அசாம் மாநிலத்தை ஆளும் பாரதிய ஜனதா கட்சி பலதார மணத்துக்கு எதிராக ஒரு சட்ட முன்வடிவை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகள் வரை சிறை அல்லது அபராதம் வழங்கும் வகையிலும், மீண்டும் மீண்டும் செய்தால் அந்த தண்டனையை இரட்டிப்பாக்கும் வகையிலும் இந்தச் சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இச் சட்டத்தை நேற்று அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிமுகப்படுத்தியுள்ளார். வரவேற்கத்தக்கது போலத் தானே இருக்கிறது! ஆனால், அங்கே தான் இருக்கிறது டுவிஸ்ட்!
வழக்கம் போல, இந்தச் சட்டம் முன் வடிவு இஸ்லாமியர்களைக் குறிவைத்தே கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை இச்சட்டத்தின் சில பிரிவுகள் அம்பலப்படுத்துகின்றன. கிராமத் தலைவர்கள், காஸிகள் (திருமணம் நடத்திவைக்கும் இஸ்லாமிய மத குரு), பெற்றோர்கள் மற்றும் சட்டப்பூர்வ பாதுகாவலர் ஆகியோர் இத்தகைய திருமணங்களைப் பற்றி மறைத்தாலோ, தகவல் தரத் தவறினாலோ அவர்கள் மீதும் இச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனால், இவற்றில் இருந்தெல்லாம் பட்டியலிடப் பட்ட பழங்குடியினருக்கு விலக்கு உண்டு என்று அறிவித்துள்ளது. தலைக்கு ஒரு சீயக்காய்… தாடிக்கொரு சீயக்காயா?
இந்து திருமணச் சட்டத்தின்படி, ஏற்கெனவே பல தார மணம் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். எனினும், அசாமில் பழங்குடியினரில் (மொத்த மக்கள் தொகையில் 12.4%) பெரும்பாலோராக இருக்கும் போடீஸ், மிஷிங்ஸ், ராபாஸ் உள்பட பல பிரிவினர் இந்து மத வளையத்திற்குள் வைக்கப்பட்டிருப்போர் தான்.
அம்மாநிலத்தில் பல பழங்குடிப் பிரிவினரிடையே பலதார மணம் புரியும் வழக்கம் உண்டு. அவர்களின் நம்பிக்கை வழக்கத்தில் தலையிடப் போவதில்லை என்று அந்த அரசு அறிவித்திருக்கிறது. எனவே, அவர்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளதாம். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணை வழங்கும் உரிமையில் தலையிடப் போவதில்லை என்பது சட்டப்படி சரியானதே!
பிறகு யாருக்கு இந்தச் சட்டம்?
ஒன்றிய அளவில், இஸ்லாமியர்களுக்கான சட்டப்படி பல தார மணம் (நான்கு திருமணங்கள் வரை) அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதைத் தான் தண்டனைக்குரிய குற்றமாக இந்தச் சட்டம் முன் வைக்கிறது. எனவே, அசாமின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு உள்ள இஸ்லாமியர்களை நோக்கித் தான் இச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது வெளிப்படையாகும்.
இச் சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவர்கள், அரசு வேலைகளிலோ, அரசின் நிதி உதவி வழங்கப்படும் வேலைகளிலோ சேர முடியாது. அரசின் நலத் திட்டங்களில் பயன் பெற முடியாது. மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களிலும் போட்டியிட முடியாது என்கிறது இந்த சட்ட முன்வடிவு.
அடுத்து அங்கே தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இஸ்லாமியர்களை ஒடுக்கும் சட்டத்தைக் கொண்டு வந்து ஹிந்து வாக்காளர்களை ஒருமுனைப் படுத்த முயற்சிப்பதாக பா.ஜ.க. மீது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும் குற்றம் சாட்டுகின்றன.
பலதார மணம் செய்துவிட்டு எந்த பெண்ணையும் இனி எந்த ஆணும் கைவிட்டு விட்டுப் போக முடியாது என்கிறது அசாம் பாஜக அரசு.
ஆடு நனையுதேன்னு அழற ஓநாய்களை இந்த நாடு இப்பத் தானா பார்க்குது?
