லால்குடி நோக்கி வாருங்கள் தோழர்களே ! ஜாதி ஒழிப்பு த் தீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்! கவிஞர் கலி.பூங்குன்றன்

7 Min Read

இயக்க வரலாற்றில் லால்குடிக்கு என்று தனி வரலாறு உண்டு.

திராவிட விவசாய சங்கம் வீறு நடைபோட்ட பூமி அது!

பார்ப்பனர்களை ஏர் உழ வைத்த மண்!

இடையாற்று மங்கலத்தில் மட்டும் ஒன்பது முறை தங்கினார் தந்தை பெரியார் என்றால் அது என்ன சாதாரணமா?

கரிகால்சோழன் விரும்பித் தங்கும் ஊர் இந்த இடையாற்று மங்கலம்தானாம்!

மன்னர்களால் தானமாகக் கொடுக்கப்பட்டது தான் ‘மங்கலம்’, ‘மங்கலம்’ என்று பெயர் உள்ள ஊர்கள் எல்லாம்.

மூன்று வேதங்கள் படித்தவர்களுக்கு திரிவேதி மங்கலம், நான்கு வேதம் படித்தவர்களுக்குச் சதுர்வேத மங்கலம் என்று ஊர்கள் எல்லாம் பார்ப்பனர்களுக்குத் தானமாகக் கொடுக்கப் பட்டவையே!

இடையாற்று மங்கலத்திற்குப் பெயரே இடையாற்று சதுர்வேதி மங்கலம்தான்.

ஆணவப் படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற
ஆணையம் அமைத்த முதலமைச்சருக்குப் பாராட்டு விழா!

லால்குடியில் நடைபெறவிருப்பது (26.11.2025) ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் 69ஆம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்க மாநாடு மட்டுமல்ல – ஜாதி ஒழிப்பின் முக்கிய அம்சமாக, ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டம் இயற்ற ஆணையம் அமைத்த – திராவிட மாடல் அரசின் நாயகர் நமது மானமிகு மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழாவையும் முக்கியமாக இணைத்திருப்பது மிக மிகப் பொருத்தமானதாகும்.
தந்தை பெரியார் இறுதியாக அறிவித்தது அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான போராட்டம் ஆகும். நமது முதலமைச்சரோ அனைத்து ஜாதியினரிலிருந்தும் 58 பேருக்குப் பணி நியமனம் செய்ததையும் இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும்! 

நிலவுடைமைக்காரர்கள் எல்லாம் பார்ப் பனர்களே! அத்தகைய பூமியிலே தந்தை பெரியார் வழிகாட்டுதல்படி திராவிட விவசாய சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. அதன் விளைவாகப் பெரும் புரட்சியே வெடித்தது!

கோயில் விழாக்கள் நிறுத்தப்பட்டன. கோயில்கள் இழுத்து மூடப்பட்டன. மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி (DRO) நேரில் வந்து கேட்டபோதுகூட ‘எங்களுக்குக் கோயில் விழாக்கள் வேண்டாம்!’ என்று முழக்கம் போட்டனர் என்றால் எத்தகைய புரட்சி!

ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியம் என்று முதல் முழக்கம் போட்டதும் இந்தக் கோட்டத்தில்தான்!

தந்தை பெரியார் போராட்டம் என்று அறிவித்தால் குடும்பம் குடும்பமாக ஆயிரக்கணக்கில் கலந்து கொள்ளும் கருஞ்சட்டைப் பாசறையே லால்குடி வட்டாரம்.

ஜாதியைப் பாதுகாக்கும் சட்ட எரிப்புப் போராட்டத்தை தஞ்சை ‘ஸ்பெஷல்’ மாநாட்டில் அறிவித்தார் தந்தை பெரியார்.

சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதி இருக்கும் நாட்டில் உண்மையான சுதந்திரம் இருக்குமா? என்று தந்தை பெரியார் எழுப்பிய கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை  இல்லவேயில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டம் – அடிப்படை உரிமைகள் பகுதியில் – உட் பிரிவுகள் 13(2) 25(1) 26, 29(1)(2) 368 பகுதிகள் ஜாதியைக் கெட்டியாகப் பாதுகாக்கின்றன.

இந்தப் பகுதிகள் நீக்கப்பட வேண்டும் என்பது தான் தஞ்சை மாநாட்டின் குரல்!

நவம்பர் 3இல் தஞ்சையில் மாநாடு என்றால் ஒன்றிய அரசுக்கு – இந்தப் பகுதிகளை நீக்குவதற்கு ‘வாய்தா’ கொடுக்கப்பட்டு, அதற்குள் இந்திய அரசு நீக்கவில்லை என்றால், ஜாதியைப் பாதுகாக்கும் அந்தப் பகுதிகள் நவம்பர் 26 அன்று பகிரங்கமாக எரிக்கப்படும் என்று அறிவித்தார் தந்தை பெரியார்.

இந்திய அரசு என்ன செய்தது? நியாயமான – மனித உரிமைக்கான தீர்மானம் என்று நினைத்ததா? திருத்தம் செய்யலாம் என்று தீர்மானித்ததா?

அதுதான் இல்லை; சட்டத்தைக் கொளுத்தினால் என்ன தண்டனை என்று அரசமைப்புச் சட்டப் புத்தகத்துக்குள் புகுந்து ஆராய்ந்தது.

அதிர்ச்சிதான் காத்திருந்தது. ஆளவந்தார்களுக்கு! என்ன தண்டனை என்று சட்டத்திலேயே இடமில்லை.

அவசர அவசரமாக ஒரு சட்டத்தைசென்னை மாநில சட்டமன்றத்தில் கொண்டு வந்தார்கள். மூன்றாண்டு வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்பதுதான் அந்த சட்டம் (11.11.1957).

‘மூன்று ஆண்டுகள் என்ன முப்பதாண்டுகள் சிறை என்றாலும், சட்டத்தைக் கொளுத்தியே தீருவோம்!’ என்று அறிக்கை வெளியிட்டார் அய்யா.

இரயில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு தோழர்கள் மத்தியில் போராட்டத்தின் அவசியத்தைப் பற்றி விளக்கிப் பேசினார்.

போராட்டத்தில் ஈடுபடும் தோழர்களின் பட்டியல் ‘விடுதலை’யில் குவிந்து கொண்டே இருந்தது.

‘சட்டத்தைக் கொளுத்துங்கள் – சாம்பலை மந்திரிக்கு அனுப்புங்கள்’ என்ற அறிக்கை ‘விடுதலை’யில் வெளிவந்தது.

‘அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்தாமல் நடக்கட்டும் போராட்டம்’ என்று வழமை போல அறிக்கை வெளியிட்டார் வெண்தாண்டி வேந்தர்.

‘தண்டனை எத்தனை ஆண்டு காலம் வேண்டுமானாலும் விதிக்கட்டும்! எதிர் வழக்காட வேண்டாம்’ என்று அறிக்கை வெளியிட்டார் தந்தை பெரியார்.

நீதிமன்றத்தில் சொல்ல வேண்டியதையும் அறிக்கை வாயிலாக அறிவித்தார்.

‘‘நான் ஜாதிஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்! இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும், அதை உண்டாக்கிய மதத்திற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.   அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதியும் தமிழர்களுக்கு இல்லை. ஆதலால் என் எதிர்ப்பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால் எந்த உயிர்க்கும், எந்தப் பொருளுக்கும் சேதமில்லை. ஆதலால் நான் குற்றவாளியல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கருதப்பட்டால், அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கிறேன்!’’ (‘விடுதலை’ 20.11.1957) என்பதுதான் தந்தை பெரியாரின் அறிக்கை.

உலக வரலாற்றில் கேள்விப்படாத தலைவர் – இயக்கம் – தொண்டர்கள் திராவிடர் கழகத்தில் மட்டும்தான் – மட்டுமே தான்!

மூன்றாண்டுத் தண்டனை என்று தெரிந்திருந்தும் 10 ஆயிரம் கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தை எரித்தார்கள்!

ஆனால் அரசோ மூவாயிரம் பேர்களை மட்டும்தான் கைது செய்தனர். லால்குடி பகுதியில் மட்டும் கைதானவர்கள் 355 பேர்கள்.

நாடெங்கும் கர்ப்பிணிப் பெண்களும், சிறை ஏகினார்கள். சிறையில் பிறந்த அந்தக் குழந்தைகளுக்கு ‘சிறைப் பறவை’ என்றும், ‘சிறை வாணி’ என்றும், ‘சாதி ஒழிப்பு’ என்றும் பெயர் சூட்டினார்களே – இந்தக் கொள்கைக்கு வீரத்துக்கு ஈடு இணை உலக  வரலாறுகளில் எங்காவது காண முடியுமா?

சிறையில் மடிந்தவர்கள் உண்டு; நோய் வாய்ப்பட்டு விடுதலையாகி வந்தவர்கள் சில நாட்களிலேயே மரணத்தைத் தழுவியதும் உண்டு.

