மக்கள் நல்வாழ்வுத் துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை என்ற நிலை எட்டப்படுகிறது

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாகர்கோவில், நவ.24– குமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் புத்தளம் எல்.எம்.பி.சி. மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 22.11.2025 அன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம் நடந்தது. இந்த முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு நிகழ்வைத் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் இதுவரை நடைபெற்ற 561 முகாம்களிலும் 35 ஆயிரத்து 721மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றவர்கள் எல்லாம் இன்றைக்கு அரசு மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ள தொடங்கியதன் விளைவாக அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மக் கள் நல்வாழ்வுத்துறையின் வரலாற்றில் எப்போதுமே இல்லாத அளவுக்கு காலிப்பணியிடங்கள் இல்லை என்கிற நிலையை எட்ட இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

அரசு மரியாதையுடன்

கவிஞர் ஈரோடு தமிழன்பன் இறுதி நிகழ்வு நடந்தது

சென்னை, நவ. 24– சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழறிஞரும், கவிஞருமான  ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக்குறைவால் சென்னை யில் நேற்று முன்தினம் (22.11.2025) மறைவுற்றார். அவருடைய உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தி, இரங்கல் அறிக்கையையும் வெளியிட்டார். தமிழறிஞர் ஈரோடு தமிழன்பன் உடலுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் ஈரோடு தமிழன்பனின் தமிழ்த் தொண்டை கவுரவிக்கும் விதமாக காவல் துறை மரியாதையுடன் அவரது உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (23.11.2025) அறிவித்தார்.

அதன்படி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மின்மயானத்தில் ஈரோடு தமிழன்பனின் உடல் காவல் துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க எரியூட்டப்பட்டது. அவருடைய இறுதி நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

 

கட்டாயப்படுத்தி
திருமணம் செய்வதா?

தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் வெளியேறினார்

நாகர்கோவில், நவ. 24– குளச்சல் அருகே திருமணமான 18 நாளிலேயே தாலியை கழற்றி வைத்து விட்டு புதுப்பெண் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுப்பெண்

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள செம்பொன்விளை கேசவன் சேரி விளையை சேர்ந்தவருக்கு 31 வயது ஆகிறது. வெளிநாட்டில் வேலை பார்த்த இவர் தற்போது மணவாளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் கடந்த 3ஆம் தேதி திருமணம் நடந்தது. பிறகு மணமக்கள் இருவரும் உறவினர் வீடுகளுக்கு விருந்துக்கு சென்றபடி இருந்தனர். இந்த நிலையில் திருமணமாகி 18ஆவது நாளன்று (21.11.2025) மாலையில் புதுப்பெண் திடீரென காணாமல் போனார். அந்த சமயத்தில் வெளியே சென்று வீடு திரும்பிய வாலிபரின் தாயார், மருமகளை காணாமல் பயந்து போனார்.

திடீர் மாயம்

மேலும் தனது மகனுக்கு நடந்த விவரத்தை கூறி வீட்டுக்கு வரவழைத்தார். இதனை தொடர்ந்து இருவரும் பல இடங்களில் தேடினர். ஆனால் அவரை பற்றி எந்த வொரு தகவலும் இல்லை. புதுப்பெண்ணின் கைப்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதே சமயத்தில் வீட்டில் தேடிய போது தாலி செயின் மட்டும் இருந்தது. இதனால் தாலியை புதுப்பெண் கழற்றி வைத்து விட்டு சென்றிருக்கலாம் என நினைத்தனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் வாலிபரின் கைப்பேசிக்கு வாட்ஸ்-அப் மூலமாக அவரது மனைவி குறுந்தகவல் (வாய்ஸ் மெசேஜ்) ஒன்று அனுப்பினார்.

குறுந்தகவலால் கணவர் அதிர்ச்சி

அதில், விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டனர். உங்களை ஏமாற்றியதற்கு என்னை மன்னித்து விடுங்கள். என்னை தேடாதீங்க, நான் வரமாட்டேன். தாலியைகூட வேண்டாம் என்று கழற்றி வைத்து விட்டு வந்து விட்டேன். என்னால் உங்க கூட சந்தோசமாக வாழ முடியல ‘ப்ளீஸ்’ என்று அனுப்பி உள்ளார். இதனால் இளம்பெண்ணின் கணவர் அதிர்ச்சி அடைந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்செந்தூர் கோவிலில் குத்தாட்டமாம்!

திருச்செந்தூர், நவ.24- திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் 6 பேர் கொண்ட வாலிபர்கள் அண்மையில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் பட்டப்பகலில் சினிமா பாடலுக்கு குத்தாட்டம் போட்டு இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர்.

இந்த காட்சிப் பதிவு வைரலாக பரவி வரும் நிலையில் பக்தர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில் வளாகத்தில் இளம்பெண் ஒருவர் சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ காட்சிப் பதிவு எடுத்து அவரது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

அதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில் தற்போது மீண்டும் இதுபோல் இளைஞர்கள் ‘ரீல்ஸ்’ எடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *