அரசாங்க உத்தரவு நெ. 2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924.
ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலைகள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள் – சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் – மாநிலத்திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.
உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.
1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது:
ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.
திரு. ஆர். சீனிவாசன்: (இரட்டை மலை)
- (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.
(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும் அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும் நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,
(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும் இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,
சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.
(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)
P.L. மூர்,
அரசாங்கச் செயலாளர்.
ஜில்லா போர்டு, தாலுக்கா போர்டு,
நகராட்சிகள், கார்ப்பரேஷன், சென்னை
பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,
தொழில் கமிஷனர்,
சென்னை தலைமைச் செய லகத்தில் உள்ள எல்லா இலாக்காக்கள்,
அரசாங்க செய்தி ஸ்தாபனம்,
இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டன.
சட்டக்குழு அலுவலகம்
25.6.24
தீர்மானம்
திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை சீனிவாசன்) உள்துறை அரசாங்க அலுவலகம்.
- சென்னை மாகாணத்திலுள்ள ஒவ்வொரு அக்கிரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் உள்ள ஒவ்வொரு தெருக்களிலும், தாழ்த்தப்பட்டவர்கள் குடியிருக்கும் சேரிகளிலும், வஞ்சிக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் கிராம தலையாரி மூலமாக மேற்கண்ட இந்த தீர்மானத்தின் விவரங்களை தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும் என்றும், மாகாண அரசின் செய்தித்தாள்களிலும், மாவட்ட செய்தித்தாள்களிலும், அந்தந்த வட்டார மொழிகளிலும் இந்தத் தீர்மானத்தின் விவரங்களை அச்சிட்டு வெளியிட வேண்டும் என்றும் சட்டமன்றக் குழு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்கிறது.
(a) தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அக்ரகாரத் தெருக்களிலும், ஜாதி இந்துக்கள் குடியிருக்கும் தெருக்களிலும் நடந்து போய்வருவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் கிடையாது என்பதையும்,
(b) கிணறு, குளம், பொது அலுவ லகங்கள், வர்த்தகம் செய்யும் இடங்கள் போன்றவைகளிலும் மற்றும் எல்லாப் பொது இடங்களிலும், ஜாதி இந்துக்களுக்கு உள்ள உரிமைகள் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உண்டு.
