சென்னை, நவ.18- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே 7 ஆண்டுகளுக்கு முன்பு தாய் உயிரிழந்த நிலையில், கல்லீரல் பாதிப்பால் தந்தையும் சமீபத்தில் உயிரிழந்த நிலையில், அரசின் உதவியை எதிர்நோக்கிய 4 குழந்தைகளை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட் டுள்ளார்.
சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி கமலக்கண்ணன் (வயது 46) சிறுநீராக நோயால் பாதிக்கப்பட்ட அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது.
பொறியியல் படித்து வந்த அவரது மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதேபோல் 8 ஆம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். அபினேஷ் மட்டும் பூட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 14 ஆம் தேதி காலமானார். அவர் மனைவி வசந்தா 7 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் கமலக்கண்ணன் உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். கிராம மக்களே கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங் களாகவே முன்வந்தார்கள். இதையடுத்து கிராம மக்களே வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனா்.
அரசு குழந்தைகள்
இதுகுறித்து செய்தி அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தாய் தந்தையை இழந்த 4 குழந்தைகளை கைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி ஆறுதல் கூறினார். அனைவரையும் படிக்க வைத்துவிடுவோம் என உறுதி அளித்தார். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்குத் தேவையான உதவிகள் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள்! அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும்! இந்தச் செய்தியை படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.
நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ.வேலு அவர்களும் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன் னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும்!” எனத் தெரி வித்துள்ளார்.
