சென்னை, நவ, 17- திமுக பொதுச்செயலாளர் வைகோ, திருச்சியில் இருந்து மதுரைக்கு (ஜன.2 முதல் 12 வரை) ‘சமத்துவ நடைப்பயணம்’ மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.
நடைப்பயணம்
இந்த நிலையில், திருநெல்வேலி மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் இருந்து இந்தப் பயணத்தில் பங்கேற்க உள்ள தொண்டர்களிடம் வைகோ நேர்காணல் நடத்தினார். தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் இந்த நேர்காணல் நடைபெற்றது. ‘‘உங்களுக்கு புகை பிடித்தல், மது அருந்துதல், போதைப் பொருட்கள் பழக்கம் உள்ளதா? 10 நாட்கள் தொடர்ந்து நடப்பீர்களா? காலில் கொப்புளம் வந்தால் தாங்கிக்கொள்வீர்களா? நீங்கள் நடைப்பயணம் மேற்கொள்ள அப்பா-அம்மா ஒப்புதல் தருவார்களா?’’ எனப் பல கேள்விகளைக் கேட்டு, தொண்டர்களை வைகோ தேர்வு செய்தார்.
தி.மு.க. கூட்டணியில் உறுதி
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திராவிட இயக்கத்தை அழித்துவிடலாம் என ஸநாதன சக்திகளும், ஆர்எஸ்எஸ், இந்துத்துவாவும் முயற்சி செய்கின்றன. திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற கடமை என் கண் முன்னால் நிற்பதாலும், 61 ஆண்டுகள் திராவிட இயக்கத்தில் பாடுபட்டிருப்பதாலும், திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பது ஒன்றுதான் வாழ்நாள் கடமை என 9 ஆண்டுகளுக்கு முன்பு முடிவு எடுத்து திமுகவுடன் கூட்டணி அமைத்தோம். அதில் உறுதியாக இருக்கிறோம்.
தமிழ்நாடு அரசியலில் புதிது புதிதாக சலசலப்புகள் ஏற்படுகின்றன. புதிதாக ஒருவர் வந்துள்ளார். கூட்டத்தைக் கூட்டி, 41 பேர் மடிந்த பிறகு கொஞ்சமும் பொறுப்பு, குற்ற உணர்வின்றி சென்னைக்கு ஓடிவிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களைத் தனது இருப்பிடத்துக்கு அழைத்து அனுதாபம் தெரிவித்த சம்பவம் தமிழ்நாடு வரலாற்றிலேயே இல்லாதது. ஊருக்குள் ஒரு கி.மீ. தூரம் நடந்துவிட்டு, அடுத்த ஊருக்கு காரில் சென்று நடைப்பயணம் மேற்கொள்ளும் பித்தலாட்ட நடைப்பயணத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. முழுமையாக நடைப்பயணம் மேற்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