சொன்னால் எளிதில் யாரும் நம்ப மாட்டார்கள். குடந்தை வட்டம் திருப்பனந்தாள், சோழபுரத்தை சேர்ந்த 139 கருஞ்சட்டைத் தோழர்கள் சட்டத்தாளைக் கொளுத்தினர். 40 பேர்களை மட்டும் கைது செய்து, மற்றவர்களை விடுவித்தனர்.

விடுவார்களா கழகத் தோழர்கள்? ‘எங்களையும் கைது செய்யுங்கள்!’ என்று காவல் நிலையத்தில் மறியல் செய்தனர் என்றால், இந்த  வீரத்தை, தீரத்தை, கொள்கை உணர்வை வார்த்தைகளால் வருணிக்க இயலுமா?

லால்குடி – வாளாடியைச் சேர்ந்த பெரியசாமி என்ற சிறுவன்  – வயது பதினாறுதான் – தாய்க்கு ஒரே மகன்! அவனுக்கு ஈராண்டுத் தண்டனை. அவன் வேலூர் சிறையில் இருக்கும்போது, அன்றைய ஆளுநர் பிஷ்ணுராம் மேதி சிறையைப் பார்வையிட வந்தார். இந்த சிறுவனைக் கண்ட ஆளுநர் திடுக்கிட்டார். ‘உன்னை விடுதலை செய்கிறேன், இனிமேல் இதைப் போல் செய்யாதே!’ என்றார்.

சிறுவனாக இருந்தால் என்ன! கருஞ் சட்டை வீரனாயிற்றே! என்ன சொன்னான் தெரியுமா? ‘நீங்கள் என்னை விடுதலை செய்தாலும், எங்கள் அய்யா பெரியார் சொன்னால் அரசியல் சட்டத்தை மீண்டும் கொளுத்துவேன்!’ என்றானே பார்க்கலாம்.

‘உன்னைக் கடவுள் காப்பாற்றுவாராக!’ என்று சொல்லிச் சென்றார் ஆளுநர்.

அதே வாளாடியைச் சேர்ந்த மற்றொரு சிறுவன் பெரியசாமி – வயதோ 13. சிறையில் புழு புழுத்த சோளக் கஞ்சியை உண்டு வந்ததால் வயிற்றுக் கடுப்பு வந்து ரத்தப் பேதியில் துடிதுடித்தான். சிறுவர்களுக்கான தூத்துக்குடி ‘தட்டப் பாறை’ சிறையில் மரணத்தின் வாயிலுக்கே சென்றான். சிறை அதிகாரிகள் ‘உன்னை விடுதலை செய்கிறோம்!’ என்றனர். அச்சிறுவனோ பேச சக்தியற்ற நிலையிலும், கையை அசைத்து மவுனமாக மறுத்து விட்டான். திருச்சி – லால்குடி சாலையில் அவனுக்கொரு நினைவுச் சின்னம் உள்ளது.

இன்னும் அடுக்கிக் கொண்ட போகலாம்.

இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சம் பதறுகிறது – துடிதுடிக்கிறது!

இவ்வளவுத் தியாகம் செய்தும் ஜாதி சட்டப்படி ஒழிந்தபாடில்லை. எதில் விட்டுக் கொடுத்தாலும் ஜாதியை விட்டுக் கொடுக்க எந்த நிலையிலும் பார்ப்பனர்கள் இணங்க மாட்டார்கள்.

ஆனாலும் ஜாதிக்கு சமாதி கட்டும் வரை நாமும் ஓயப் போவதில்லை.

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சரித்திரம் படைத்த அந்த லால்குடியில் ஜாதியை ஒழிக்க சட்டத்தைக் கொளுத்திய அதே நாளில் ‘வரும் நவம்பர் 26இல் திராவிடர் கழகத்தின் சார்பில் முழு  நாள் மாநாடு நடைபெறவிருக்கிறது.

இதே லால்குடியில் இதற்கு முன்பும் இதே நவம்பர் 26இல் ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்தியுள்ளோம்.

இன்றைக்கு 68 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகச் சுடர்களில் லால்குடியில்  நம்மிடையே மானமிகு முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் அறுவர் இருப்பது அளவிலா ஆனந்தத்தைத் தருகிறது.

வாருங்கள் தோழர்களே! குடும்பம் குடும்பமாக வாருங்கள் தோழர்களே! லால்குடியில் சந்தித்து ஜாதி ஒழிப்பு வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவோம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *