லால்குடி ஜாதி ஒழிப்பு மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

7 Min Read

* ஸநாதனக் கண்ணோட்டத்தில் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் தொழிலாளர் விரோத சட்டத்திற்குக் கண்டனம்!
* மேகதாது அணையைக் கட்ட கருநாடகத்திற்கு அனுமதியளிக்கக் கூடாது!
* ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு!
* இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் ‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது’ என்ற சரத்துக்குப் பதிலாக
‘ஜாதி ஒழிக்கப்படுகிறது’ என்று திருத்திடுக!
ஒன்றிய அரசு இதனைச் செய்யாவிடின்
கழகத்தின் சார்பில் அறப் போராட்டங்கள் தொடரும்!

லால்குடி, நவ.26 இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ‘தீண்டாமை ஒழிக்கப்படுகிறது’ என்பதற்குப் பதிலாக, ‘ஜாதி ஒழிக்கப்படுகிறது’ என்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தும் தீர்மானம் உள்பட முக்கிய பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

லால்குடியில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் இன்று (26.11.2025) நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க மாநாடு, ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  வருமாறு:

தீர்மானம் எண் 1:

வீரவணக்கம்! வீரவணக்கம்!

பிறவி இழிவைக் கற்பிக்கும் வர்ணாசிரமத்தின் விளைச்சலான ஜாதியை ஒழிப்பதற்காகத் தந்தை பெரியாரின் கட்டளையை ஏற்று, ஆயிரக்கணக்கில் களத்திற்கு வந்து, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஜாதியைப் பாதுகாக்கும் பிரிவுகளைக் கொளுத்திச் சிறை சென்று, தங்கள் இன்னுயிரை இழந்தவர்கள், தனிப்பட்ட வாழ்க்கையை விட இந்நாட்டு வெகு மக்களின் விடுதலையே முக்கியமானது என்ற நோக்கில் சிறைப்பட்டவர்கள், ஜாதி ஒழிப்புப் போராளிகள் அனை வருக்கும் இந்த மாநாடு தனது வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. இழிவை ஒழிக்கும் போரினிலே என்றும் பெரியார் வழி நடப்போம்; அழிவை அணைக்க நேர்ந்தாலும் அய்யா கொள்கை மலர வைப்போம் என்ற உறுதிமொழியை இம்மாநாடு எடுத்துக் கொள்கிறது.

தீர்மானம் எண் 2:

அரசியலமைப்புச் சட்டத்திலேயே
“ஜாதி”யை ஒழிக்க வேண்டும்
!

1973 டிசம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் சென்னையில் தந்தை பெரியார் கூட்டிய “தமிழர் சமுதாய இழிவு ஒழிப்பு மாநாட்டில்” நிறைவேற்றப்பட்ட “ஜாதி என்பது எந்த இடத்திலும் இல்லாது செய்யப்பட வேண்டும்; நடப்பிலும் இல்லாது பார்த்துக் கொள்ளப்பட வேண்டும்; ஜாதி உணர்ச்சி அறவே மறையும்படிச் செய்ய வேண்டும். இதனை வெறும் மனமாற்றத்தால் மட்டுமே செய்ய முடியுமென்று தத்துவார்த்தம் பேசி காலங்கடத்தாமல், “தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; அதனை எந்த ரூபத்தில் கடைப்பிடித்தாலும் அது சட்ட விரோதம்” என்று அரசியல் சட்டத்தின் 17-ஆம் விதி கூறுகிறதே, அவ் விதியில் உள்ள “தீண்டாமை” (Untouchability) என்பதற்குப் பதிலாக “ஜாதி” (Caste) என்ற சொல்லை மாற்றி, ஜாதி ஒழிப்பை அரசியல் சட்டமே பிரகடனப்படுத்த வேண்டும்” என்ற தீர்மானத்தை இந்த மாநாடு மீண்டும் முன்மொழிந்து வலியுறுத்துவதுடன், அரசியலமைப்புச் சட்டத்திலேயே ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, அறப் போராட்டங்களில் ஈடுபடுவதென இம் மாநாடு தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3:

ஸநாதன ஆபத்து நுழையாமல்
தொழிலாளர் சட்டங்களைப் பாதுகாப்போம்!

“உழைப்பு என்பது வாழ்வாதாரத் தேவை மட்டுமல்ல; சமூக ஒற்றுமையையும், கூட்டு முன்னேற்றத்தையும் நிலை நிறுத்த உதவும் ‘புனிதமான’ மற்றும் தார்மீக அம்சமும் கொண்டது என்ற இந்திய பாரம்பரியத்தின் படி நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டுவரப்படும்” என்று ஒன்றிய அரசு விடுத்துள்ள அறிவிப்பு கடும் கண்ட னத்துக்குரியதாகும்.

உழைப்பை வழங்கும் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்கும், உரிமைகளுக்கும் எதிராக வர்ணாசிரமத்தை நிலை நிறுத்தச் செய்யும் வகையில் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பாஜக அரசு கொண்டுவரும் இச் சட்டங்களை நாடு தழுவிய அளவில் தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டும் என்று இந்த மாநாடு கேட்டுக்கொள்கிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டத்தின் விளைவாக நாம் பெற்றுள்ள தொழிலாளர் உரிமைச் சட்டங்களின் அடிப்படையைத் தலைகீழாக ஒருபோதும் மாற்ற விட மாட்டோம் என்றும் இந்த மாநாடு திட்டவட்டமாக அறிவிக்கிறது!

தீர்மானம் எண்: 4

நேரடி நெல் கொள்முதலுக்கான
“ஈரப்பத அளவை” அதிகரிக்க வேண்டும்!

‘நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயி களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்வதற்கான நெல்லின் ஈரப்பத அளவு 17 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும்’ என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளது. வேளாண் புரட்சியால் தமிழ்நாட்டில் நெல் விளைச்சல் அதிகமாக ஏற்பட்ட நிலையில் இயற்கைச் சூழல்கள், காலநிலை, பருவ நிலை மாற்றங்களின் விளைவால், மழை அதிகம் பெய்கிறது. இதனால் நெல்லைக் காய வைப்பதற்கு வசதியற்ற டெல்டா விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விளைந்த நெல்லை வீணாக்காமல் காக்க வும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஈரப்பத அளவை அதிகரிக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசை இந்த மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 5

தமிழ்நாட்டு விவசாயிகளின்
உரிமையைக் காப்போம்!

மேகதாது அணைப் பிரச்சினையில் சட்டத்திற்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கும் விரோதமாக அணை கட்ட வேண்டும் என்று முயற்சி எடுக்கும் கருநாடக அரசின் செயல்பாடுகள் சரியானவை அல்ல; காவிரி நதிநீர்ப் பிரச்சனையில் நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின் எட்டப்பட்டுள்ள நியாயமான நதிநீர்ப் பகிர்வை செயல்படுத்துவதை விட்டுவிட்டு, தமிழ்நாட்டு விவசாயிகளைப் பாதிக்கும் இத்தகைய திட்டங்களை ஒருபோதும் கர்நாடக அரசு மேற்கொள்ளக்கூடாது என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. அப்படி மேற்கொள்ளப்பட்டால் அதை தடுக்க தமிழ்நாடு அரசு எடுக்கும் சட்ட ரீதியான முயற்சிகளுக்கு துணை நிற்பது என்றும் இம்மாநாடு முடிவு செய்கிறது.

தீர்மானம் எண்: 6

ஆணவப் படுகொலை தடுப்புச் சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு 

ஜாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பெரும் அச்சுறுத்த லாக விளங்கும் ஆணவப் படுகொலைகள், ஜாதி மறுப்பு இணையரின் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் கொண்டு வருவதற்கு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டில் திராவிடர் கழகம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பதின்மூன்றே நாட்களில் அச்சட்டத்தைக் கொண்டு வருவதற்கென ஓய்வு பெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.எம்.பாஷா அவர்கள் தலைமையிலான ஆணையத்தை அமைத்துள்ள தமிழ்நாடு திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை இந்த மாநாடு வெகுவாகப் பாராட்டுகிறது.

தீர்மானம் எண்: 7

தெருக்களில் ஜாதிப் பெயர் நீக்கம் –
‘காலனி’ பெயர் நீக்கம் – பாராட்டு!

தெருக்களில், மக்கள் வசிப்பிடங்கள், சாலைகளின் பெயர்களில் ஜாதி பெயர் நீக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியை அடையாளப்படுத்தும் வகையி லான காலனி என்ற சொல் நீக்கம் ஆகியவை ஜாதி ஒழிப்புப் பணியில் தமிழ்நாடு அரசின் மிக முக்கியமான முன்னெடுப்புகள் ஆகும். ஒவ்வொரு மனிதனின் பெய ருக்குப் பின்னாலும் ஒட்டிக் கிடந்த ஜாதி பெயரொட்டை ஒழித்துச் சுயமரியாதை இயக்கம் ஆற்றிய சாதனையின் நீட்சியாக, அதன் நூற்றாண்டு விழாவுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையிலான இந்த அறிவிப்பு பாராட்டி வர வேற்கத்தக்கதாகும். ஜாதியற்ற சமுதாயம் படைக்கும் பணியில் தமிழ்நாடு அரசின் இத்தகைய முயற்சிகளை இந்த மாநாடு பாராட்டி வரவேற்கிறது.

தீர்மானம் எண்: 8

கல்வி நிலையங்களில்
ஜாதி ஒழிப்புப் பிரச்சாரம் அவசியம்

பள்ளிகளிலும், கல்வி நிலையங்களிலும் ஜாதி அடையாளத்துடன் மாணவர்கள் கைகளில் கயிறு கட்டுதல், ஜாதியாக அணி சேர்தல் ஆகியவற்றை முற்றாகத் தடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்கான தமிழ்நாடு அரசின் முயற்சிகளை எவர் தடுத்தாலும் ஒருபோதும் அதில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. பள்ளி மாணவர்க ளிடையே சமத்துவ எண்ணத்தை வளர்க்கும் வகையில் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி ஆதரவு பரப்புரையைக் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் வாயிலாக மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அனுமதிக்க வேண்டும் என்று இம் மாநாடு கேட்டுக்கொள்கிறது.

பாடத்திட்டத்தில் சமூக நீதிக் கருத்துகளையும், சமூகப் புரட்சி வரலாற்றையும் மாணவர்களுக்குச் சொல்லும் பாடங்களுக்கு முக்கியத்துவம் தந்து, அவர்கள் மனதில் பதியும் வகையில் புகட்ட வேண்டும் என்று தமிழ்நாடு அரசை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 9

பேரிடர் நிவாரணம்!

கடுமையான இயற்கைச் சூழல்களின் காரணமாக புயல், மழை, வெள்ளம் ஆகியவற்றால் பேரிடர்கள் அதிகப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவமழைக் காலங்களில் இத்தகைய பேரிடர்களுக்கு அதிக அளவு இலக்காகும் தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசை இம்மாநாடு கண்டிக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் தேசிய பேரிடர் நிதியிலிருந்தும் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒதுக்க வேண்டிய போதுமான தொகையை ஒதுக்காமல், தமிழ்நாட்டை வஞ்சிக்கும் செயலை ஒன்றிய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்; அனைத்து மாநிலங்களையும் ஒரு நிலையில் வைத்து பார்க்கும் பக்குவத்தை, ஆளும் பாஜக அரசு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண் 10:

‘பெரியார் உலக’த்துக்கு நன்கொடை

திருச்சி சிறுகனூரில் உருவாகிவரும் ‘‘பெரியார் உலகம்” என்னும் நமது லட்சியத் திட்டத்திற்கு தமிழ்ப் பெருமக்களும், சமூகநீதி உணர்வாளர்களும் தமது நன்றி உணர்வை வெளிக்காட்டும் வகையில் தாராள மாக நன்கொடை அளித்து உதவிட வேண்டும் என்று அனைவரையும் இம் மாநாடு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *