
மழைக்காலம் என்றாலே வாடைக் காற்று வீசி உடலையும், உள்ளத்தையும் சிலிர்க்க வைக்கும்.
மழைக்காலத்தில் பலத்த மழை பெய்தால் கிருமிகள் தேங்காமல் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
தேங்கி நிற்கும் தண்ணீரில் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்கள் பெருக்கத்திற்கு வழிவகுக்கும்.
கொசுக்கள் உருவாகி அவை விரைவாக முட்டை போட்டு இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவுகின்றன.
சுகாதாரமற்ற தண்ணீர், சுகாதாரமற்ற முறையில் உண்ணும் உணவுகள் மூலம் டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு காய்ச்சல், உடல் பலவீனம், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.
தற்போது, அனைவரும் ‘பாஸ்ட்புட்’ உணவு, ஜங்புட் உணவினை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தடவை உபயோகித்த எண்ணெய்யை மறுபடியும் உபயோகிப்பதால் அவை சரியாக ஜீரணம் ஆகாமல் வியாதிக்கு வழிவகுத்து விடுகிறது.
எலிகள் மூலமாகவும் நோய் பரவுகின்றது. காய்கறிகள் மீது எலிகள் சிறுநீர் கழித்து விடுகின்றன. அவற்றை சுத்தமான நீரில் நன்றாக கழுவிய பின்னரே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
காய்ச்சல், தலைவலி வந்தால் சுய வைத்தியம் பார்க்கக் கூடாது. மருத்துவர்கள் ஆலோசனை பெற்று அவரது பரிந்துரையின் பேரிலே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
தானாக மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும்போது அவை ரத்தத்தில் கலந்துவிடும். திரும்பவும் காய்ச்சல் வந்தால் மருத்துவரை அணுகும்போது அவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகள் பலனளிக்காத நிலை ஏற்பட்டு விடும்.
தடுப்பூசி
மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
நமது வீட்டில் வளர்க்கும் நாய், பூனை, புறா, கிளி போன்ற வளர்ப்புப் பிராணிகளை தூக்கிக் கொஞ்சி அதற்கு முத்தம் கொடுக்கிறார்கள். அப்படி செய்தால் கைகளை நன்றாகக் கழுவிக்கொள்ள வேண்டும்.
வீட்டு வளர்ப்புப் பிராணிகள் கழிவுகள் மணலில் இருக்கலாம். குழந்தைகள் மணலில் விளையாடும்போது அது குழந்தைகளை தொற்றிக்கொன்று, அதன் மூலம் பிறரிடம் பரவ வாய்ப்புள்ளது. பெற்றோர்கள் இதை நன்கு கவனிக்க வேண்டும். ஆண்களைவிட பெண்கள்தான் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை கவனித்து வளர்ப்பதில் பெண்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாலும் இன்புளூயன்சா எனப்படும் புளூ காய்ச்சல் மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
குளிர்ந்த தண்ணீர், சுதாதாரமற்ற குடிநீர் மற்றும் குளிர்பானங்களை குடிக்கக் கூடாது. இதன் காரணமாக தொண்டை வலி வரும்.
ஆஸ்துமா பாதிப்புள்ளவர்களும் அதிகம் சிரமப்படுவர். இந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை பெறுவதுடன் போதிய ஓய்வும் அவசியம். அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.
தடுப்பு முறைகள்
மழைக்காலத்தில் உடல் நலனைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கொதிக்க வைத்த வெதுவெதுப்பான வெந்நீரைக் குடிக்க வேண்டும்.
பழங்கள் மற்றும் கீரைகள், காய்கறிகளை நன்கு கழுவிய பிறகு பயன்படுத்த வேண்டும்.
சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதும், குப்பைகளை முறையாக அப்புறப்படுத்துவதும் அவசியம்.
தடுப்பூசிகள் மற்றும் நோய்த் தடுப்பு பற்றி மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து அதன்படி செயல்பட வேண்டும்.
கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வீட்டுக்கு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டு ஜன்னல்களில் கொசு வலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
மழை நீரில் நனைந்தால் ஈரம் போக நன்றாக துடைக்க வேண்டும்.
