ஈரான், நவ. 17- ஈரானில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், செயற்கை மழைப் பொழிவை ஏற்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல அணைகளின் கொள்ளளவு ஒற்றை இலக்கத்திற்கு சென்றுள்ளன. இதே நிலை நீடித்தால் வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என அங்குள்ள மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
- கைதிகள் பரிமாற்றம் குறித்து மீண்டும் ரஷ்யாவுடன் பேச்சு
- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
- பிலிப்பைன்சின் கூட்டு கடற்படைப் பயிற்சி எதிரொலி
- தென் சீனா கடலில் சீன ராணுவ விமானங்கள் சுற்று
- ஆயுள் தண்டனை பெற்ற செவிலியருக்கு ஆதரவாக இங்கிலாந்தில் 200 செவிலியர்கள் போர்க்கொடி குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்
- காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கைதிகள் பரிமாற்றம் குறித்து
மீண்டும் ரஷ்யாவுடன் பேச்சு
மீண்டும் ரஷ்யாவுடன் பேச்சு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தகவல்
கீவ், நவ. 17- கைதிகளை பரிமாற்றம் செய்து கொள்ள ரஷ்யாவுடன் பேச்சு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் இடையே தலா 1000 கைதிகளை பரிமாற கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஆனது. இரண்டாம் கட்டமாக மிகவும் நோய் வாய்ப்பட்ட,காயமடைந்த கைதிகளை இரு நாடுகளும் பரிமாறினர். இரண்டாம் கட்டத்துக்கு பின் இது முடிவடைந்தது.
உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் ருஸ்தம் உமரோவ் 15.11.2025 அன்று கூறுகையில், ‘‘ரஷ்யாவுடன் கைதிகளை பரிமாறுவது தொடர்பாக, மத்தியஸ்தம் செய்யும் துருக்கி மற்றும் அய்க்கிய அரபு எமிரேட் நாடுகளுடன் ஆலோசனை தொடங்கியுள்ளது’’ என்றார். இந்த நிலையில்,ரஷ்யாவில் உள்ள 1,200 உக்ரைன் கைதிகளை பரிமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்தார். ஆனால் இந்த தகவல் பற்றி ரஷ்யா கருத்து ெதரிவிக்கவில்லை.
பிலிப்பைன்சின் கூட்டு கடற்படைப் பயிற்சி எதிரொலி
தென் சீனா கடலில் சீன ராணுவ விமானங்கள் சுற்று
பீஜிங், நவ. 17- பிலிப்பைன்ஸ், அமெரிக்கா,ஜப்பான் நாடுகளுடன் சேர்ந்து கூட்டு கடற்படைப் பயிற்சியை மேற்கொண்டதற்கு எதிராக தென் சீன கடலில் சீன குண்டு வீச்சு விமானங்கள் தீவிரச் சுற்று கண்காணிப்பை மேற்கொண்டன. தென் சீனக் கடலின் 90% பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது. பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, தைவான் மற்றும் புருனே நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸ் கடற்படை அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் கூட்டு சேர்ந்து இரண்டு நாள் கூட்டு கடற்படைப் பயிற்சியை நடத்தியது. ஜப்பான், அமெரிக்க நாடுகளும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டன. 15.11.2025 அன்று இந்த பயிற்சி நடந்த நிலையில் சீன ராணுவத்தின் குண்டு வீச்சு விமானங்கள் சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில், நேற்று தீவிர கண்காணிப்பு சுற்றுப் பணியை மேற்கொண்டன.
சீன ராணுவத்தின் தெற்கு கட்டளைப் பிரிவின் செய்தி தொடர்பாளர் டியான் ஜூன்லி வெளியிட்ட அறிக்கையில், அந்த நாடுகளின் நடவடிக்கை தென் சீனக் கடலில் சீனாவின் இறையாண்மைக்கு விடுத்த நேரடி சவாலாகும். வெளிநாட்டு ராணுவ நடவடிக்கைகளை தடுப்பதற்கும், அதன் மண்டல உரிமை கோரல்களை வலுப்படுத்துவதற்கும் சீனாவின் பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக சுற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது போன்ற செயல்பாடுகளை மேற்கொண்டு, பதற்றங்களை உருவாக்குவதை பிலிப்பைன்ஸ் நிறுத்த வேண்டும் என்று எச்சரிக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்ற செவிலியருக்கு ஆதரவாக இங்கிலாந்தில் 200 செவிலியர்கள் போர்க்கொடி குழந்தைகள் கொலை வழக்கில் திருப்பம்
லண்டன், நவ. 17- தொடர் குழந்தைக் கொலையாளி எனத் தண்டிக்கப்பட்ட செவிலியர் லூசி லெட்பியின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சக செவிலியர்களே போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இங்கிலாந்தில், மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளைக் கொன்றதாக செவிலியர் லூசி லெட்பி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பு உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கொலைகள் நடந்த மருத்துவமனையின் தோல்விகளை ஆராய, தனியாக ஒரு பொது விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், லெட்பியின் வழக்குரைஞர் குழு, சில இறப்புகள் இயற்கையான காரணங்களால் அல்லது மோசமான சிகிச்சையால் நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறி புதிய ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில், இந்த வழக்கு தற்போது ‘குற்றவியல் வழக்குகள் மறுஆய்வு ஆணையத்தின்’ பரிசீலனையில் உள்ளது. இந்நிலையில், லூசி லெட்பிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு பாதுகாப்பற்றது என்றும், அது தங்களுக்குப் பெரும் கவலையை அளிப்பதாகவும் கூறி சுமார் 200 செவிலியர்கள் இந்த வழக்கில் சுயாதீன மறுஆய்வுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மருத்துவர்கள், ஆலோசகர்கள் உட்பட 400க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களைக் கொண்ட ஒரு குழுவின் அங்கமாக இவர்கள் உள்ளனர்..
காங்கோ சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் 32 பேர் பலி; மீட்பு பணிகள் தீவிரம்
கின்ஷாஷா, நவ. 17- காங்கோவில் சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 32 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோவில், செப்பு சுரங்கம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த சுரங்கத்தில் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென சுரங்கத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு, மீட்பு படையினர் விரைந்தனர்.
நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர். இந்த சம்பவத்தில் தொழிலாளர்கள் 32 பேர் உயிரிழந்தனர். லுவாலாபா மாகாண உள்துறை அமைச்சர் ராய் கௌம்பா உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் 20 பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
