கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்!
தஞ்சை, நவ.30 ‘‘கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்’’ என்றார் ‘பெரியவன்’ நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன்.
- கால்சட்டைப் பருவத்தில் ஆசிரியரின் உரை வீச்சுகளைக் கேட்டு வளர்ந்தவன் நான்!
- பெரியார் அணியில் ஒருவனாக இந்த வளாகத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன்!
- என் வாழ்நாளின் பெருமை!
- ‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக 60 ஆண்டுகள்…
- தந்தை பெரியாரின் பெருமிதம்!
- ஆசிரியரின் கால்படாத இடமே எங்கள் ஊர்களில் இல்லை!
- பெரியாரை படித்துக்கொண்டே இருப்பார்!
- 10 நூல்கள் வெளிவந்துள்ளன!
- அன்று கணக்கில் புலி; இன்று இலக்கியப் புலி!
- அரிய சேகரிப்புகளில் இருந்து கிடைத்தவை!
- ஆசிரியர் தலைமையில், எனது தந்தையின் திருமணம்!
- தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தவர்!
வல்லம் பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக் கழகத்தில் 26.11.2025 அன்று தமிழர் தலை வர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இரு சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழாவில்,‘‘பெரியவன்’’ என்ற நாவலுக்காக விருது பெற்ற எழுத்தாளர் சுந்தரபுத்தன் ஏற்புரை நிகழ்த்தினார்.
அவரது ஏற்புரை வருமாறு:
ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. என் சிறு வயது நினைவுகளில் தஞ்சாவூருக்குத் தனி இடம் இருக்கிறது. என் பாட்டியுடன் ரயிலில் வந்து, பெரிய கோயிலில் யானை பார்த்த ஞாபகங்கள் நதியாகக் கரைபுரண்டு ஓடுகின்றன.
பெரியார் அணியில் ஒருவனாக இந்த வளாகத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன்!
இங்குள்ள பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் எனக்கும் தொடர்பி ருக்கிறது. சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் அணியில் ஒருவனாக இந்த வளாகத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன். மதுக்கூர் – அத்திவெட்டி, சேலம் – உடையாபட்டி, வல்லம் என நான்கைந்து முகாம்களில் பங்கேற்ற நாட்கள் நினைவுக்கு வருகின்றன.
மழை பெய்த பிறகு வீசும் சில்லென்ற காற்றைப்போல மனம் மகிழ்ந்திருக்கிறது. எல்லையற்ற உற்சாகமும், நெகிழ்வும் இதயத்தில் கலந்திருக்கிறது.
என் வாழ்நாளின் பெருமை!
மிகச் சிறப்பாக நடைபெறும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் விழாவில் ‘பெரியவன்’ நாவலுக்காக வழங்கப்பட்டுள்ள இந்த மதிப்பிற்குரிய விருதை என் வாழ்நாளின் பெருமையாக நினைக்கிறேன்.
தாய்வீட்டுச் சீதனமாக ஏற்றுக்கொள்கிறேன்.
2019 ஆம் ஆண்டு புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழாவில் என் தந்தைக்கு ‘பெரியார் விருது’ வழங்கி னார்கள். இன்று என் நூலுக்கு விருது வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளார் அய்யா ஆசிரியர் அவர்கள்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது எங்கள் ஊருக்கு பேசுவதற்காக வந்தி ருக்கிறார் அய்யா ஆசிரியர் அவர்கள். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் நடேசன் என்பவர். அன்று முதல் இன்று வரை எத்தனை எத்தனை கூட்டங்கள்… போராட்டங்கள்… மாநாடுகள்…
‘விடுதலை’ நாளிதழின் ஆசிரியராக
60 ஆண்டுகள்…
60 ஆண்டுகள்…
ஒரு நாளிதழின் ஆசிரியராக 60 ஆண்டுகளைக் கடந்து பொறுப்பில் இருப்பவர் அய்யா ஆசிரியர் அவர்கள்தான். அய்யா அவர்களுக்கு டிசம்பர் 2 பிறந்த நாள். இந்த அழகிய தருணத்தில் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தந்தை பெரியாரின் பெருமிதம்!
10.08.1962 மற்றும் 07.06.1964 தேதியிட்ட ‘விடு தலை’யில், இப்படி எழுதுகிறார் தந்தை பெரியார் அவர்கள்…
‘‘மாதம் 1-க்கு ரூ.250க்கு குறையாத சம்பளமுள்ள, அரசாங்க அல்லது ஆசிரியப் பதவி அவருக்குக் காத்திருந்து ஆசை காட்டிக்கொண்டிருக்கும்போதும், அவற்றைப் பற்றிய கவலையில்லாமல், முழு நேரப் பொதுத்தொண்டில் இறங்குவதென்றால், இது இயற்கையில் எப்படிப்பட்ட மனிதரிடமும் எளிதில் எதிர்பார்க்க முடியாத விஷயமாகும்.
உண்மையைச் சொல்லுகிறேன். தோழர் வீரமணி இந்த முழு நேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி ‘விடுதலை’யை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.
சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும்’’ என்று பெருமிதம் பொங்கப் பாராட்டியிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள்.
ஆசிரியரின் கால்படாத இடமே எங்கள் ஊர்களில் இல்லை!
எங்கள் கால்சட்டைப் பருவத்தில் அய்யா ஆசிரியர் அவர்களின் உரைவீச்சுகளை ஊரில் கேட்டு வளர்ந்தவர்கள் நானும், ராமனும். இன்று அவருடன் மேடையில் அமர்ந்திருப்பது ஒரு கனவுபோல இருக்கிறது. வாழ்நாளில் மறக்கமுடியாத பெருமை எங்களுக்கு. அய்யா அவர்களின் கால்படாத இடமே எங்கள் ஊர்களில் இல்லை.
என் அப்பாவின் கதைதான் இது. என் சிறு வயது முதலே பார்த்த கேட்ட, வாழ்ந்த கதையைத்தான் இரண்டு ஆண்டு காலத்தில் எழுதினேன். அதுதான் ‘பெரியவன்’. ஊரில் குடும்பத்தில் மூத்த பையனை பெரியவன் என்று அழைப்பார்கள். அப்பா குடும்பத்தில் மூத்தவர். அதனால்தான் அந்தத் தலைப்பை வைத்தேன்.
நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் கூரை வீட்டில், தட்டியை முட்டுக்கொடுத்துக் கொண்டு எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் சித்திரம் மனதில் இருக்கிறது. பள்ளி நாட்களிலேயே கொரடாச்சேரியில் இருந்த ஒரு மடத்திற்குச் சென்று வேதங்களைப் படித்திருக்கிறார்.
சில நேரங்களில் செய்திகள் எழுதுவார். இரவில் விளக்கு வெளிச்சத்தில் படிக்கும் புத்தகங்களில் இருந்து குறிப்புகள் எழுதிக்கொண்டிருப்பார். காலை எட்டு மணிக்குள் சைக்கிள் புறப்பட்டுவிடும். சில நாள் கட்சி வேலை. சில நாள் செய்தி சேகரிப்பு.
வீட்டிலிருந்து துண்டை கட்டிக்கொண்டு மேல குளத்திற்கு குளிக்கப் புறப்படும் அப்பாவுடன் சென்ற நாள்கள் நினைவுகளில் தளும்புகின்றன. அவருக்குப் பழக்கமானது பருவம் தப்பிய விவசாயம்.
தினமும் அவர் எழுதும் பேனாவை எடுத்தால் கண்டுபிடித்துவிடுவார். பள்ளி விட்டு வந்ததும் உதை கிடைக்கும். “என் பேனாவை யாரு எடுத்தது” என்று அம்மாவிடம் கோபமாகக் கேட்பார். நான் வசமாக மாட்டிக்கொள்வேன்.
திராவிடர் கழகக் கூட்டங்கள் ஊரில் நடந்தால், கடைசி நபராக நின்றுகொண்டு குறிப்புகள் எடுத்துக்கொண்டிருப்பார். சிறப்புரையாற்ற வந்திருக்கும் பேச்சாளர்கள், ‘‘எங்கய்யா ஒளிச்செங்கோ’’ என்று விசாரிப்பார்கள். பிறகு ஓடிப்போய் அவர்களைச் சந்தித்துவிட்டு வருவார்.
எவ்வளவு அவசர செய்தி என்றாலும் சைக்கிள்தான். வீட்டில் ஃபோன் கிடையாது. கொரடாச்சேரி சென்று போனில் ‘மாலை முரசு’ அலுவலகத்திற்குத் தகவல் சொல்வார். ‘பொங்கல்’ மலர்களில் கட்டுரைகள் எழுத பல நாள்களைச் செலவழிப்பார்.
பெரியாரை படித்துக்கொண்டே
இருப்பார்!
இருப்பார்!
பாரசீக தத்துவ ஞானி இமாம் கஸ்ஸாலி படிப்பார்
பெட்ரண்ட் ரஸ்ஸலைப் படிப்பார்
நியான்டர்தல் மனிதர்கள் பற்றிப் படிப்பார்
பிளேட்டோவின் அரசியல் தத்துவம் படிப்பார்
பெரியாரை படித்துக்கொண்டே இருப்பார்
சங்கத் தமிழ் படிப்பார்
அப்பா குறிப்புகள் எழுதிக்கொண்டே இருந்தார். சென்னைக்கு நான் வந்ததும் அவரது குறிப்புகளை, நூல்களாக வெளியிட முயற்சி செய்தேன். அந்த நூல்கள் அவரை வெளியுலகுக்கு அறிமுகம் செய்துவைத்தன.
10 நூல்கள் வெளிவந்துள்ளன!
பெரியார் – ஒரு வாழ்க்கைப் பாடம்
விடையபுரம் – கடவுள் மறுப்பின் தொடக்கப்புள்ளி
பெரியார் அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம்: திருவிக – பெரியார் அறிக்கைப் போர்
கர்மவீரர் காமராசர்
பெரியார் பொன்மொழிகள்
பெரியார் பழமொழிகளும் பயன்மொழிகளும்
எல்லாம் நன்மைக்கே, தந்தை பெரியார் எழுதிய இரங்கல் உரைகளின் தொகுப்பு
ரஷ்யாவில் பெரியார் பார்த்த நாடகங்கள்
இதுவரை அவரது பெயரில் 10 நூல்கள் வெளி வந்துள்ளன. இன்னும் எத்தனையோ நூல்களை வெளியிடும் அளவுக்கு அவரிடம் குறிப்புகள் இருந்தன. தன் கடைசி நாட்கள் வரையில் அவர் எழுதுவதை கைவிடவில்லை.
எப்பொழுதாவது சாப்பிடும்போது தன் தந்தை சுந்தரம் பற்றிப் பேசுவார். அவரது உதவும் குணம் பற்றிப் பேசுவார். சமையல் ருசி பற்றிப் பேசுவார். பண்ணை வேலை பறிபோய் கூலி வேலை பார்த்தது பற்றி நினைவுகூர்வார். அவரது நினைவாகத்தான் எனக்கு சுந்தரபுத்தன் என்று பெயர் வைத்தார்.
நான் பள்ளியில் படிக்கும்போது, அவர் எழுதிய செய்திகளை என்னிடம் நகல் எடுக்கக் கொடுப்பார். அவரே எழுதி அனுப்பிவிடமுடியும். என்னை ஏன் செய்திகளை எழுதவைத்தார் என்பதை, நான் செய்திக்கட்டுரைகள் எழுதத் தொடங்கிய நாளில் புரிந்துகொண்டேன்.
நான் தொலைபேசியில் பேசும்போதெல்லாம் ‘‘எப்பய்யா ஊருக்கு வர்ற’’ என்று கேட்பார். ஊருக்கு வரும் நாளுக்காகக் காத்திருப்பார். ‘‘அய்யா வந்துட்டானா’’ என்று அம்மாவிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். என்னைப் பார்த்ததும் சைக்கிளில் அத்திக்கடைக்குப் போய் பரோட்டாவும், ஆட்டுக்கறியும் வாங்கிவருவார்.
என் 24 வயது வரையில் அப்பாவுடன் ஊரில் இருந்திருக்கிறேன். வீட்டுக்கு எப்போது வருவார் என காத்திருந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த பிறகு அவருடன் பேசும் நேரம் குறைந்துபோனது. ஊருக்கு வருவது தெரிந்தால், ஏதாவது புதிய புத்தகத்தின் பெயரைச் சொல்லி வாங்கிவரச் சொல்வார்.
அப்பா என்றதுமே வெள்ளையாற்றின் கரையில் இருந்து பாண்டவை ஆற்றின் கரைக்கு நடுவே மெல்லிய கோடாக நீளும் வயல்வழிச் சாலையில் அவர் சைக்கிளில் வரும் காட்சியே மனதில் நிறைகிறது. மறைவதற்கு ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை சைக்கிளில் வெளியே சென்றுகொண்டிருந்தார்.
திருமணமாகி மூன்று மாதங்களில் வேலையிழந்தேன். அந்தக் காலகட்டத்தில் என்னைப் பார்க்க வந்தவர், ஓர் அறிஞர் சொல்லியதாகக் கூறிய வாசகங்கள் காதில் ஒலிக்கின்றன: ‘‘வாழ்க்கை முழுதும் மனிதர்களுக்கு ஏதாவது ஓர் இடர் இருந்துகொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அவன் இயங்கிக்கொண்டே இருப்பான்’’.
அன்று கணக்கில் புலி;
இன்று இலக்கியப் புலி!
இன்று இலக்கியப் புலி!
என் நாவல் பற்றி சிறப்புரையாற்ற வந்திருக்கிற நண்பர், பேராசிரியர் இராமன், என் பள்ளித்தோழர். அவரும் நானும் ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை படித்தோம். அவர் கணக்கில் புலி. இன்று இலக்கிய புலியாக இருக்கிறார்.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகளில் கணிதப் பாடத்தில் சென்டம் எடுத்தவர். இன்று கல்லூரிக் கல்வித்துறையின் இணை இயக்குநர். தமிழ்நாட்டின் கல்விப் பரப்பில் பாரம்பரியமிக்க பிரசிடென்சி கல்லூரியின் முதல்வர். அவரது இந்த உயர்வை, ஒரு பள்ளித்தோழனாக நினைத்து பெருமையாக உணர்கிறேன்.
எங்கள் ஊரின் இயற்கைதான் எனக்கு ஆசிரியராக என்னை எழுதத் தூண்டிக்கொண்டே இருக்கிறது. தை மாதத்தில் வயல்வெளிகளைப் பார்த்தால் ரஷ்யாவின் கோதுமை வயல்கள்போல தங்க நிறத்தில் பளபளக்கும். இந்தக் காட்சியை அந்தி நேரத்தில் எத்தனையோ ஆண்டுகள் பார்த்து ரசித்திருக்கிறேன்.
நானும் அண்ணன் மேகநாதனும் படிப்பதற்காக எங்கள் ஊர் ஆற்றின் கரைகளுக்குச் செல்வோம். அந்த மேகநாதன் இன்று டில்லி என்சிஇஆர்டியில் புகழ்பெற்ற ஆங்கிலப் பேராசிரியராக இருக்கிறார். பல மாநிலங்களின் பள்ளிக்கல்வித் திட்டத்தை வகுக்கும் குழுவில் பணியாற்றிவருகிறார்.
அரிய சேகரிப்புகளில் இருந்து கிடைத்தவை!
இந்த நாவலில் நான் பயன்படுத்தியிருக்கிற அய்யா தந்தை பெரியாரின் உரைகள் உண்மையானவை. அப்பாவின் அரிய சேகரிப்புகளில் இருந்து கிடைத்தவை.
எங்களுக்குப் பள்ளிக்கூடம் பாடம் நடத்தியதைவிட, உள்ளூரில் நடந்த சமூக, அரசியல் நிகழ்வுகளும் பொதுக்கூட்டங்களும்தான் அதிகம் பாடம் எடுத்தி ருக்கின்றன. அய்யா ஆசிரியர் அவர்களின் பேச்சுகளை சிறுவயது முதலே கேட்டு வளர்ந்தவன்.
ஆசிரியர் தலைமையில்,
எனது தந்தையின் திருமணம்!
எனது தந்தையின் திருமணம்!
1971 ஆம் ஆண்டு எங்கள் ஊரிலேயே அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் அப்பாவுக்குத் திருமணம் நடந்தது. தம்பி, தங்கை உள்ளிட்ட எங்கள் மூவருக்கும் நடந்தது. நான் பள்ளியில் படிக்கும் போது அய்யா ஆசிரியர் அவர்கள், பக்கத்தில் ஏதோ ஓர் ஊரில் இருப்பதுபோல தோன்றும். அந்த அளவுக்கு அவரது வருகை இருக்கும்.
இந்த அழகிய தருணத்தில் அப்பாவை நினைத்துப் பார்க்கிறேன். என் தந்தையின்மீது பேரன்புகொண்டவர் அய்யா ஆசிரியர் அவர்கள். அந்த அன்பின் விளைவுதான் இந்தப் பரிசும் பாராட்டும்.
ஊருக்கு வந்தால், ‘‘ஒளிச்செங்கோ எங்கே’’ என்று கேட்பார். இன்று அப்பா இருந்திருந்தாலும் அந்தக் குரல் கேட்டிருக்கும். எப்போது அய்யா ஆசிரியர் அவர்களைச் சந்தித்தாலும், ஒரு புத்தகம் தருவதை வழக்கமாக வைத்திருந்தார் அப்பா.
தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தவர்!
அன்றாட வாழ்வில் எல்லா கணங்களிலும், அய்யா பெரியார் இப்படிச் சொல்லி இருக்கிறார் என்று பேசத் தொடங்கிவிடுவார் அப்பா. அக்குவேறாக ஆணிவேறாக என்று கிராமத்தில் சொல்வார்கள். அப்படி நுட்பமாக தந்தை பெரியாரின் சிந்தனைகளைப் படித்தவர்.
இதை, எனக்கு வழங்கிய விருதாக நினைக்கவில்லை. என் தந்தையின் எளிமையான பங்களிப்புக்குக் கிடைத்த விருதாக நினைக்கிறேன்.
பெருங்கருணையும் பேரன்பும் கொண்டு பரிசு வழங்கிய அய்யா ஆசிரியர் அவர்களுக்கும், பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் நம்.சீனிவாசன் அவர்களுக்கும், நிதியுதவி வழங்கிய அறக்கட்டளைகளுக்கும், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறு வனத்தின் துணைவேந்தர், இணை துணைவேந்தர், பதிவாளர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவி கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரி வித்துக்கொள்கிறேன்.
– இவ்வாறு ஏற்புரையாற்றினார் எழுத்தாளர் சுந்தரபுத்தன்.
