கவிஞர் சுப்ரமணிய பாரதியாரின் ‘ப்ராயச்சித்தம்’

8 Min Read

1917 ஜூன் 16 ‘தேசீயக் கவிஞர்’, சுப்ரமணிய பாரதி அவர்கள்  ‘காளிதாஸன்’ – என்ற புனைப் பெயரில் எழுதிய ஒரு கதை –  ‘பாரதி தமிழ்’ என்ற நூலின் ‘கதைக்கொத்து’ இரண்டாம் பகுதியில் ‘ப்ராயச்சித்தம்’ என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

இதன் தொகுப்பாசிரியர் ம.ப. பெரியசாமித்தூரன் அவர்கள்.  பதிப்பாசிரியர் இலக்கிய உலகில் தனக்கென ஒரு சிறப்புக் கொண்ட ஆற்றலாளரும், சாதனையாளரும், எனது அண்ணாமலைப் பல்கலைக்  கழக ஹானர்ஸ் வகுப்புப் படிப்பின் சமகால கெழுதகை நண்பருமான சிற்பி பாலசுப்ரமணியம் அவர்கள்.

வாழ்வியல் சிந்தனைகள்

சிறிது காலம் (1954 என நினைவு) ஒரே விடுதி அறைவாசிகளாக மூவர் இருந்தோம்!

ஒருவர் நண்பர் சிற்பி பாலசுப்ரமணியம், மற்றொருவர் மறைந்த நண்பர் காங்கிரஸ்காரர் பாலகிருஷ்ணன், மூன்றாமவர்  தோழர் ‘காந்தி’ என்று கம்யூனிஸ்ட் கட்சியினால் அறிமுகமாகிய தோழர் ராஜகோபால்.

கட்சியோ, கொள்கைகளோ எங்களது நட்புறவுக்குக் குறுக்கே நின்றது கிடையாது. தமிழ் இலக்கியச் செறிவு மேதையான நண்பர் ‘சிற்பி’ பாலசுப்ரமணியம் அப்போது கதரையே உடுத்துவார்; (கதரே அணிந்துவந்த பாலகிருஷ்ணன்  பின்னாளில் உடை மாற்றம் செய்தார்!).

அண்மையில் அவர் என்னை சந்தித்தபோது தந்த பல நூல்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டுள்ள ‘‘பாரதி தமிழ்’’

அக்கால தமிழ் வசன நடை,

அன்றைய சமூகத்தின் வாழ்வு

– அதுவும் உயர்ஜாதி என்றும், ஆச்சாரம், அனுஷ்டானம் என்று கூறி ‘பழைமை ஸநாதனப் பாதுகாப்பு’ ஒருபுறம் என்றாலும், நவீனத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அதன்படி பயன் வாழ்வு வாழ்ந்து, கேள்வி கேட்போர் வாயடைக்க‘பிராயச் சித்தம்’ என்று ஒரு ‘Exeception  Clause’ போட்டு தங்களது செயலை நியாயப்படுத்தும் விசித்திரப் போக்கு எப்படியிருந்தது என்பதை பாரதியார் அவர்கள் ‘‘உயர் ஜாதியாக’’ அந்நாளில் மிகவும் தனித்து ஆதிக்கம் செய்த பார்ப்பன ஜாதியினர் என்றாலும், பல நேரங்களில் யதார்த்தத்தை அவர் மறைத்ததேயில்லை என்பதற்கு இந்த ஒரு புனைவுக் கதையும் நல்ல சான்றாவணம் போன்றதாகும்.

108 ஆண்டுகளுக்குமுன் தமிழ் ஏடுகளில் நாளேடுகள், சஞ்சிகைகள்   (Journals) என்று அைழக்கப்பட்டவைகளில் தமிழ் நடை எப்படியெல்லாம் இருந்தது என்பதை ஓர் எழுத்துக்கூட மாறாமல் அப்படி தருகிறோம்.

படித்துப் பாருங்கள்!

‘ப்ராயச்சித்தம்’

‘காளிதாசன்’

21 ஜூன், 1917 பிங்கள ஆனி 8

என்னுடைய ஸ்நேஹிதர்களில் ஒருவராகிய ராமராயர் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். திரும்பி வேதபுரத்துக்கு வந்தார். அவருக்கு ஒருவிதமான வேதாந்தப் பயித்தியம். ப்ரம்மமே ஸத்தியம். லோகமெல்லாம் மித்தை. ஆதலால் எல்லாரும் ஸந்நியாஸம் வாங்கிக்கொள்ள வேண்டும். தலையை மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும். சடைகளாகத் திரித்து விடலாம். அப்படிச் செய்தாலும் குற்றமில்லை. எப்போதும் ஓம், ஓம் என்று சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். அல்லது ஐம்புலன்களையும், மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற நான்கு அந்தக்கரணங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு சத்த ப்ரம்ம நிலையோ, அல்லது அதற்குப் போகிற பாதையோ, ஆகிய நிர்விகற்ப ஸ்மாதியில் நிற்கவேண்டும். இது அவருடைய மதம்: ஆனால் அவருடைய நடை மற்ற மனுஷ்யர்களைப் போலேதான்.

ஸந்யாஸம் வாங்கவில்லை; தலை மொட்டையுமில்லை; சடையுமில்லை; ஒங்காரத்தைத் தவிர வேறு வார்த்தைகளும் சொல்லிக் கொண்டுதான் வருகிறார். நிர்விகற்ப ஸமாதியில் அவர் இருப்பதை நான் பார்த்ததே கிடையாது.

மேற்படி ராமராயர் இங்கிலாந்தில் இருக்கும்போது, ஐரோப்பியர் கண் பார்க்காமல் கை எப்படிச் சமைக்கும்? ஐரோப்பியர் சமையல் பண்ணின பதார்த்தங்களை நாளொன்றுக்கு நான்கு முறையாகப் பத்து வருஷ காலம் நிர்விக்நமாக போஜனம். செய்துகொண்டு வந்தார். (இந்த விஷயத்தில் அவர் மேலே அதிகக் குற்றம் சொல்ல இடமில்லை. ஐரோப்பாவில் ஐரோப்பியர் சமையல் பண்ணினதைத் தின்னாமல் எப்படிப் பிழைக்க முடியும்? இங்கிருந்து பிராம்மணப் பரிசாரகர்களில் நூறு நூற்றைம்பது பேரைக் கொண்டு லண்டன் பட்டணத்தில் குடியேற்றினால் நம்மவர்கள் போய் ஜாதி யாசாரங்களுக்கு விரோதமில்லாதபடி அங்கிருந்து படித்து வைதிகக் கலெக்டர்களாகவும் வைதிக பாரிஸ்டர்களாகவும் திரும்பி வர இடமுண்டாகும். ஸ்வாமி விவேகானந்தர் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் ஸஞ்சரித்த காலத்தில் பசுக் கறி முதலியவற்றை யதேஷ்டமாக சாப்பிட்டதாகப் பாதிரிகள் இந்தியாவில் கூக்குரல் போட்டதைப் பொறுக்க முடியாமல், சென்னப் பட்டணத்திலுந்து சில வைதிக சிஷ்யர்கள் வருத்தப்பட்டு விவேகானந்தருக்குக் காயிதம் போட்டார்கள். அடுத்த கப்பலில் ஒரு வைதிக பரிசாரகனும், வைதிக போஜனங்களும் இந்தியாவிலிருந்து அனுப்பினால், தான் வைதிகமாக உண்பதில் ஆக்ஷேபமில்லையென்று விவேகானந்தர் மறுமொழி எழுதினராம். ராமராயர் இங்கிலாந்தில் போய்ப் பத்து வருஷ காலம் இருந்து வியாபாரம் பண்ணிவிட்டுக் கொஞ்ச காலத்துக்கு முன்பு, வேதபுரத்துக்கு வந்து சேர்ந்தார். இங்கே அவர் கையில் கொஞ்சம் காசிருப்பதைக் கண்டு சில வைதிகர்கள் அவரைப் பிராயச்சித்தம் செய்து கொள்ளும்படி சொன்னார்கள். அவர் பண்ணிக் கொள்ளவில்லை. ஆனால் இங்கு வந்த பிறகு சுத்தமான பிராமணர் சமையல்தான் சாப்பிடுகிறார். பிராமண ஆகாரம் அவருக்கு நன்றாக ஒத்து வருகிறது. உடம்புக்கு ஒன்றும் செய்வதில்லை. மற்ற நடைகளும் அப்படியேதான். மூன்று வேளையும் ஸந்த்யாவந்தன, மாத்யான்மிகங்கள் தவறுவதில்லை. அமாவாசை தோறும் சரியான தர்ப்பணம்., வருஷத்தில் ஐந்தாறு சிராத்தம். எல்லாம் கிரமமாகவே நடத்தி வருகிறார், ஒரே ஒரு புரோஹிதரும் அனேக லெளகிகரும் இவரை ஜாதியில்சேர்த்துக்கொண்ட  மாதிரியாகவே நடந்து வருகிறார்கள். பல புரோஹிதரும், சில லௌகிகரும் கொஞ்சம் ஒட்டியும் ஒட்டாமலும், தாமரை நீர்   போலிருக்கிறார்கள். சிலர் ஒட்டாமலே விலகியிருக்கிறார்கள். போன மாஸம் மேற்படி ராமராயர் என்னிடம் ஊர்க்காரருடைய திருப்தியை உத்தேசித்துத் தான் ப்ராயசித்தம் பண்ணிக் கொள்ள இஷ்டப்படுவதாக அறிவித்தார். நான் உடனே மேற்படி விஷயத்தை இந்த ஊர் வைதிகர்களுக்கெல்லாம் சிரோமணியாகிய ரங்கநாத சாஸ்திரிகளிடம் போய்ச் சொன்னேன். இந்த ரங்கநாத சாஸ்திரிகளுடைய மாப்பிள்ளை ஒருவன் ரங்கூனிலே போய்க் காபிக் கடை வைத்திருக்கிறான். தமிழ்த்தேங்குழல், தமிழ் முறுக்கு, தோசை, வடை, கடலைச் சுண்டல் முதலிய பக்ஷணங்களைக் கொஞ்சமேனும் இந்தியா ஆர்ய சம்பந்தமில்லாதபடி நன்றாகப் பண்ணிக் கொடுத்து அங்குள்ள தமிழ் மக்களெல்லாம், இந்த பிராமணனை மிகவும் அருமையாகப் பாராட்டினபடியால் நல்ல பணக்காரனாகி, அங்கே தனது மனைவியாகிய மேற்படி சாஸ்திரிகளுடைய பெண்ணும், தானும் நாலைந்து குழந்தைகளுமாக சௌக்கியத்தோடு வாழ்ந்து வருகிறான். இந்தக் காரணத்தை யொட்டி மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் மாப்பிள்ளையுடன் எவ்விதமான சம்பந்தமில்லாமல் கத்தரித்து விட்டார். இவருடைய மனைவி மூலமாகக் காயிதப் போக்குவரவு நடக்கிறது. அதில் கூட இவர் கவனம் செலுத்துவதில்லை. இதே காரணத்தை யனுசரித்து அதாவது இவருடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போனதை உத்தேசித்து, இந்த சாஸ்திரிகள் தம்முடைய வைதிகத்தை மிகவும் விஸ்தாரப்படுத்தி வைத்திருக்கிறார். மற்றவர்களுடைய வைதிகம் ஆறு முழமென்று வைத்துக்கொண்டால், இவருடைய வைதிகம் பன்னிரண்டு முழம். இந்த ப்ராமணர் இங்கே வைதிகர்களுக்குத் தலைவர். இவரிடம் நான் போய் ராமராயருக்குப் பிராயச்சித்தம் செய்து வைக்க வேண்மென்று சொன்னேன்.

அப்போது மேற்படி ரங்கநாத சாஸ்திரிகள் என்னைப் பார்த்து, “நீர் இந்த விஷயத்தை ஏன் கவனிக்கிறீர்?” என்று கேட்டார். நான் வைதிகமென்றும் அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் கேள்விக்கு நான் மறுமொழி சொல்லாமல், “ஸமுத்ர யாத்திரை செய்தவன் பண்ண வேண்டிய ப்ராயச்சித்த மெப்படி?” என்று கேட்டேன்; (இதுவரைக்கும் சொன்ன கதையெல்லாம் பீடிகை. இனிமேல் எழுதப் போகிற வசனங்களே நான் சொல்ல வந்த விஷயம். ப்ராயச் சித்தம் கடல் யாத்திரைக்கு எப்படி நடத்த வேண்டுமென்று நான் கேட்டதற்கு ரங்கநாத சாஸ்திரி சொல்லிய மறுமொழி கொஞ்சம் தர்க்க சாஸ்த்ர ஹானியாக இருந்த  போதிலும் எனக்கே கேட்க ரஸமாக இருந்தபடியால், பிறருக்கும். தெரிவிப்போம் என்ற எண்ணத்துடன் இங்கெழுதலானேன்.) ரங்கநாத சாஸ்திரிகள் சொல்லுகிறார்:-

“இங்கிலிஷ் படித்தவன் பண்ணுகிற ப்ராயச் சித்த மெல்லாம் ‘ஹம்ப்க்’ (பொய் வேஷப்) ப்ராயச்சித்தம். இங்கிலிஷ் படித்தவனுக்கு இந்த விஷயத்தில் கொஞ்சமேனும் நம்பிக்கை கிடையாது. ருஷ்யாவிலே ராஜ்யம் புரண்டு போச்சுதாமே. ஜாதி குலமெல்லாம் லோக முழுதிலும் தலைகீழாகக் கவிழ்ந்து போமென்று ஆணிபெஸன்ட் பத்திரிகையில் போட்டிருந்ததாமே! ‘தன் மத்யே’ இன்னுமொரு பேச்சு உம்மிடத்தில் கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேயிருந்தேன். ஆனிபெஸன்டுக்கு அஷ்டமாசித்துகளும் வருமென்று தஞ்சாவூரில் ஒரு பெரிய யோகீசுவரர் என்னிடம் நேரில் சொன்னார்…உமக்குத் தெரியாதா? போகட்டும் போம்…. மொத்தத்தில் உத்தம ஸ்த்ரீ. வெள்ளைக்கார ஜாதியில் பிறந்து நம்முடைய ஹிந்து மதத்தைச் சேர்ந்து விட்டதாக வாயினாலே எப்போது சொன்னாளோ, அவள் நம்மைச் சேர்ந்தவளாகவே நினைக்க வேண்டும். இந்த விஷயத்தில், காளிதாஸரே, நம்முடைய அபிப்பிராயமென்னவென்றால், எந்தக் குலமாக, எந்த ஜாதியாக இருந்த போதிலும் நமது ஆலயத்தில் வந்து கும்பிட்டால் அவர்களை நாம் ஹிந்துவாக நினைத்து ப்ரேமை செலுத்த வேண்டும். இந்த ஆனிபெஸன்ட்கூட பூமி முழுதிலும் ஸஹோதரத்தவமும் ஸமத்துவமும் ஏற்படப் போகிறதென்று சொல்லுவதாகக் கேள்வி. அந்த வார்த்தை ஸத்தியமாகத்தான் இருக்கும். அந்தம்மாள் வெகு தூரம் படித்தவளாமே? அஷ்டமாஸித்தி யென்கிற வார்த்தை வந்தால் அஸாதாரணமான புத்தியாவது உண்டென்பது நிச்சயந்தானே? நம்முடைய சாஸ்த்திரங்களும் அப்படியேதான் சொல்லுகின்றன. கலி மேலே போகப் போக ஜனங்களுக்குள்ளே கலப்பு மிகுதிப்பட்டுக் கடைசியில் ஒரே குலமாய்விடுமென்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. ஆனால் அது கெட்ட அர்த்தத்திலே சொல்லுகிறது. எல்லாரும்ஒரே குலமாய்க் கெட்டுப் போவார்களென்று சொல்லுகிறது. யதார்த்தம் அப்படியில்லை. ப்ரஹ்மாண்ட புராணத்தில் நான் ஒரு சுலோகம் படித்தேன். அது இப்போது ஞாபகமில்லை. அதிலே என்ன போட்டிருக்கிறதென்றால் கலியுகத்திலேயே ஒரு கிருதயுகம் வரும் என்று போட்டிருக்கிறது. கலி முற்றி  உலகம் நாசமாய்ப் போகுமென்ற வாக்யங்களை நான் சோதனை போட்டுப் பார்த்திருக்கிறேன். அவற்றையெல்லாம் காட்டிலும் மேற்படி ப்ரஹ்மாண்ட புராண வாக்யமே ப்ரமாணமென்று நான் நிச்சயமாக ருஜுப்படுத்துவேன். காளிதாஸரே, நீரும் அதை நம்பும். இதெல்லாம் ஏன் சொல்லுகிறேனென்றால் உம்முடைய ஸ்நேகிதர் ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளப் போகிறதாகச் சொன்னீரே? அது அவசியமில்லை. இன்னும் கொஞ்ச காலத்தில் கிருதயுகம் வந்து விடுமானால், அவருக்கு யாதோரு சிரமமுமில்லை. எல்லாரும் ஸமானம். அட, க்ருத யுகம் வரவேயில்லை; இந்த கலியுகமே சாசுவதமாக இருக்கப் போகிறதாக வைத்துக் கொள்வோம். அதிலும், அதிகமாகப் பொய் சொல்லாமல் இருப்பது விசேஷம். கலி தானாகவே முற்றுவது போதாதென்று நாம் ஒரு பக்கம் அதைப் பொய் சொல்லிப் பழுக்க வைப்பதில் என்ன சுகம்: கடல் யாத்திரை பண்ணினால் என்ன குடி முழுகிப் போச்சு? ஏன் காணும், காளிதாஸரே, உம்மைத்தான் கேட்கிறேன். கடல் யாத்திரை பண்ணினால் என்ன? இருக்கிற பிராமணர்களெல்லாரும் ஸ்மிருதி வாக்யம் தவறாதபடி தான் நடக்கிறார்களோ? நம்முடைய மாப்பிள்ளை ரங்கூனுக்குப் போய் அங்கே நல்ல கோடீசுவரனாக வாழ்கிறான். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, பங்களுர், திருச்சினாப்பள்ளி, தஞ்சாவூர், புதுச்சேரி, கும்பகோணம் இத்யாதி க்ஷேத்ரங்களில் வஸிக்கும் இங்கிலிஷ் பிராமணர்களுக்குள்ளே ஸந்த்யா வந்தனம் எவ்வளவு சொற்பம்? தீர்த்த பானம் கூட நடக்கத்தான் செய்கிறது. ராமராமா! இந்த ரிஷிகளெல்லாரும் என்ன ப்ராயச்சித்தம் பண்ணுகிறார்கள்? என் மாப்பிள்ளை ரங்கூனில் நித்ய கர்மானுஷ்டானங்கள் தவறாமல் நடத்தி வருகிறானென்று கேள்வி. அவன் வந்தால் ஜாதி ப்ரஷ்டன் தானே? ப்ராயச்சித்தம் பண்ணினால் கூட நான் சேர்த்துக் கொள்ள மாட்டேன். தள்ளுங்காணும்! ப்ராயச் சித்தமாவது, வெங்காயமாவது/ நான் ஏதோ உதர நிமித்தமாக இந்தவைதிகத்தை விட முடியாமல் கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். இதில் மற்றவர் வந்து சேர்வதிலே எனக்கு ஸம்மதமில்லை. ராமராயர் ப்ராயச்சித்தம் பண்ணிக் கொள்ளுவதில் எனக்கு இஷ்டமில்லை. ரூபாய் ஐந்நூறு கொடுத்தால் செய்து வைக்கிறேன். ஆக்ஷேபமில்லே. அப்படியே அவர் ப்ராயச்சித்தம் செய்தாலும் நான் அவருடன் பந்தியிலிருந்து சாப்பிட மாட்டேன்” என்றார். இதை நான் ராமராயரிடம் வந்து சொன்னேன். ராமராயர் ப்ராயச்சித்த யோசனையை நீக்கி விட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *