சென்னை, நவ.27- பருவ மழையால் பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித் துள்ளார்.
6 ஆயிரம் நிவாரண முகாம்கள்
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், தமிழகத்தின் டெல்டா மற்றும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நேற்று சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: நீர்த்தேக்கங்களில் உபரிநீர் இருப்பினை முன்கூட்டியே திறத்தல் மற்றும் முறையான நீர் மேலாண்மையின் மூலம் நகரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்படாமல் பாதுகாக்குமாறும் பாதிப்புக் குள்ளாகக்கூடிய தாழ்வான பகுதிகளை தொடர்ந்து கண் காணிக்குமாறும் தேவைக் கேற்ப பொது மக்களை முன் கூட்டியே நிவாரண முகாம்களில் தங்க வைக்குமாறும் மாவட்ட நிர்வாகத்துக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள 122 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையங்களும், 6,033 தற்காலிக நிவாரண முகாம்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அலுவலர்கள் ஒருங்கிணைக்கப் பட்டு பேரிடரை எதிர்கொள்ள அனைத்து உபகரணங்களுடனும் தயார் நிலையில் உள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒரு அணி நெல்லையிலும், ஒரு அணி விழுப்புரம் மாவட்டத்திலும், ஒரு அணி சென்னையிலும் முன்கூட்டியே நிறுத்தப் பட்டுள்ளன. கூடுதலாக 5 அணி அரக்கோணத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஆய்வின்போது, வருவாய் நிர்வாக ஆணையர் எம்.சாய்குமார், துறை செயலர் பெ.அமுதா, பேரிடர் மேலாண்மை ஆணையர் சிஜிதாமஸ் வைத்யன் உடனிருந்தனர்.
