சென்னை, நவ.19– தமிழ்நாடு முழுவதும் 42 ஆயிரம் வருவாய்த்துறை ஊழியர்கள் புறக்கணித்ததால் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி பாதிக்கப்பட்டது.
பணி புறக்கணிப்பு
தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.அய்.ஆர்.) நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 77 ஆயிரம் அரசுப் பணியாளர்களை பி.எல்.ஓ.க்களாக (வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்) நியமித்துள்ளது. இந்த எஸ்.அய்.ஆர். பணியில் பல்வேறு பிரச்சினைகளை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சந்தித்து வரும் சூழலில் வருவாய்த்துறை ஊழியர்கள் நேற்று (18.11.2025) முதல் இந்த பணியை புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால் இந்த பணி பாதிக்கப்பட்டுள்ளது.
கால அவகாசம்
இதுகுறித்து, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் முருகையன் கூறியதாவது:-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும். அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணிகளை முழுமையாக பிழைகள் இன்றி மேற்கொள்ள கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் நிலைகளில் போதிய தன்னார் வலர்கள் மற்றும் அரசுப் பணி யாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும்.
புறக்கணிப்பு
மாவட்ட ஆட்சியர்கள் “ஆய்வு கூட்டம்” என்ற பெயரில் நள்ளிரவு வரை கூட்டங்கள் நடத்துவதையும், அன்றாடம் காணொலி வாயிலாக 3 கூட்டங்கள் நடத்தி துன்புறுத்துவதை உடனடியாக கைவிட வேண்டும். அரசு விடுமுறை நாட்களில் இப்பணிகளை மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்வதை முற்றாக தவிர்த்திட வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறையில் இருந்து 42 ஆயிரம் ஊழியர்கள் எஸ்.அய்.ஆர். பணியை புறக்கணித்து உள்ளோம். இரவு பகலாக நேரம் தாழ்த்தி பெண்கள் உள்பட அனைவரும் வேலை பார்ப்பதால் மன அழுத்தத்திற்குள் செல்கிறோம். எனவே, கடுமையான இப்பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர், கண்காணிப்பாளர் மற்றும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும். கூடுதலான பணிப்பளுவை கருத்தில் கொண்டு ஒருமாதகால ஊதியத்தை “மதிப்பூதியமாக” வழங்க வேண்டும்.
தமிழ்நாடு தலைமைத்தேர்தல் ஆணையர் மற்றும் இந்திய தேர்தல் ஆணையம் இதில் உடனடியாக தலையிட்டு, சுமுகமான சூழலை ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
