ஆளுநர் ஆர்.என். ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து தமிழ்நாடெங்கும் டிசம்பர் 4ஆம் தேதி கண்டன ஆர்ப்பட்டம்

4 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

*தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை, தீவிரவாதம் இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி
* ஒன்றிய பிஜேபி அரசு இட்ட கட்டளையை சிரமேற்கொண்டு செயல்பட்டு வருகிறார்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அமைதிப் பூங்கவான தமிழ்நாட்டின்மீது அவதூறு பரப்பும் வகையில் தீவிரவாதம் தலை தூக்கி நிற்பதாக அபாண்டமாக அவதூறுப் பிரச்சாரம் செய்கிறார். அதனைக் கண்டித்து டிசம்பர் 4ஆம் தேதியன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“தமிழ்நாட்டில் தேசியப் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. இங்கேயும் தேச விரோத சிந்தனைகளும், தீவிரவாதப் போக்கும் நிலவுகின்றன. இதைச் செய்பவர்கள் எந்தவித நடவடிக்கைகளையும் சந்திக்காமல் திரிகிறார்கள். ஆனால் என்.அய்.ஏ. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதைவிட எனக்குத் தமிழகத்தில் நிலவும் அரசியல் கலாச்சாரம் தான் கவலையைத் தருகிறது. தேசத்தின் மற்ற பகுதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறது. இது நல்லது அல்ல” என்று ஒரு தனியார் காவித் தொலைக்காட்சிக்குக் கடந்த இரு நாள்களுக்கு முன்பு பேட்டி அளித்துள்ளார் ஆளுநர் ஆர்.என். ரவி.

இதுகுறித்துக் கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் “தமிழ்நாட்டுக்குக் கொடுக்கின்ற குடைச்சல் போதாது என்று தமிழ்நாட்டின் வளர்ச்சியை நிரந்தரமாகக் கெடுக்க வேண்டும் என்றே ஒருவரை – பாஜக ஆளுநரை நியமித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை இருக்கிறதாம் – சொல்லுகிறார் ஆளுநர் ஆர்.என். ரவி

அவர் சமீபத்தில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். தமிழ்நாட்டிற்குச் சேவையாற்ற அவர் வந்திருப்பதாக சொன்னதைக் கேட்டதுமே சிரிப்புதான் வந்தது. தமிழ்நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினைகள் இருக்கிறதாம். தீவிரவாதப் போக்கு நிலவும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறதாம். தமிழ்மொழி வளர்ச்சிக்காக எதுவும் நடக்கவில்லையாம். ‘எல்லோரும் ஆங்கிலம் படிக்கிறார்களாம்’. இப்படியெல்லாம் அவதூறு, ஆற்றாமை கலந்து புலம்பியிருக்கிறார்.

ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் பெகல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்து, சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் பலியானார்கள்!

ஒன்றிய பாஜக ஆட்சியில்தான் டில்லி செங்கோட்டை அருகே குண்டுவெடிப்பு நடந்து அங்கே மக்கள்  பலியானார்கள்!

பாஜக ஆட்சியில் தான் மணிப்பூர் இன்றைக்கு பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. தீவிரவாதத் தாக்குதல்களில் மக்கள் பலியாவதைத் தடுக்க முடியாத பாஜக ஆட்சியைப் புகழ்ந்து பேசி இருக்கின்ற ஆளுநர் அவர்கள் அமைதிப் பூங்காவாக இருக்கின்ற தமிழ்நாட்டைத் தீவிரவாத மாநிலம் என்று திமிரெடுத்துப் பேசியிருக்கிறார்.

அவருடைய திமிரை அடக்க வேண்டும்; இக்கட்டான சூழல்களில் எல்லாம் தன்னுடைய தேசப்பற்றைக் காட்டி, நம்முடைய படை வீரர்களுக்கு அதிக அளவில் நிதி உதவி வழங்குவது நம்முடைய தமிழ்நாடுதான்! அப்படிப்பட்ட தமிழர்களை தேச விரோதிகளாகச் சித்தரிக்கின்ற ஆளுநரின் பேச்சு என்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

பா.ஜ.க.வுக்கு வாக்களிக்காதவர்கள்
எல்லாம் தீவிரவாதிகளா?

பாஜகவுக்கு வாக்களிக்காதவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்பது போல பேசுகிறார்; அவர் வகிக்கின்ற அரசியல் சாசனப் பொறுப்புக்குத் துளியும் பொருத்தமற்ற, தகுதியற்ற, தரக்குறைவான பேச்சு இது!” என்று நேற்று ஈரோடு மாவட்டத்தில் ஆற்றிய உரையில் தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகளும், பேச்சுகளும் தமிழ்நாடு அரசுக்கும், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், தமிழ் நாட்டின் வளர்ச்சிக்கும். விரோதமாக இருப்பது –  அவர் வந்தது முதலே  நடந்து  கொண்டிருக்கிறது. தமிழ் மக்கள் தங்களது கடுமையான கண்டனத்தை ஆளுநர் ஆர்.என்.ரவிக்குத் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், ஒன்றியத்தை ஆளும்  பாஜக அரசு தனக்கு என்ன கட்டளையிட்டதோ, எத்தகைய குழப்பங்களை விளைவிக்க வேண்டும் என்று ஆணையிட்டதோ அவற்றை நோக்கி செயலாற்றுவதே தன்னுடைய முதல் கடமை என்று பாஜக ஆளுநர் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டின்மீது தவறான பிரச்சாரத்தை ஒரு பக்கத்தில் பிரதமர் மோடி பேசிக் கொண்டுள்ளார்

தமிழ்நாட்டின் மீது தவறான எண்ணத்தை ஒடிசாவிலும், பீகாரிலும் இந்திய பிரதமர் மோடி உருவாக்குகிறார். அமைதிப் பூங்காவாகத் திகழும் தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு, தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தைச் சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கும் ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் இழித்துரைப்பதையும், பொய்யுரைப்பதையும், தமிழர்களின் சுயமரியாதையைக் குறிவைப்பதையும் ஒருநாளும் பொறுத்துக் கொள்ள முடியாது. இது தந்தை பெரியாரின் தன்மான திராவிட மண்!

4ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும், தீவிரவாதப் போக்குடையவர்கள், பிரிவினைவாதிகள் என்றெல்லாம் அவதூறு பேசும் ஆளுநரைக் கண்டித்து, திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் டிசம்பர் 4 ஆம் தேதி அன்று  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒத்த கருத்துள்ள தோழமைக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆர்ப்பாட்டத்தை நடத்த மாவட்ட கழகத் தோழர்கள் ஆவன செய்ய வேண்டும். சென்னையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமையேற்கிறேன். தோழர்களே ஆயத்தமாவீர்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

 

27.11.2025  

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *