‘அன்கிடோனியா’ என்ற ஒரு வகை மன அழுத்தம் – அறிவீர்களா? (1)

2 Min Read

சிங்கப்பூர் நாட்டிற்குச் செல்கின்ற போது,  அங்கு வெளிவரும் ‘தமிழ்முரசு’ தமிழர் நாளேடு;   ‘The Straits Times’ ஆங்கில நாளேடு ஆகியவற்றை தவறாமல் படிப்பேன்.

ஆங்கில நாளேட்டில் பல்வேறு பகுதிகள் வாழ்வியலைத் தொட்டு, அறிய வேண்டிய கட்டுரைகள், செய்திக் கதம்பங்கள் படிப்பதற்கு மிகவும் சுவையானதாகவும், அறிய வேண்டிய புதிய தகவல்களாகவும் அவை இருப்பதுண்டு. அண்மையில் சென்றிருந்தபோதும் வழக்கம் போல் படித்தேன்.

‘‘‘நீங்கள் மகிழ்ச்சியுடன் தொடர்ந்து இருக்க முடியவில்லையா?’

அப்படியானால் உங்களுக்கு ‘அன்கிடோனியா’ (‘Anhedonia’)  என்ற ஒரு வகை மன அழுத்தம் ஏற்பட்டிருக்கக் கூடும்’’ என்ற ஒரு செய்திக் கட்டுரையைப் படித்தேன்.

அந்த சொல்லையும், தகவலையும் நான் இப்போதுதான் முதல் முறையாகப் படிக்கிறேன்! மற்றவர்களும், மருத்துவர்களும் அறிந்திருக்கலாம்.

மன அழுத்தங்கள் – கவலைகள், மகிழ்ச்சியற்ற நிலைகள்பற்றிய பல்வேறு விளக்கங்களை இதற்கு முன்னால் படித்தும், கேட்டும் இருந்தாலும் – நம்மைப் பொறுத்தவரை அன்கிடோனியா – ‘Anhedonia’  ஒரு புது அறிமுகமாகவே (கருத்து) அமைந்துள்ளது! நமது வாசகர்களுக்கும், அந்த உளவியல் – மன அழுத்தங்கள் பற்றிய ஆவலாதி செய்திகளை அறிந்து கொள்ளுவதற்கு ஆர்வம் காட்டுவோருக்கும் இத்தகவல் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

இது (‘Anhedonia’)  ஒரு நோய் அறிகுறி அல்ல; மாறாக இது   மன நலக்குறைவின் அறிகுறிகளில் ஒன்று. அவ்வளவு தான்!

‘இது அமைதியான, ஆர்ப்பரிப்பு!’

‘அச்சப்பட்டு அவலம் ஏற்பட்டு விட்டதே’ என்று கவலையின் உச்சத்திற்குச் செல்லும் நிலையை ஏற்படுத்திடும் மன நோய் அல்ல!

‘அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டு அந்த சுமையின் பாரமே இது’ என்றும்கூட கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள்!

ஸ்கீசோபிரனியா (Schizophrenia) போன்ற ஒருவிதமான மன நலக் குறைவின் வெளிப்பாடுதான் இந்த ‘அன்கிடோனியா’ என்பது.

இது பெரும் ஆபத்தானதும், நெருக்கடியானதும் அல்ல; மாறாக ஒரு வகை நடப்பு நிலை அவ்வளவு தான். (மேலும் மாற்ற முடியும் – நாம் முயன்றால்)

‘உற்சாகக் குறைவு’ (‘Lack of motivation’) –  எதைச் செய்தாலும் இந்நிலை இயல்பாகவே ஏற்படும். ‘முன்பு அவருக்கு மிகச் சுவையாக இருந்த உணவு இப்போது சலிப்பாகவும், ‘சங்கடமாகவும்’, ஈர்ப்பற்ற ஒன்றாகத் தோன்றும்’ என்பது ஓர் உதாரண விளக்கம்.

சிலருக்குக் காலையில் எழுந்து கடமையாற்று வதற்கேகூட விருப்பமற்ற – ஒருவகை அலட்சிய மனப்போக்கு ஏற்படுவது, இதன் தாக்கமாகும்!

பல முக்கிய நண்பர்கள், ஏற்கெனவே பழகியவர்களிடம்கூட பழகாமல், தன்னைத்தானே ஒதுக்கிக் கொள்ளும் ஒரு வகை மனப்போக்கு இந்த ‘அன்கிமேனியா’ மூலம் ஏற்படக் கூடும்!

மறுத்துப் போன ஓர் உணர்வே அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டிருக்கக் கூடும்! எதிலும் விருப்பம் அற்றவர்களாக நடமாடும் சோற்றாலடித்த பிண்டம்போல அவர்கள் (சிற்சில வேளைகளில்) நடந்து கொள்ளக் கூடும்!

  1. நம்முடைய ‘மனநிலை’யை (Mood) – அது பாதிக்கக்கூடும்.
  2. தூக்கத்தையும் கெடுக்கும்; தடுக்கும்.
  3. சாப்பாடு – சத்தான உணவைக்கூட விரும்பாமை.

இது வாழ்வின் உறவு முறையைக்கூட விரும்பாமல், ஏதோ ஒரு வகை அலட்சியத்துடன் நடந்து கொள்ளும் ஓர் உளப் போக்கு இதன் விளைவாக ஆகிவிடும்.

மற்ற அரிய தகவல்கள்பற்றி நாளை பார்ப்போமா?

(வரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *