இந்த சாயிபாபாவுக்குத்தான் அரசு சார்பில் நூற்றாண்டு விழாவாம்!-மின்சாரம்

6 Min Read

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)

புட்டபர்த்தி சாயிபாபா நூற்றாண்டு என்ற பெயரில் ஊடகங்கள் எல்லாம் தலையில் தூக்கி வைத்து ஆடுகின்றன.

ஒன்றிய பிஜேபி அரசு அவருக்கு நினைவு அஞ்சல் தலை வெளியிடுகிறது, ரூபாய் நாணயம் வெளியிடுகிறது. பிரதமரே நேரில் விழாவில் பங்கு கொண்டு பரவசம் அடைகிறார்.

உண்மை என்னவென்றால், சாயிபாபா ஒரு மேஜிக் நிபுணர் அவ்வளவுதான்!

மின்சாரம்

அவர் செய்து காட்டிய அத்தனை மேஜிக் காட்சிகளையும், நமது கழகத் தோழர்களே “மந்திரமா – தந்திரமா?” நிகழ்ச்சிகள் மூலம் பொதுக் கூட்ட மேடைகளிலேயே செய்து காட்டித் தோலுரித்துக் காட்டியிருக்கின்றனர் – காட்டியும் வருகின்றனர்.

ஏதோ இவர் ஒரு கடவுள் அவதாரம் என்றும், அதனால் தான் இதுபோன்ற அற்புதங்களை இவரால் செய்து காட்ட முடிகின்றது என்றும் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மூலம் மக்களை நம்ப வைத்து விட்டனர்.

பொதுவாகவே மக்கள் மத்தியில் பக்திப் போதை ஊட்டப்பட்டு இருப்பதால் இவற்றையெல்லாம் நம்பித் தொலைக்கின்றனர்.

பகவான் சாயிபாபா என்று நம்பி பணத்தையும் கொட்டிக் கொடுக்கிறார்கள். புட்டபர்த்தியாருக்கு மக்களின் அறியாமையால் ஒரு பெரும் ‘சாம்ராஜ்ஜியத்தை’யே உருவாக்கி விட்டனர்.

மின்சாரம்

சாயிபாபாவின் ஏமாற்றுப் போலித்தனத்தின் முகமுடியைக் கிழித்து மக்கள் மத்தியில் தோலுரித்துத் தொங்கவிட்டதில் தனி இடம் உலகப் புகழ் பெற்ற மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்காரையே சாரும்.

சாயிபாபாவை நேரில் சந்திக்க அவர் பலமுறை முயன்றும் சாயிபாபா அதற்கு இடம் தரவில்லை! காரணம் பி.சி.சர்க்கார் யார்? அவர் எத்தகைய மேஜிக் நிபுணர் என்பது சாயிபாபாவுக்கு மிக நன்றாகவே தெரியும்.

விடக் கூடாது என்பதில் பி.சி.சர்க்கார் மிக உறுதியாகவே இருந்தார்.

இதுதான் சாய்பாபாவின் சக்தியோ!

2005ஆம் ஆண்டில் அய்தராபாத்தில் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர், விளையாட்டுக்கு முன் சாயிபாபாவைச் சந்தித்து ‘ஆசீர்வாதம்’ பெற்றார்.

அப்படி புட்டபர்த்தி சாயிபாபாவிடம் ஆசீர்வாதம் பெற்ற சச்சின் டெண்டுல்கர் அந்த ஆட்டத்தில் எடுத்த ஓட்டம் (ரன்) எவ்வளவுத் தெரியுமா?

இரண்டே இரண்டு கண்ணே கண்ணு!

24.11.2025 நாளிட்ட ‘டெக்கான் கிரானிக்கல்’ படத்துடன் சாங்கோபாங்கமாக இதனை வெளியிட்டது!

எப்படி சாய்பாபா சக்தி!

 

ஒரு தந்திரம் செய்தார். தான் ஒரு அசாமைச் சேர்ந்த பணக்கார வியாபாரி என்றும், தனக்கு ஆஸ்துமா வியாதி இருக்கிறது என்றும் கூறி, சாயிபாபாவைச் சந்தித்துக் குணப்படுத்திக் கொள்ள வந்திருக்கிறேன் என்று கூறி, தந்திரமாக உள்ளே சென்றுவிட்டார்! (ஒரு மேஜிக் நிபுணர் எந்த நோக்கத்தோடு வருகிறார் என்பதைக் கூட ‘பகவான்’ (?) சாயிபாபாவால் அறிய முடியவில்லை என்பதை அறிக!)

