் வட்டம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழர் தலைவர்
புகழ் வணக்க உரை
புகழ் வணக்க உரை
மயிலை நா.கிருஷ்ணன் படத்தினைத் திறந்து வைத்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள், வேதனை, துயரம் இவற்றுக்கு இடையில், நட்பில் சமரசம் செய்து கொண்டால் கூட கொள்கையில் சிறிது கூட நழுவாத மயிலை நா.கிருஷ்ணனது படத்தினை மிகுந்த நெகிழ்ச்சியான மன நிலையில் திறந்து வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
45 ஆண்டு காலத்திற்கும் மேலாக மயிலை நா.கிருஷ்ணன் அவர்களோடு ஏற்பட்ட குடும்ப உறவு – கொள்கை உறவு என்பது இருக்கின்ற உறவு – இருந்த உறவல்ல; என்றைக்கும் மறக்க முடியாதது – பிரிக்க முடியாதது என்று உறுதிபடக் கூறினார்.
எளிய நிலையில் இருந்து வணிகத் துறையில் உயர்ந்தவர்
பெரியார் நூலக வாசகர் வட்டம் எவ்வளவு காலம் இருக்குமோ – அதில் மயிலை கிருஷ்ணன் நினைவு நிச்சயம் போற்றப்படும்.
எளிய நிலையில் இருந்து வந்தவர். வணிகத் துறையிலே சிறந்தவராக உயர்ந்து நின்றவர். தன் பெண்டு – தன் பிள்ளை, தன் சுற்றம் என்று பாராது – தொல்லுலக மக்களும் மேம்பட வேண்டுமென்று பிறர்க்கும் கொடுத்தவர். உதவி வந்தவர்.
வாழ்க்கையில் எத்தனை முறை வேண்டுமானாலும் விழ நேரிடலாம். பின்பு எழுவதுதான் முக்கியம். மிகப்பெரிய அளவுக்கொரு ஏற்பட்ட விபத்தில் சிக்கிய போதும் தன்னம்பிக்கை கொண்டு மீண்டும் எழுந்து நின்றவர் மயிலை கிருஷ்ணன்.
இயக்கத்தின் புரவலர், பெரியார் திடல் வளர்ச்சியில் அதிகப் பங்கு கொண்டவர். பல பொறுப்புகளை வகித்தவர். பெரியார் திடலில் உள்ள திராவிடன் நிதி கட்டடத்தின் முதல் தளத்திற்கு ‘மயிலை நா.கிருஷ்ணன் நினைவுக் கூடம்’ என்று பெயர் சூட்டப்படும்.
குடும்பத்தினரின் இயக்க உணர்வு
மயிலை நா.கிருஷ்ணனின் வாழ் விணையர், பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் கூட இயக்க உணர்வோடு ஒருங்கிணைந்தவர்களாக இங்கே இருப்பது வரவேற்கத்தக்கது என்று ஆசிரியர் அவர்கள் புகழ்வணக்க – படத்திறப்பில் குறிப்பிட்டு வீரவணக்க உரையாற்றினார்.
புயல் – மழை என்றாலும்
நிகழ்ச்சி நடைபெறும்
நிகழ்ச்சி நடைபெறும்
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் தலைவராக 45 ஆண்டுகள் பொறுப்பு வகித்து . சீராக நடத்திச் சென்றவர். அவர் புரவலர் – வள்ளல்!
சென்னையில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா – கலை விழா என ஏழு நாள் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடப்பதற்கு அவர் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர். தானே முன்னின்று நிதி கொடுத்து உதவியவர்.
2576 – பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் நடந்துள்ளன என்றால் அது சாதாரணமான ஒன்றல்ல. எந்த அமைப்பும் இப்படித் தொடர்ந்து நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியது இல்லை. புயல் – மழை என்றாலும் வாசகர் வட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மின்தூக்கி அமைக்கப்பட்டது
வயதானவர்கள் வாசகர் வட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகின்ற பொழுது – மிகவும் சிரமப்பட்டு மாடிப் படிகளில் செல்வதைக் கண்ட நமது தலைவர் ஆசிரியர் அவர்கள், அவர்களின் தேவைகளுக்காவே அமைத்துத் தந்ததுதான் இன்று அங்குள்ள மின்தூக்கி (லிப்ட்) ஆகும். மிசாவிலிருந்து வெளியே வந்த ஆசிரியர் அவர்கள்தான் பெரியார் நூலக வாசகர் வட்டம் முழு உருப் பெற்றதொரு அமைப்பாவதற்கு வழிவகுத்தவர்.
மயிலை கிருஷ்ணன் அதிகம் பேச மாட்டார். நிகழ்ச்சிகள் நடத்துவது குறித்து ஆர்வத்தோடு பேசுவார். காரியங்கள் நேர்த்தியாக நடக்கின்றனவா என்பதைக் கவனத்தோடு கண்காணிப்பார்.
அவரது இறப்பு ஈடு செய்ய முடியாதது. வாழ்விணையர் – குடும்பத்தினருக்கு இரங்கல் என்று அவர் குறிப்பிட்டார்.
பல்துறையினர்
புகழ்வணக்கம்
புகழ்வணக்கம்
இந்நிகழ்வில் பெரியார் நூலக வாசகர் வட்டத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி வரவேற்புரையாற்றினார்.
பெரியார் நூலக வாசகர் வட்ட மேனாள் செயலாளர் கி.சத்திய நாராயணன், காவல்துறை துணை ஆணையாளர் (ஓய்வு) இராமகிருஷ்ணன், மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், லைப்லைன் மருத்துவமனைத் தலைவர் டாக்டர் ராஜ்குமார், தென்சென்னை வடக்கு மாவட்ட அ.தி.மு.க. (ஒபிஎஸ்) செயலாளர் ரெட்சன் அம்பிகாபதி ஆகியோர் புகழ் வணக்க உரையாற்றினர்.
அமைதி காத்து மரியாதை
மயிலை நா.கிருஷ்ணன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அனைவரும் ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினர்.
புகழ்வணக்க – படத்திறப்பு நிகழ்ச்சிக்கு உரிய ஏற்பாடுகளை சிறப்பான வகையில் செய்து தந்த கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், மயிலை நா.கிருஷ்ணன் அவர்களின் இல்லத்தில் – குடும்பத்தில் ஒருவராகத் திகழ்ந்த நினைவுகளைக் குறிப்பிட்டு அனைவரின் சார்பாக நன்றியுரையாற்றினார்.
பங்கேற்றோர்
கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், கழக பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, மாநில கிராமப்புற பிரச்சார செயலாளர் அதிரடி அன்பழகன், கழக ஒருங்கிணைப்பாளர் வி.பன்னீர்செல்வம், மோகனா வீரமணி, டாக்டர் மீனாம்பாள், சி.வெற்றிச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், பெரியார் நூலக வாசகர் வட்ட செயலாளர் ஆ.வெங்கடேசன், மாநில கழக இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, த.மரகதமணி, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், பொதுக்குழு உறுப்பினர் சு.மோகன்ராஜ், வடசென்னை மாவட்டச் செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்க நல்லூர் மாவட்டத் தலைவர் வே.பாண்டு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாவட்டக் கழக காப்பாளர் மு.அய்யனார், குடும்ப விளக்கு நிதி வேணுகோபால், திராவிடன் நிதி அருள்செல்வன், பாத்திமா ஜுவல்லர்ஸ் ஜாகிர் உசேன் ஆரிப், ஆடிட்டர் சண்முகம், பழனி மாவட்ட ப.க. தலைவர் திராவிடச் செல்வன், கழக பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் தாராபுரம் சக்திவேல், நெய்வேலி வெ.ஞானசேகரன், க.இளவழகன், வழக்குரைஞர் துரை.அருண், வழக்குரைஞர் மு.வேலவன், க.கலைமணி, நா.பார்த்திபன் மற்றும் ஏராளமானத் தோழர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
