வைக்கம் 100ஆவது ஆண்டின் வெற்றிப் பயணம்

வைக்கம் போராட்டம் 1925 நவம்பர் 17 – கோவில் சுற்றுப்புறங்களில் சமத்துவத்தின் வெற்றி நாள்.

இந்திய சமூகநீதிப் போராட்ட வரலாற்றில், ஜாதி ஒடுக்குமுறைக்கு எதிரான முதல் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டமாக வைக்கம் போராட்டம் புகழ் பெற்றது.  வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியாரின் பங்கேற்பு இந்திய அளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது

19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் ஜாதி அடுக்குமுறை உச்சத்தில் இருந்தது.  ஒடுக்கப்பட்டோர், தீயர், ஈழவர், புலையர் எனப்பட்டோர் வைக்கம் கோவிலில் சுற்றுப்புற வீதிகளில்கூட நடக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. வைக்கம் மகாதேவர் கோவில் வீதிகள் பொதுச் சாலைகளாக இருந்தபோதிலும், ஜாதி விதிகள் அவற்றை கட்டுப்படுத்தின.

(1924 மார்ச் 30) குஞ்சலி, கோவிந்தன், பகத் சிங் (பஞ்சாபைச் சேர்ந்தவர்) ஆகிய மூன்று சத்தியாகிரகிகள் கோவில் கிழக்கு வாசல் வீதியில் நுழைந்தனர். உடனடி யாக கைது செய்யப்பட்டனர். இது போராட்டத்தின் தொடக்க மாக அமைந்தது. தினசரி ஊர்வலங்கள், தர்ணாக்கள் நடத்தப்பட்டன.

காங்கிரஸ் கட்சியின் கேரள பிரிவு, கே.பி.கேசவ மேனன், டி.கே.மாதவன் போன்ற தலைவர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். 1924 பிப்ரவரியில் கொச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

பின்னர் வழக்குரைஞர் மாதவர் என்பவர் வைக்கம் தெருவில் நடக்க தடுக்கப்பட்டதால் போராட்டம் தொடங்கியது. முக்கிய தலைவர்களின் கைதால் தோல்வியில் முடிந்துபோகுமோ என்ற நிலையில் தந்தை பெரியாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு அவரும்  1924 ஏப்ரல் மாதம் போராட்டக்களத்தில் இறங்கினார்.

அவர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக கடுங்காவல் சிறைத் தண்டனையும் பெற்றார் இருப்பினும் சோர்வுறாமல் களத்தில் நின்று போராடினார்.

1925 நவம்பர் 17: வெற்றியின் நாள்.

இறுதியாக, 1925 நவம்பர் 17 அன்று, திருவிதாங்கூர் மகாராணியின் உத்தரவுப்படி, வைக்கம் மகாதேவர் கோவிலின் நான்கு சுற்றுப்புற வீதிகளும் அனைத்து தரப்பு மக்களுக்கும் திறக்கப்பட்டன. காலை 10 மணிக்கு, காவல்துறை அதிகாரி வி.வி.எஸ்.அய்யர் தடுப்புப் பலகை களை அகற்றினார். போராட்டக்காரர்கள் உள்ளூர் மக்கள் ஊர்வலமாக வீதிகளில் நடந்தனர். இது சமத்துவத்தின் அடையாளமாகவும், ஜாதித் தடைகளின் முடிவாகவும் கொண்டாடப்பட்டது.

இந்தவெற்றி கேரளாவில் கோவில் நுழைவுப் போராட்டங்களுக்கு வித்திட்டது. 1936இல் திருவிதாங்கூர் கோவில் நுழைவுப் பிரகடனம் வெளியானது.

தந்தை பெரியார் நடத்திய இந்தப் போராட்டம் தேசிய அளவில் அம்பேத்கரின் ‘மகத குள ’ போராட்டத்திற்கு உத்வேகம் அளித்தது.

1925 நவம்பர் 17, வெறும் தேதி அல்ல – சமத்துவத்தின் வெற்றி, ஜாதி ஒழிப்பின் தொடக்கம். வைக்கம் போராட்டம் இந்தியாவின் சமூக மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டது.  “எல்லோரும் சமம்” என்பதை வைக்கம்  நனவாக்கியது. இது  சமூக நீதி வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படவேண்டிய நாளாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *