திருச்சி. நவ. 19- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா 14.11.2025 அன்று காலை 10.00 மணிக்கு, பள்ளி வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கத்தில், மாணவர்களின் உற்சாகக் குரலோடு இனிமையாக நடைபெற்றது.
சமுதாயத்தின் வளமான எதிர் காலத்தை வடிவமைக்கக் கூடிய சிறிய விதைகள் எண்ணச் சிந்தனைகளில் வளர்ந்து வரும் காலத்தில், குழந்தைகள் தின விழாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்வாக இந்நிகழ்வு அமைந்தது.
முதல்வர் முனைவர் க. வனிதா தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். “குழந்தைகளின் கனவுகள் இந்தியாவின் நாளைய சக்தி. அவர்களின் மகிழ்ச்சியே உலகின் மிகப் பெரிய செல்வம்” என்று கூறிய அவர், மாணவர்களை ஊக்க மூட்டும் எண்ணச் விதைகளைப் பரிமாறினார்.
வரவேற்புரையில் முதுகலை கணித ஆசிரியர் அமல பிரகாஷ், குழந்தைகள் மீது கொண்ட அன்பையும், கல்வி மீதான உறுதியையும் தனது சொற்களில் கலந்து அனைவரின் மனதிலும் அன்பான வரவேற்பை விதைத்தார்.
ஆசிரியர்களின் கலை நிகழ்ச்சிகள் மாணவர்களுக்கு விருந்தாக அமைந்தன. மேடையைத் திளைக்க வைத்த துள்ளலான நடனங்கள், சமூகப் பொறுப்பை உணர்த்தும் நாடகங்கள், இனிமை கலந்து மனத்தை கவர்ந்த குழுப் பாடல்கள், சிறார் மனதைத் தூண்டும் கதைகள் மற்றும் கவிதைகள், சிந்தனைப் பட்டிமன்றம் ஆகியவை முழு நிகழ்ச்சியையும் களைகட்டச் செய்தன. ஒவ்வொரு நிகழ்ச்சியும் மேடையில் கலாச்சாரத்தின் வண்ணங்களைச் சிதறடித்து, கலைக்கு விருந்தாகவும், அறிவுக்கு ஊட்டமளிக்கும் அமுதாகவும் இருந்தது.
மாணவர்களின் கைத்தட்டலோசை, விழா முழுவதும் ஓயாது ஒலித்து, ஆசிரி யர்களின் அர்ப்பணிப்புக்கு கிடைத்த மிகச் சிறந்த பாராட்டாக அமைந்தது. குழந்தைகளின் இன்பக் குரல் பள்ளி வளாகத்தை விழாக்கோலமாக மாற்றியது.
நன்றியுரையை வழங்கிய முதுகலை வேதியியல் ஆசிரியர் ஏ.நிர்மலா, அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். நாட்டுப்பண் இசையின் இனிமையோடு விழா அழகிய தருணங்களோடு இனிதே நிறைவடைந்தது.
இந்த விழாவை அக்கறையுடனும், அர்ப்பணிப்புடனும் திட்டமிட்டுச் சிறப்பாக நடத்த உதவிய குழந்தைகள் தின விழா ஒருங்கிணைப்பாளர் மற்றும் பள்ளியின் நடன ஆசிரியர் ஜே.பிரான்ஸிட்டா மேரி, முதுகலை கணித ஆசிரியர் அ.அமலபிரகாஷ், அலுவலகப் பணித் தோழர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரின் சிறப்பான பணி பாராட்டத்தக்கதாக அமைந்தது.
கல்வி, ஒழுக்கம், கலை, கலாச்சாரம் அனைத்தும் இணைந்து மாணவர்கள் மகிழ்ச்சி பொங்கும் மேடையில் மலர்ந்த இந்த குழந்தைகள் தின விழா, பெரியார் பள்ளியின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு முத்திரை பதித்த நிகழ்வாக அமைந்தது. மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் எதிர்நோக்கக்கூடிய சிறப்பு நாளாக இது மீண்டும் மீண்டும் நினைவில் நிற்கும்.
