சென்னை, நவ.25- சென்னை பெரம்பூரில் ரூ.340 கோடி மதிப்பில் 4ஆவது ரயில் முனையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஒப்புதல் கிடைத்து விரைவில் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் ஏற்கெனவே சென்ட்ரல், எழும்பூர், தாம்பரத்தில் ரயில் முனையங்கள் அமைந்துள்ளன.
ரயில் முனையம்
தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் விரைவு ரயில்கள் பெரும்பாலும் எழும்பூர், தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களிலிருந்தும், வடமாநிலங்கள் மற்றும் தமிழ் நாட்டின் மேற்கு மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்தும் புறப்பட்டு திரும்புகின்றன. இந்த ரயில் நிலையங்கள், பெட்டிகள் பராமரிப்பு வசதியுடன் செயல்படுவதால் ரயில் முனையமாகத் திகழ்கின்றன.
மேலும் இந்த நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள் எண்ணிக்கை நாள்தோறும் உயர்கிறது. குறிப்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தினசரி சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
எனவே கூட்ட நெரிசலைக் குறைக்க புதிய ரயில் முனையம் அமைக்கும் முயற்சி எடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சால்ட் கோட்டார்ஸில் உள்ள இடத்தைப் பயன்படுத்த ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் அந்த இடம் நிராகரிக்கப்பட்டது.
4ஆவது ரயில் முனையம்
இதற்கிடையில் சென்னையின் 4ஆவது ரயில் முனையமாக பெரம்பூர் ரயில் நிலையத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் கடந்த ஆண்டு டிசம்பரில் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரைக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து, பெரம்பூர் ரயில் நிலையத்தை 4ஆவது முனையமாக மாற்றுவதற்காக ரூ.340 கோடியில் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, ரயில்வே வாரியத்துக்கு 3 மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுதவிர பெரம்பூர் – அம்பத்தூர் இடையே 6.4 கி.மீ. தொலைவுக்கு 5, 6ஆவது புதிய பாதைகள் ரூ.182 கோடியில் அமைக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே வாரியத்திடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செயல்முறை நடைபெற்று வந்தது.
இப்போது அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்து விட்டன. விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது: பெரம்பூரில் போதிய நிலம் இருப்பதால் இங்கு ரூ.340 கோடியில் 4ஆவது புதிய முனையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பினோம். ரயில் நிலையத்தின் கூடுதல் வசதிகளுக்கான அமைவிடங்கள், பார்சல் அலுவலகங்கள், வாகன நிறுத்த வசதி, வணிக வளாகப் பகுதிகள், சுற்றுச் சுவர்கள், மேம்படுத்தப்படும் நுழைவாயில்கள் உள்ளிட்ட விவரங்களை இணைத்து அனுப்பினோம்.
இதைத்தொடர்ந்து, ரயில்வே வாரியத்திடம் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் செயல்முறை நடைபெற்று வந்தது. இப்போது அனைத்து செயல்முறைகளும் நிறைவடைந்துவிட்டன. விரைவில் ஒப்புதல் கிடைத்து, பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம். பெரம்பூரில் தற்போது 4 நடைமேடைகள் உள்ளன. ரயில் முனையமாக மாறும்போது, கூடுதலாக 3 நடைமேடைகள் அமைக்கப்படும். 2 முதல் 3 ஆண்டுகளில் இந்த புதிய முனையத்தை கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
