எஸ்.அய்.ஆர் பணிச்சுமை காரணமாக தமிழ்நாட்டில் எஸ்.அய்.ஆர் பணிகளை மேற்கொள்வோரின் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. 12 மாநிலங்களில் இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த நிகழ்வு பணியாளர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நவம்பர் 4, 2025 முதல் 12 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் வாக்குச்சாவடி அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் கடும் பணிச்சுமை, இலக்குகள், படிவங்கள் தரவேற்றம் ஆகியவற்றால் மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் பல இறப்புகள் மற்றும் தற்கொலைகள் பதிவாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் ஒருவர் எஸ்.அய்.ஆர் பணிகள் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
கும்பகோணம் அங்கன்வாடி ஊழியர் சித்ரா என்பவர் எஸ்.அய்.ஆர் படிவங்களை தரவேற்றம் செய்யச்சொல்லி தொடர் அழுத்தம் கொடுத்ததால் 84 தூக்க மாத்திரைகள் உட்கொண்டார்.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை, கனகனந்தலைச் சேர்ந்தவர் முபாரக். இவருக்கு மனைவி ஜாகிதாபேகம், இரு குழந்தைகள் உள்ளனர். கனகனந்தல் கிராம உதவியாளரான ஜாகிதா பேகம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட சிவனார்தாங்கல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலராக, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
பணி முடிந்து, மாலை, 4:30 மணியளவில் வீடு திரும்பிய அவர், வீட்டிலிருந்த ஊஞ்சல் சங்கிலியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் வருவாய்த் துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி எஸ்.அய்.ஆர் பணிகளை புறக்கணித்தனர்.
குஜராத்தில் கிர் மாவட்டத்தில் பள்ளி ஆசிரியரும் வாக்குச்சாவடி அலுவலருமான அரவிந்த் வதோர் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதிய கடிதத்தில் எஸ்.அய்.ஆர் பணியால் ஏற்பட்ட கடும் மன அழுத்தமே காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கேரள மாநில கன்னூரில் 16.11.2025 அன்று ஜார்ஜ் என்ற வாக்குச்சாவடி அதிகாரி- தூக்கிட்டு தற்கொலை.செய்துகொண்டார்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில்,17.11.2025 அன்று முகேஷ் ஜுன்கிட் என்பவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை! மாதேவ்பூரில் ஹரிராம் பய்வாரா என்பவர் எஸ்.அய்.ஆர் பணிச்சுமைகாரணமாக பணியின் போதே மயக்கமடைந்து விழுந்துமரணம்! குஜராத்திலும் 20.11.2025 அன்று ஆசிரியர் ஒருவர் எஸ்.அய்.ஆர் பணி தொடர்[பாக இரவும் பகலும் தொடர்ந்து அலைபேசியில் அழைப்பு வந்துகொண்டே இருந்ததால் மன உளைச்சலில் இருந்தவர் உடல் நலிவுற்று மரணமடைந்தார்
மேற்குவங்கத்தில் எஸ்.அய்.ஆர் பணிச்சுமைகாரணமாக 3 அதிகாரிகளும், எஸ்.அய்.ஆர் படிவத்தை சரியாக நிரப்பாமல் விட்டதால் தங்களது குடியுரிமை பறிபோய்விடுமோ? என்ற அச்சத்தின் காரணமாக இரண்டு குடிமக்களும் தற்கொலை செய்துகொண்டனர்.
இதுவரை எஸ்.அய்.ஆர் பணிச்சுமை காரணமாக 6 தற்கொலைகளும், பணிச்சுமையால் உடல் நலிவுற்று 5 பேர் மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்தச் சம்பவங்கள் ஆசிரியர் சங்கங்கள், அரசு ஊழியர் அமைப்புகளிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இவற்றை எல்லாம் எடுத்துக்காட்டுவதற்குக் காரணம் – எஸ்.அய்.ஆர். வேண்டாம் என்பதற்காக அல்ல!
இவ்வளவு அவசர அவசரமாகச் செய்ய நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன என்பதுதான்.
படித்தவர்களே கூடப் பூர்த்தி செய்யத் திணறும் படிவம்! கிராமப்பகுதி மக்கள், படிப்பறிவில்லாதவர்கள் என்ன செய்வர்கள்? பிஎல்.ஓ. (ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்) எனப்படும் ‘பூத் லெவல் அலுவலர்’களுக்கே போதிய பயிற்சி இல்லை.
அப்பா, அம்மா தேர்தலில் வாக்களித்த விவரம் எல்லாம் தேவை தானா?
18 வயது ஆயிற்றா இல்லையா? குடியிருப்பு எங்கே? என்பதோடு முடிய வேண்டிய கணக்கெடுப்பை குளறுப்படி செய்வானேன்?
தமிழ்நாட்டில் 2002ஆம் ஆண்டு வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கை அதாவது எஸ்.அய்.ஆர். என்பது இரண்டு கட்டமாக நடைபெற்றது. 2002ஆம் ஆண்டில் 197 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு எடுக்கப்பட்டது. அதன் பிறகு எஞ்சிய 37 தொகுதிகளுக்கு எடுக்கப்பட்டது. இந்த இரண்டு கட்ட கணக்கெடுப்புக்கும் தேவைப்பட்ட காலம் 24 மாதங்களாகும்.
சரி செய்யப்பட்ட வாக்காளர்ப் பட்டியல் வெளியிடப்பட்டதோ 2005ஆம் ஆண்டில்!
இப்படி இருக்கும்போது இப்பொழுது என்ன அவசரம்?
கற்றல் அளவு குறைந்த பீகார் மாநிலத்தில் எஸ்.அய்.ஆர். படிவங்கள் சரியாகப் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும் என்பதை நம்ப முடியுமா?
