சென்னை, நவ.20- யார் முடக்க நினைத்தாலும் கோவை, மதுரைக்கு மெட்ரோ ரயிலை கொண்டு வருவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம்
தமிழ்நாடு அரசு சென்னையை போல் மதுரை, கோவை ஆகிய நகரங்களுக்கும் மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தது. அதற்காக கோவையில் 39 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.10 ஆயிரத்து 740 கோடி செலவிலும், மதுரையில் 31.93 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.11 ஆயிரத்து 368 கோடி செலவிலும் திட்ட அறிக்கை தயார் செய்து ஒன்றிய அரசுக்கு அனுப்பியது.
கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கைக்கு ஒன்றிய அரசு அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் மதுரை, கோவை நகரங்களில் 2011ஆம்ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20 லட் சத்திற்கு கீழ் தான் மக்கள் தொகை உள்ளது. மெட்ரோ இயக்கினால் போதுமான பயணிகள் எண்ணிக்கை இருக்காது. இந்த நகரங்களில் இயக்குவதற்கு திட்டமிட்ட வழித்தடங்களில் இப்போதைக்கு போக்குவரத்து நெரிசல் இல்லை. எனவே இங்கு மெட்ரோ ரெயில் இயக்க வேண்டிய அவசியல் இல்லை என்ற காரணங்களை கூறி ஒன்றிய அரசு நிராகரித்து விட் டது.
புறக்கணிப்பது அழகல்ல
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
‘கோவில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர் கோவைக்கும் நோ மெட்ரோ’ என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜனதா அரசு.
அனைவருக்கும் பொதுவான தாகச் செயல்படுவது தான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா. ஜனதாவை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல.
கொண்டு வருவோம்
கூட்டாட்சிக் கருத்தியலை இப்படி சிதைப்பதைச் சுயமரியாதை மிக்க மண்ணான தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
சென்னை மெட்ரோ பணி களைத் தாமதப்படுத்தி முடக்க நடந்த முயற்சிகளை முறியடித்து முன்னேறினோம். அதேபோல மதுரை, கோவையிலும் வருங்கால வளர்ச்சிக்கு இன்றியமையாத தேவையான மெட்ரோ ரயிலைக் கொண்டு வருவோம்.
இவ்வாறு அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, கோவைக்கு மெட்ரோ ரெயில் நிராகரிப்பட்டது தொடர்பாக ஒரு படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