மின்சாரம்

பி.சி.சர்க்காருக்கு மேஜிக்காரர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பது கைவந்த கலையாயிற்றே!

தங்களைச் சுற்றி தமது ஆட்களை வைத்திருப் பார்கள்; பார்த்தால் பக்தர்கள் போல வேடம் போடுவார்கள்.

சாயிபாபாவைச் சுற்றியுள்ள ஆட்களைப் பார்த்த நொடியிலேயே பி.சி.சர்க்கார் அதனைப் புரிந்துக் கொண்டார்.

சாயிபாபாவை சந்தித்துவிட்டார் பி.சி.சர்க்கார். என்ன பிரச்சினை? என்று சாயிபாபா கேட்க, வந்தவரோ (பி.சி.சர்க்கார்) அசாம், ஹிந்தி மொழிகளைக் கலந்து பேசினார். கடவுள் அவதாரப் புருஷர் என்று விளம்பரப்படுத்தப்பட்ட சாயிபாபாவோ திருதிருவென்று விழித்தார். பகவான் சாயிபாபாவுக்குத் தாம் பேசும் மொழி புரியவில்லை என்பதை அம்பலப்படுத்தத்தானே பி.சி.சர்க்கார்அசாம், ஹிந்தி மொழியைக் கலந்து பேசினார்!

உடனே என்ன செய்தார்கள் சாயிபாபாவின் சீட கோடிகள்? ஒரு மொழி பெயர்ப்பாளரைக் கொண்டு வந்தனர்.

உரையாடல் தொடர ஆரம்பித்தது. “என்னைப் பார்க்க வந்து விட்டீர்கள் அல்லவா? உங்கள் நோய் பறந்தோடிவிடும்” என்று கூறி ஆசிர்வதித்தார்.

விடவில்லை அந்த அசாம் வியாபாரி வேடத்தில் வந்த பி.சி.சர்க்கார்.

“எனக்கு ஏதாவது மந்திர மருந்து தருவீர்களா?” என்று கேட்டார்.

அதெல்லாம் தேவையில்லை என்றார் சாயிபாபா. வந்த வேலை முடியவில்லையே – விடுவாரா பி.சி.சர்க்கார்!

கையை அசைத்து விபூதி தருவீர்களே, அந்தப் ‘பிரசாதத்தையாவது அடியேனுக்குக் கொடுக்கக் கூடாதா?’ என்று கெஞ்சினார்.

சாயிபாபாவின் முகம் சுருங்கிவிட்டது! சிறிது நேரம் தத்தளித்தார் பாபா!

கையை அசைத்து விபூதியை வரவழைப்பது மிகப் பழைய காலத்துத் தந்திரம்! விபூதியை ஒரு பைக்குள் நிரப்பி, கை இடுக்கில் வைத்துக் கொண்டு, மறைந்திருக்கும் அதிலிருந்து ஒரு சிறிய பிளாஸ்டிக் குழாயை (டியூப்)க் கொண்டு வந்து கைகளில் வைத்துக் கொள்வதுதான் அந்தத் தந்திரம்! மறைந்திருக்கும் அந்தச் சிறிய பிளாஸ்டிக் குழாயை அழுத்தினால் விபூதி வரும்.

அன்றைக்குக் கடைசியாக சாயிபாபாவைச் சந்தித்தவர் அந்த அசாம் வியாபாரி வேடத்தில்  இருக்கும் பி.சி.சர்க்கார். மறைத்து வைத்திருந்த பைக்குள்ளிருந்த திருநீறு தீர்ந்துவிட்டது. அதனால் திருநீறைக் கொடுக்க முடியவில்லை; தன்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக் கூர்மையாக நோட்டமிட்டார் பி.சி.சர்க்கார்.

சுதாரித்துக் கொண்டு ‘சூ மந்திரக் காளி!’ என்று கூறி சந்தனத்தைக் கொடுத்தார் சாயிபாபா.

பலகாரத்தைக் கொண்டு வந்த சாயிபாபாவின் சீடர் அந்தத் தட்டில் சந்தனத்தைப் போட்டு, சாயிபாபாவின்  அருகிலேயே வைத்ததையும் கவனித்தார் பி.சி.சர்க்கார். அந்த சந்தனத்தைத்தான் அதிவேகக் கை அசைப்பில் எடுத்துக் கொடுத்தார்.

இதுதான் சந்தர்ப்பம் என்று பி.சி.சர்க்கார் பக்கத்தில இருந்த பலகாரத் தட்டிலிருந்து ரசகுல்லா ஒன்றை வரவழைத்து சாயி பாபாவிடம் கொடுத்தாரே பார்க்கலாம்.

எல்லாருக்கும் அதிர்ச்சி! ஏதோ ஒரு மொழியில் கத்தினார் சாயிபாபா!

“பாபா நீங்கள் ஒரு மேஜிக் நிபுணர்தான்!” இவரும் உரக்கக் கத்தினார். அதற்குமேல் சாயிபாபா ஒன்றும் செய்ய முடியாமல் பக்கத்திலிருந்த ஒரு வழியில் கம்பி நீட்டினார். (ஆதாரம்: ‘இன்பிரிண்ட்’ ஆங்கில மாத இதழ், ஜூன் 1983).

– – – – –

1992 ஆகஸ்டு 29ஆம் தேதி புட்டபர்த்தியில் சிறீ சத்ய சாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹையர் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது.

மருத்துவமனையை பிரதமர் பி.வி.நரசிம்மராவ் திறந்து வைத்தார். அவ்விழாவில் மக்களவை சபாநாயகர் சிவ்ராஜ் பாட்டில், உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான், ஆந்திர சட்டத் துறை அமைச்சர் கே.விஜயபாஸ்கர் ரெட்டி முதலியோர் பங்கு கொண்டனர்.

அவ்விழாவில் பிரதமர் பி.வி.நரசிம்மராவுக்கு தங்கச் சங்கிலி ஒன்றை கையசைத்து வரவழைத்துப் – பரிசளித்தார் சாயிபாபா. இது எப்படி நடந்தது என்பதுதான் சுவாரசியமான செய்தி.

அந்தக் காட்சியை பலரும் வீடியோவில் பதிவு செய்தனர். வீடியோவில் தொலைக்காட்சி நிறுவனத்தினர் ஸ்டுடியோவுக்குள் போட்டுப் பார்த்தபோது, அதிர்ச்சித் தரக்கூடிய அந்த நிகழ்சசி வீடியோவில் பதிவாகி இருந்தது.

புட்டபர்த்தி சாயிபாபாவின் உதவியாளர் மேடையில் சாயிபாபாவிடம் விருந்தினர்களுக்குத் தரவேண்டிய நினைவுப் பரிசை கொடுக்கும்போது, அதனோடு சேர்த்து, தங்கச் சங்கிலி ஒன்றையும் இரகசியமாக வழங்கினார். நினைவுப்பரிசின் கீழ் தங்கச்சங்கிலி இருந்தது வீடியோவில் பதிவாகி விட்டது.

வீடியோவில் தங்கச் சங்கிலி பதிவான செய்தி சாயிபாபாவிடம் தெரிவிக்கப்பட்டபோது, பெரிதும் அதிர்ச்சி அடைந்தார்.

அரசுத் தொலைக்காட்சியிலிருந்து அதனை முற்றிலும் எரித்துவிடக் கோரி சாயிபாபாவிடமிருந்து உத்தரவு பறந்தது. அவ்வாறே எரிக்கப்பட்டது; ஆனால் தனியார் சிலர் எடுத்த வீடியோவிலும் அது பதிவாகி இருந்ததால், சாய்பாபாவின் கபட நாடகம் வெளிச்சத்துக்கு வந்தது. ஆந்திராவிலிருந்து வெளிவந்த ‘டெக்கான் கிரானிக்கல்’ ஆங்கில நாளேடு வீடியோ படங்களுடன் அதனை அம்பலப்படுத்திவிட்டது.

இப்படிப்பட்ட சிகாமணிக்குத்தான் ஒன்றிய அரசின் சார்பில் நூற்றாண்டு விழா களேபரம்! அரசு சார்பில் அஞ்சல் தலை வெளியீடு, சாய்பாபா உருவம் பதித்த ரூபாய் நாணயம் வெளியீடு. பிரதமர் பங்கேற்பு – இத்தியாதி – இத்தியாதி!!

‘பாரத புண்ணிய பூமியில்’, முப்பத்து முக்கோடி தேவர்கள், எண்ணாயிரம் ரிஷிகள், மும்மூர்த்திக் கடவுள்கள் இருப்பதாகத் தம்பட்டம் அடிக்கும் ஒரு நாட்டில் மோசடிகளை அற்புதங்களாகவும், தெய்வ சக்தி வாய்ந்ததாகவும் கொஞ்சம்கூடக் கூச்சநாச்சம் இல்லாமல் வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றனர்! வெட்கக்கேடு!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *