பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகத்தில்
சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழாவில் வேந்தர் கி.வீரமணி அறிவிப்பு
படம் 1: ‘‘ஸநாதனம் அறிவோம்’’ புத்தகம் எழுதிய தினகர ஞானகுருசாமி அவர்களுக்குரிய விருதினை ஊடகவியலாளர் அழகிரிசாமி பெற்று கொண்டார். படம் 2: ‘‘பெரியவன்’’ நாவலுக்காக விருது பெறுகிறார் எழுத்தாளர் சுந்தரபுத்தன். படம் 3: கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (நிதி) மற்றும் மாநிலக் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்களுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொன்னாடை அணிவித்தார்.
படம் 4: புரட்சிக் கவிஞர் விழாவில் சிறப்புரை நிகழ்த்திய கருநாடக தமிழ் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் முத்துமணி நன்னன் அவர்களுக்குத் துணைவேந்தர் நினைவு பரிசு வழங்குகிறார்.

தஞ்சை, நவ.26 2026 ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா – இயல், இசை, நாடக விழாவாகக் கொண்டாடப்படும் என்று பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழக வேந்தர் கி.வீரமணி அறி வித்தார்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழ கத்தில் இரு சிறந்த நூல்களுக்கு விருது வழங்கும் விழா இன்று (26.11.2025) அன்று நடைபெற்றது.
‘‘பெரியவன்’’ என்ற புதினத்திற்காக எழுத்தாளர் சுந்தர புத்தன் அவர்களுக்கும்,
‘‘ஸநாதனம் அறிவோம்’’ என்ற நூலுக்காக தினகர ஞானகுருசாமி அவர்களுக்கும் விருது வழங்கப்பட்டது.

விருதினை வழங்கி பல்கலைக்கழக வேந்தர் கி. வீரமணி உரையாற்றும்போது, ‘‘ஸநா தனத்தின் விதிகளை பற்றி பழைமையான நூல்களில் உள்ள விளக்கங்களை அடிப்ப டையாகக் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டி ருக்கிறது.
பெரியவன் நாவல் எழுதிய சுந்தரபுத்தன் சிறந்த எழுத்தாளர். ஒரு பகுதி நேர செய்தி யாளரின் வாழ்வையும், கிராமத்தின் கதையை யும் யதார்த்தமாக பதிவு செய்கிறது. பொதுவாக நாவல்களில் கற்பனை இருக்கும். ஆனால், பெரியவன் நாவலில் ஒப்பனை இல்லாமல் யதார்த்தம் இருக்கிறது. இலக்கியச் செறிவு உள்ள நூல்’’ என்று குறிப்பிட்டார்.
2026 ஏப்ரல் 29 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா பெரியார் மணியம்மை (நிகர்நிலை) பல்கலைக்கழகத்தில் இயல், இசை, நாடக விழாவாகக் கொண்டாடப்படும் என்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆசிரியர் கி.வீரமணி அறிவித்தார்.

விழாவில் ஏற்புரை வழங்கினார் சுந்தர புத்தன். கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் (நிதி) மற்றும் மாநிலக் கல்லூரி முதல்வர் இரா. இராமன் வாழ்த்துரை வழங்கி உரையாற்றினார்.
முத்துமணி நன்னன், புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் விழா உரை நிகழ்த்தினார்.
விழாவிற்குப் பல்கலைக்கழகத்தின் இணைத் துணை வேந்தர் முனைவர் இரா. மல்லிகா தலைமை வகித்தார். மாணவி சிறீநிதி வரவேற்புரை நல்க, மாணவி சிறீ அமிர்த வர்ஷினி நன்றியுரை கூறினார்.
