சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் நினைவு நாள் இன்று (27.11.2008)
இந்தியாவின் அரசியலிலும் சமூக நீதிக்கான போராட்டத்திலும் வலுவான வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனையை ஏற்படுத்தியவர் விஸ்வநாத் பிரதாப் சிங் (வி.பி. சிங்). இந்தியாவின் ஏழாவது பிரதமராகப் பணியாற்றிய இவரது நினைவு நாளில், இந்திய வரலாற்றில் குறிப்பாக தமிழ்நாட்டின் சமூகநீதி இயக்கங்களுடன் அவரது பிணைப்பை, நினைவு கூர வேண்டியது அவசியம்.
வி.பி. சிங் மற்றும் மண்டல் ஆணையம்
வி.பி. சிங், சமூகநீதிக் காவலராக அறியப்படுவதற்கு முக்கிய காரணம், அவர் தனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றிய துணிச்சலான முடிவுதான். மண்டல் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினார்.
இந்த நடவடிக்கை, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியல், பொருளாதார அதிகாரத்தைப் பெருக்கி, சமத்துவத்தை நோக்கி இந்தியாவை நகர்த்தியது. இது ஆதிக்கவாதிகளுக்கு எரிச்சலூட்டியது. ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க. திரும்பப் பெற்றது.தனது ஆட்சியை இழந்தபோதும், சமூகநீதிக்கான தனது நிலைப்பாட்டில் உறுதியாக நின்றதால், அவர் வரலாற்றில் தனக்கென ஒரு நிரந்தரமான இடத்தைப் பதித்துக்கொண்டார்.
இந்தியாவில் முதன்முறையாகச் சிலை
சமூகநீதிக் கொள்கைகளின் தாயகமாகத் திகழும் தமிழ்நாடு திராவிட மாடல் அரசு, பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக, வி.பி. சிங்குக்கு இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில் (மாநிலக் கல்லூரி வளாகத்தில்) சிலை அமைத்துச் சிறப்பித்தது.
மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமல்படுத்த அவர் ஆற்றிய மகத்தான பணியைப் போற்றும் விதமாகவும், திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கைகளின் நீட்சியாகவும், அவர் பெயரில் அரங்கங்கள், குழந்தைகளுக்குப் ெபயர்கள், நூலகங்கள் தமிழ்நாட்டில் உண்டு.
வி.பி. சிங் தனது பதவிக் காலத்தைவிட, சமூகநீதிக் கொள்கையில் ெகாண்ட உறுதிக்காகவே இன்றும் நினைவு கூரப் படுகிறார்.
அவர் திராவிடர் கழகத்துடன் குறிப்பாக தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களுடன் கொள்கை ரீதியுடனும், நட்புணர்வோடும் பழகியவர் ஆவார்.
சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்களின் நினைவு நாளில் (நவம்பர் 27) ஒன்றிய அரசின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இன்று பயன்பெறும் லட்சக்கணக்கான பிற்படுத்தப்பட்ட இளைஞர்களும், சமூகநீதி உணர்வாளர்களும் நன்றியுடன் அவரை நினைவு கூர்வார்கள்.
