பெரம்பலூர், நவ.26- தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலிடம் பெறும் விவசாயிக்கு ரூ. 5 லட்சம் ரொக்கப்பரிசு, தங்கப்பதக்கம் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
விவசாயிகளின் நலனுக்காக தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பம்பு செட் குறித்த அறிவிப்புகள் விவசாயிகள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகின்றன..
அரசு தரும் மானியம்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிணற்றுக்கு புதிய மின் மோட்டார் பம்புசெட் வாங்குவதற்கு, குறைந்தபட்சம் 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயி களுக்கு இத்திட்டத்தில் மானியம் வழங்கப்படுகின்றன. மொத்த தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.15,000/- இவற்றில் எது குறைவோ அந்த தொகையே பின்னேற்பு மானியமாக தரப்படுகிறது..
அதேபோல விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவே பயிர் விளைச்சல் போட்டிகளையும் அரசு நடத்தி வருகிறது.. மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் இதில் நடத்தப்படுகின்றன.
பயிர் விளைச்சல்போட்டி
வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டத்தில், கேழ்வரகு. கம்பு, துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, எள், கரும்பு போன்ற பயிர்களில், பயிர் விளைச்சல் போட்டிகள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் நடத்தப்பட உள்ளன. போட்டியில் விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் பங்கு பெறலாம்.
இதில், மாவட்ட அளவிலான நெல், பச்சைப்பயறு மற்றும் நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படும்.
மாநில அளவிலான போட்டி
அதேபோல மாநில அளவில் திருந்திய நெல்சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவிலான பயிர்விளைச்சல் போட்டி, ஆண்டு தோறும் வேளாண் துறை மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து மாநிலத்திலேயே அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு “சி.நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது” சிறப்பு பரிசாக ரூ.5 லட்சம் மற்றும் ரூ.7,000 மதிப்புள்ள பதக்கம் ஆகியவை தமிழ்நாடு முதலமைச்சரால் வழங்கப்படும்
2 ஏக்கர் நிலம் – 50 சென்ட்டில்
பயிர் அறுவடை
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு விவசாயிகளுக்கு சில விதிமுறைகள், தகுதிகள் உள்ளன.. குறிப்பாக, இதற்கு போட்டியில் பங்கேற்க விவசாயிகள் குறைந்த பட்சம் 2 ஏக்கரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிர் சாகுபடி செய்தவராக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே சாகுபடி செய்திருக்க வேண்டும். 50 சென்ட்டில் பயிர் அறுவடை மேற்கொள்ளப்படும். விவசாயிகள் ரூ.150 பதிவு கட்டணம் செலுத்த வேண்டும். நில உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். ஒரு முறை பரிசு பெறும் விவசாயி அடுத்த 3 ஆண்டுக்கு போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அறுவடை செய்யும் தேதியை 15 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட வட்டார வேளாண் உதவி இயக்குநர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
வெற்றியாளர்களை அறிவிப்பதில் சென்னை வேளாண்மை இயக்குநர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியாகும். டிசம்பர் கடைசி வரை பதிவு செய்யலாம். மேலும் விபரங்களுக்கு விவசாயிகள் தங்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
