ஒரு கிறிஸ்தவர் லா காலேஜ் பிரின்சிபாலாக நியமனம் செய்யப்பட்ட தற்கும், சட்டசபை தலைவராக நியமிக்கப்பட்டதற்கும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்ட தற்கும், ஜஸ்டிஸ் கட்சியே காரணம். கிறிஸ்தவர்கள் அய்கோர்ட் ஜட்ஜ்களாகவும், ஹோம் மெம்பராகவும் நியமிக்கப்பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியாரே நேர்முகமாகவும், மறைமுகமாகவும் காரணஸ்தராயிருந் திருக்கிறார்கள்.
முஸ்லீம்களுக்கு ஒரு தனி கலாசாலை ஸ்தாபிக்கப் பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியாரே காரணம். ஒரு முஸ்லீம் கார்ப்பரேஷன் கமிஷனராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் கைத்தொழில் டைரக்டராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மெம்பராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் சென்னை மேயராக நியமிக்கப்பட்டதற்கும், ஒருவர் ஹோம் மெம்பராகவும், ஆக்டிங் கவர்னராகவும் நியமிக்கப்பட்டதற்கும், ஜஸ்டிஸ் கட்சியே காரணம். அவர்கள் இன்னும் எவ்வளவோ செய்திருக்கிறார்கள்… ஜஸ்டிஸ் கட்சியார் முயற்சியின் பயனாக தென்னாட்டில் இந்து-முஸ்லீம் பிணக்குமில்லை.
இந்த மாகாணத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் எப்பொழுதும் வெகு அய்க்கியமாக இருந்து வருகிறார்கள். நாங்கள் முஸ்லீம்களை சகோதரர்களாக மதித்து அவர்களது உரிமைகளுக்காகப் போராடி வருகிறோம்.
(‘நகர தூதன்’ திருச்சி, 4.10.1930, பக்.10)
