மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் வரை நமது போராட்டம் தொடரும்! அதுவரை ஓயமாட்டோம்!

2 Min Read

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு

சென்னை, நவ.21 சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம் என்று இன்று (21.11.2025) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூகவலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:

குடியரசுத் தலைவரின் கேள்விகளுக்கு உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள்  ஆளுநருக்கு எதிராகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பெற்ற 8 ஏப்ரல் 2025 தீர்ப்பின் மீது எந்தத் தாக்கத்தையும் செலுத்தாது.

மாநிலத்தில் இரண்டு அதிகார மய்யங்களா?

சொல்லப் போனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் ஆட்சியைச் செலுத்த வேண்டும், மாநிலத்தில் இரண்டு அதிகார மய்யங்கள் இருக்க முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தின் சட்டகத்துக்குட்பட்டே அரசியலமைப்புப் பதவியில் இருப்போர் செயல்பட வேண்டுமே ஒழிய, அரசியலமைப்பை மீறிச் செயல்பட லாகாது!

சட்டமுன்வரைவுக்கு ஒப்புதல் மறுப்பது / (தமிழ்நாடு ஆளுநர் செய்தது போல) காலவரையின்றி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைப்பது எனும் நான்காவது விருப்பத் தேர்வு ஆளுநருக்கு இல்லை.

மசோதாக்களின்மீது முடிவெடுக்காமல் காலவரை யின்றி ஆளுநர் தாமதம் செய்ய இயலாது. அப்படி, எந்த விளக்கமும் இல்லாமல் நீண்டகாலம் இழுத்தடித்தால், மாநிலங்கள் நீதிமன்றங்களை அணுகலாம். ஆளுநர்கள் வேண்டுமென்றே தாமதிப்பதற்கு எதிராக வழக்கு தொடுத்து, கேள்விக்குட்படுத்தி நியாயம் பெறலாம்.

என்பனவற்றைத் தனது விளக்கத்தில் உச்சநீதிமன்ற அமர்வு மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், புனித சேவியர் கல்லூரி, அகமதாபாத் Vs குஜராத் அரசு (1974) 1 SCC 717 வழக்கின் தீர்ப்பில் (பத்தி 109), 9 நீதிபதிகள் கொண்ட அமர்வானது, “நீதிமன்றங்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பவை அரசு தலைமை வழக்குரைஞர்கள் தெரிவிக்கும் கருத்துகளைப் போன்றவை என்பதைக் கடந்து அவற்றுக்கென எந்த மதிப்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறியுள்ளது.

காலவரையின்றிக் காலம் தாழ்த்தலாம்,

சட்டமுன்வடிவுகளுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் மறுக்கலாம் எனும் தமிழ்நாடு ஆளுநர்  அவர்களின் கூற்றை உச்சநீதிமன்றத்தின் நேற்றைய கருத்து மீண்டுமொருமுறை நிராகரித்துள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் 361–க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது!

தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உட்பட மாநில அரசுகளுடன் மல்லுக்கட்டும் அனைத்து ஆளுநர்களும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் வழியில் செயல்பட வேண்டும் என்பதையும், மக்களின் விருப்பத்தைச் சட்டமியற்றி நிறைவேற்றும்போது, வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் காலத்தைக் கடத்தினால் நீதிமன்றங்களில் அதற்குப் பதில் சொல்லியாக வேண்டுமென்பதையும் நமது சட்டப் போராட்டத்தின் மூலம் கட்டாயமாக்கியுள்ளோம்! அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 361-க்குப் பின்னால் ஆளுநர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம்.

அரசியலமைப்புச் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும். அது தனது கதவுகளை அடைத்தால், நமது அரசியலமைப்பின்படியான மக்களாட்சியில் சட்டத்தின் ஆட்சியைச் சிறுமைப்படுத்திவிடும்; அரசியல் உள்நோக்கத்தோடு செயல்படும் ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கும்.

தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தைச் சட்டங்க ளின்மூலம் நிறைவேற்ற, அரசியலமைப்புச் சட்டத்துக்குட்பட்டு அரசியலமைப்புக் கருவிகள் செயல்படுவதை உறுதிசெய்யத் தொடர்ந்து உழைப்போம்! எங்கள் வாக்கைக் காப்பாற்றுவோம் என்று சமூக வலை தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு செய்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *