சென்னை, நவ.30 துணை ஆட்சியர், துணை காவல்துறை கண்காணிப்பாளர், வணிக வரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ஆகிய குரூப்-1 பதவிகளில் 70 காலிப்பணியிடங்களும், உதவி வனப்பாதுகாவலர் (குரூப்-1ஏ) பதவியில் 2 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 72 இடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வை 1 லட்சத்து 81 ஆயிரத்து 422 பேர் எழுதினார்கள். இதற்கான தேர்வு முடிவு கடந்த ஆகஸ்டு மாதம் 28-ஆம் தேதி வெளியானது. தேர்வில் 1,865 பேர் வெற்றி பெற்றிருந்தனர். அதில் வெற்றி பெற்றவர்கள் அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வை எழுத வேண்டும்.
அவர்களுக்கான முதன்மைத் தேர்வு நாளை (1.12.2025) தொடங்குகிறது. தமிழ் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப்-1 பதவிகளுக்கு தாள்-2, தாள்-3, தாள்-4 தேர்வு முறையே 2, 3, 4-ஆம் தேதிகளிலும், குரூப்-1 ஏ பதவிகளுக்கு முறையே 8, 9, 10-ஆம் தேதிகளிலும் நடக்க இருக்கிறது. இந்த தேர்வுக்காக சென்னையில் 19 மய்யங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
