தமிழ்நாட்டில் ஒவ்வொரு கிராமமும்; கிராமத்தின் ஒவ்வொரு பாதையும் திராவிடர் இயக்கத் தலைவர்களின் பாதங்கள் பட்ட வரலாற்றுச் சுவடுகள்தான். அந்த வரலாற்றுச் சுவடுகளின் மீதுதான் சமூகநீதி மாடல், திராவிட மாடல் எனும் கற்கோட்டை கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு சிறப்புக்குரிய அந்த இடங்களை பெரும்பாலும் நாம் பார்த்ததில்லை. அந்த இடத்தில் நடந்த வரலாற்றுச் சம்பவங்களைத்தான் படிக்கின்றோம்.
அப்படிப் படிக்கும் போது அந்த நிகழ்வு நடந்த இடத்தில் நின்றபடியே அசை போட நேரிட்டால் என்ன நடக்கும்? அந்த வரலாறு நடந்த காலத்திற்கே சென்றது போன்ற ஓர் உன்னதமான உணர்வு உண்டாகும்.

அப்போது அந்த இடம் எப்படி இருந்தது? இப்போது எப்படி இருக்கிறது? இந்த வளர்ச்சியை கண்கூடாகப் பார்த்தால், திராவிடர் இயக்கத்தின், திராவிட மாடலின் வெற்றியின் அளவீடு – கருத்தாக அல்ல, பருப்பொருளாகவே தெரியும். அதுவும் பன்மடங்காகத் தெரியும். அதை உருவாக்கித் தந்த தலைவர்களின் மீது மேலும் மேலும் நன்றிப் பெருக்கு பொங்கிப் பெருகும்! இந்தப் பெருமையைச் சாத்தியப்படுத்துகிறது “திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம்” அமைப்பு.
இம்மய்யத்தின் சார்பில் 2014 ஆம் ஆண்டு முதல் ”சென்னை நாள் நடை” என்று தொடங்கப்பட்டது. அடுத்தடுத்து இது, ”நீதி நடை” என்ற பெயரிலும், “திராவிட நடை” என்ற பெயரிலும், நீதிக்கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாட்களில் திராவிட இயக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது “மரபு நடை” எனும் தலைப்புகளில் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் உள்ள கோயில்களை மட்டுமே சுற்றிப் பார்ப்பனர்கள் நடத்தி வந்த நடைப்பயண நிகழ்வுகளுக்கு எதிர்வினையாகத் தொடங்கப்பட்டது என்பது குறிப் பிடத்தக்கது.

. இத்தகைய வரலாற்று நடை கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு தலைப்புகளில் நடைபெற்று வந்துள்ளது. அதிகாலை 6 மணியளவில் தொடங்கி, காலை 8:30 மணியளவில் நிறைவு பெறக்கூடியதாக அமையும். கோவிட் ஆண்டுகளில் கூட காணொலி வாயிலாக இந்நிகழ்வு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டும் நீதிக்கட்சியின் 110 ஆம் ஆண்டை சிறப்பிக்கும் வகையில், இன்று (20.11.2025) ”நீதிக்கட்சி நடை” எனும் பெயரில் ஒரு சிறப்பு நடை ஏற்பாடு செய்யப்பட்டு, பார்ப்பனரல்லாதார் அறிக்கை வெளியிடப்பட்ட, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள விக்டோரியா மகால், ரிப்பன் பில்டிங், திருவல்லிக்கேணியில் உள்ள சி.நடேசனார் இல்லம், திராவிடன் இல்லம் என்ற மாணவர் விடுதி, திராவிட லெனின் என்று தந்தை பெரியாரால் புகழப்பட்ட டி.எம்.நாயர் அவர்கள் வீர, தீர உரையாற்றிய எழும்பூர் ஸ்பர் டாங்க் சாலை மைதானம், பார்ப்பனரல்லாதார் அறிக்கைக்குக் கரு தந்த கூட்டம் நடைபெற்ற அன்றைய ராஜு சிராமணி தோட்டம் (இன்றைய சிட்டி சென்டர் வணிக வளாகம்) உள்ளிட்ட இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டு வரலாறு பகிர்ந்து கொள்ளப்பட்டது.
இத்தகைய ‘நடைகள்’ மூலம் சென்னை மாநகரின் வளர்ச்சியில் நூறாண்டுகளுக்கும் மேலாக நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிடர் இயக்கத்தின் பங்கு பற்றி, பல்வேறு கோணங்களில் விரிவாக விளக்கி அது விடுதலை நாளேட்டில் பதிவும் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கென தனியாக இணையதளப் பக்கமும் தொடங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைப்பயணம் என்பது குறிப்பாக திராவிடர் இயக்கத்தின் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள், சென்னை நாள், நீதிக்கட்சியின் தொடக்கநாள் போன்றவற்றின் போது நடைபெறும். அந்தத் தலைவர்கள் வீடுகள், அவர்களின் நினைவுச் சின்னங்கள், போராட்டம் நடைபெற்ற இடங்கள், போராட்டங்களுக்கு காரணமான இடங்கள், இயக்கத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்ற இடங்கள், ஏடுகள் நடத்தப்பட்ட இடங்கள் ஆகியவற்றை நேரில் கண்டு அதன் சிறப்புகளைக் குறித்து கலந்துரையாடல் நடத்துவது வழமை.
சென்னையைத் தவிர திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள குடியம் குகைகள், மதுரை கீழடி, சமணர் குகைகள் போன்றவற்றிலும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் சுற்றுலாப் பயணங்களும் நடத்தப்பட்டுள்ளன. படிப்பதைவிட, படித்துச் சொல்வதைக் கேட்பதை விட, அந்தந்த வரலாற்றுக் குறிப்புகளுக்கான இடங்களின் முன் நின்று படித்த வரலாற்றை நேரில் பார்க்கின்ற வாய்ப்பை உருவாக்கி, அதை அசை போடுவது என்பது ஓர் அலாதியான பெருமித சுகமாகும்.
இந்நிகழ்வுகளில் பெரும்பாலும் வெளியுலகில் அரசியல், சமூக நிகழ்வுகளில் பங்கேற்காமல் இருக்கின்ற நீதிக்கட்சியின் வாரிசுகள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், கருத்தாளர்கள், வரலாற்றாளர்கள், பானகல் அரசரின் பெயரன் உள்ளிட்ட திராவிடர் இயக்கத்தின் பாரம்பரியமான தோழர்கள் கலந்து கொண்டதுண்டு. இது இனநலன், மொழி நலன் ஆகியவற்றை பட்டை தீட்டுவதுடன் உடல் நலனையும் பேணுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடைப்பயணங்களின் திட்டமிடல், நெறியாள்கை; ஒருங்கிணைப்புப் போன்ற பணிகளில் ஊடகவியலாளர் கோவி.லெனின், திராவிடர் கழகத்தின் துணைப் பொதுசெயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் ஊடகவியலாளர் உடுமலை வடிவேல் ஆகியோர் மேற்கொள்கின்றனர்.
வெவ்வேறு கோணங்களில் நீதிக்கட்சி, திராவிட இயக்க வரலாற்றைப் பயிலும் இந்தப் பயணம் தொடர வேண்டும். நம் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அலுப்புத் தட்டாமல் நம் வரலாற்றைக் கற்கும் வாய்ப்புத் தர வேண்டும்.
